வாராந்த சிந்தனைத்துளிகள்

நாம் எவ்வளவு அக்கறையுடன் எதிர் காலத்தை எதிர் நோக்குகிறோமோ அவ்வளவு காலம் சமுதாயம் நிலைத்திருக்கும்.

01. உலகம் சிந்திய இரத்தமும் துயரமும்தான் மாபெரும் மலர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. இனித்தான் விஞ்ஞானமும், மருத்துவமும் மாபெரும் சாதனைகளை நிகழ்த்தப்போகின்றன. அழிவு சாதனங்களையும், அழிவு சக்திகளையும் உலகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மாபெரும்
முன்னேற்றங்களை தொடப்போகிறோம். ஒவ்வொரு மனிதனும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டிய சரியான காலம் இதுதான்.
02. இருபதாம் நூற்றாண்டுதான் உலக சரித்திரத்திலேயே இரத்தக்கறை அதிகம் படிந்த நூற்றாண்டாகும். ஆனால் அந்த நூற்றாண்டில்தான் மனிதன் அதற்கு முன்னர் எந்த நூற்றாண்டிலுமே செய்யாத சாதனைகளை படைத்தான்.
03. பொருளாதார தளம்பல், போர்க் குற்றங்கள் நிறைந்த இன்றைய நிச்சயமற்ற காலகட்டத்திலும், நாம் அறிந்திராத மேலான சமுதாயம் நமக்காக, உலகத்திற்காக காத்திருக்கிறது என்று நாம் நம்புவோம். நம்பிக்கையின் செழுமை இன்னும் மாறவில்லை. நமக்கு முன்பிருந்தவர்கள் அவர்களுடைய காலத்தில் வைத்திருந்த நம்பிக்கையை நாம் நம் காலத்திலும் வைத்தால் உங்களாலும், என்னாலும் புன்னகையோடு, நம்பிக்கையோடு எதிர் காலத்தை எதிர் கொள்ள முடியும். – பிராங்கிளின். டீ. ரூஸ்வெல்ற்
04. மனித இனம் தானே உருவாக்கிய சக்திகளால் தள்ளப்பட்டு இறுதியில் அழிக்கப்பட, முதுகெலும்பற்ற, மூளையற்ற இனமல்ல. அணுகுண்டை சில நாடுகள் வைத்திருந்தாலும் மனித குலம் சொந்த தலையெழுத்தை தீர்மானிக்கும் இனமாகவே இருக்கிறது.
05. கூட்டுப்புழு இறக்கை முளைப்பதை பார்த்திருக்காவிட்டாலும் நம்பிக்கையுடன் கூட்டைக் கட்டுகிறது. அதுபோல மனிதன் தான் புரிந்து கொள்ளாத இந்த பிரபஞ்ச விதிகளுக்குக் கட்டுப்பட்டு நம்பிக்கையுடன் நடக்க வேண்டும். போர் புரியும் இனங்கள் அழிந்த பூமியைத் தாண்டி அமைதியை காணும் என்ற நம்பிக்கையுடன் வாழ வேண்டும்.
06. இன்று முதல் நமது சிந்தனை வெறுமனே நமக்கு மட்டும் என்ற குறுகிய அளவில் இருக்கக் கூடாது, அது உலகளாவியதாக இருக்க வேண்டும். ஏனென்றால் இனியாவது வன்முறையற்ற உலகை நாம் நிறுவ வேண்டும். – உலக சமாதான நிபுணர் வென்டல்வில்கி
07. உலகின் எல்லாப் பகுதியிலும் அமைதியின் அடிப்படைகள் பாதுகாக்கப்படாவிட்டால் உலகின் எந்தப் பாகத்திலும் அமைதி இருக்காது.
08. கடந்த 1942ம் ஆண்டு உலகம் முழுவதும் சமாதானத்திற்காக பறந்த அமெரிக்கரான வென்டல்வில்கி தனது அனுபவங்களைக் கொண்டு எழுதிய ஒன்றே உலகம் என்ற நூலில் உள்ள உன்னத வாசகங்கள் :
உலகில் இனி வெகு தூரம் என்பதே கிடையாது. தூர கிழக்கு நாடுகளில் இலட்சக்கணக்கான மக்கள், லாஸ் ஏஞ்செலில் இருந்து நியூயோர்க் வரை போகும் வேகமான ரயில்களில் நெருங்கி இருப்பதைப் போலவே நமக்கு நெருக்கமாக இருப்பதை என் அனுபவங்களால் உணர்ந்து கொண்டேன். எதிர்காலத்தில் அவர்களுக்கு முக்கியமானது நமக்கும் முக்கியமானது. கலிபோர்ணியாவின் மக்கள் பிரச்சனைகள் நியூயோர்க் மக்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோலவே முக்கியமானது என்ற முடிவுக்கு வந்தேன். ஆம்.. எதிர்காலம் நமது சிந்தனைகள் உலகளாவியதாக இருக்க வேண்டும்.
09. எங்கும் உள்ள எல்லா மனிதர்களும் சுதந்திரமாக, பாதுகாப்பாக, அமைதியாக வாழ்வதே ஒரே உலகம் என்ற உன்னத சமுதாயத்திற்கு அடிப்படையாகும். உலகம் முழுவதும் உள்ள ஆண்களும், பெண்களும் ஒற்றுமையாகவும், சுதந்திரமாகவும் வாழவும், வளரவும் நமக்குள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும்.
10. நான் ஏதன்ஸ் அல்லது கிறீசின் குடிமகனல்ல, உலகத்தின் குடிமகன் – நஞ்சருந்த முன் சாக்கிரட்டீஸ் கூறியது.
11. சுதந்திரத்தை நேசிக்க மட்டும் கடவுள் நமக்குக் கற்றுத்தரவில்லை. ஒரு மனிதனின் உரிமைகளைப் பற்றிய தெளிவான அறிவு உலகின் எல்லா நாடுகளுக்கும் செல்ல வேண்டும். அப்போதுதான் ஒரு தத்துவஞானி பூமியின் எப்பாகத்திலும் தன் கால்களை வைத்து இது என் நாடு என்று சொல்ல முடியும். – பெஞ்சமின் பிராங்கிளின்
12. அமெரிக்கர்கள் பேசுவதற்கு இலகுவான உள்ளுர் சிந்தனையை விட்டுவிட்டு உலகளாவிய ரீதியில் சிந்திக்க வேண்டும். இப்படி சிந்திப்பது அவர்களுக்குக் கடினமாக இருக்கலாம். அமெரிக்காவின் சுதந்திரத்தை பாதுகாப்பதானால் உலக மக்களின் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் உண்டு. அதற்கு அமெரிக்கனுடைய சிந்தனை உலகளாவியதாக வேண்டும். – ஹேரி ஏ. ஓவர்ஸ்ட்ரிட்
13. ஒரு நாள் வரும் அன்று… வெற்றி பெற்ற நாடுகள் பல அறைகள் கொண்ட வீடுகளை நீதியோடும், சுதந்திரத்தோடும் திட்டமிட்டுக்கட்டும். அதில் அனைவருக்கும் இடம் இருக்கும்.
14. மனித சுதந்திரத்திற்கு நான்கு முக்கிய விடயங்கள் அடிப்படையானவை :
முதலாவது : உலகம் முழுவதும் பேச்சுக்கும், எழுத்துக்கும் சுதந்திரம்.
இரண்டாவது : உலகம் முழுவதும் ஒவ்வொரு மனிதனும் தனக்கே உரிய விதத்தில் கடவுளை வணங்கும் சுதந்திரம்.
மூன்றாவது : தேவைகளுக்கான சுதந்திரம், ஒவ்வொரு நாடும் தமது மக்களுக்கு ஆரோக்கியமான சமாதான காலத்தை வழங்குவது.
நான்காவது : பயத்தில் இருந்து விடுதலை. எந்த நாடும் உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் ஆயுத வன்முறையை செலுத்தாமல் இருக்க வேண்டும்.
– பிராங்கிளின். டீ. ரூஸ்வெல்ற்
15. ஒரு பெரிய கரு மேகம்போல பெரும் குழப்பம் நம் தலைமேலே நிற்கிறது. நாம் எடுக்கும் ஒவ்வொரு அடியையும் நாம் நம்ப மறுக்கிறோம். மனிதர்கள் செயற்பட விரும்பவில்லை என்று அர்த்தமில்லை, பயத்தாலும் குழப்பத்தாலும் பலர் முடங்கிப் போய் இருக்கிறார்கள். வேண்டாம் இந்த முடக்கம் , நாம் நம்பிக்கையுடன் சிந்திக்க வேண்டும்.
16. இப்போது நம்மைச் சூழ்ந்துள்ள பிரபலமான அதிருப்தியின் காரணத்தை தேடிக்கண்டுபிடிக்க வேண்டும். நம் பிரச்சனையை தைரியத்தோடும் நம்பிக்கையோடும் அணுக வேண்டும். நாம் எதிர்கால கண்ணோட்டத்தோடு இருக்க வேண்டும். மேலான உலகத்தை திட்டமிட்டு உருவாக்க வேண்டும். சகோதரத்துவம், புரிதலுக்கான பாதைகளை கண்டறிய வேண்டும்.
17. எந்தப் பிரச்சனை அல்லது அபாயத்தை எதிர்கொள்ள வேண்டி இருந்தாலும் சரி தைரியத்தோடு சிந்தியுங்கள். நம்பிக்கையோடு எதிர் பாருங்கள், மனித இனத்தின் எதிர்காலத்தில் நம்பிக்கையோடு, விசுவாசத்தோடு செயலாற்றுங்கள்.
18. போர்கள், அழிவுகள், வீழ்ச்சிகள் வழியே நாம் வாழ்ந்திருக்கிறோம். மாறும் சகாப்தங்கள், வாழும் சிந்திக்கும் முறைகள் மாறியதைக் கண்டிருக்கிறோம். ஆனால் நாம் மனம் தளர்ந்துவிடவில்லை. ஒளிவீசும் சன்னலால் வெளியே பார்ப்பதைப் போல இந்த வாழ்வை நம்பிக்கையுடன் பார்க்க வேண்டும். வாழ்வென்பது கவலை அல்ல அது முடிவற்ற முன்னேற்றமாகும்.
19. நாம் எவ்வளவு அக்கறையுடன் எதிர் காலத்தை எதிர் நோக்குகிறோமோ அவ்வளவு காலம் சமுதாயம் நிலைத்திருக்கும்.
20. இன வேற்றுமைகளும், குரோதங்களும் ஒவ்வொரு நூற்றாண்டையும் அச்சுறுத்துகிறது. இதை உணர்ந்து எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டிய நூற்றாண்டாக 21 ம் நூற்றாண்டு மலர்ந்துள்ளதை மனிதர்கள் புரிந்து நடக்க வேண்டும்.
21. வாழ்வை நேசிக்கும், எதிர் காலத்தின் மீது நம்பிக்கை வைக்கும் ஒருவர்தான் ஒரு நாட்டின் முதன்மைத் தானத்திற்கு வர முடியும். அடையாளம் தெரியாத முடிவாக இருந்தாலும் அதை நம்பிக்கையுடன் பின்பற்றுங்கள்.
22. இரண்டு பெரும் உலகப் போர்களை நடாத்திய பிறகுதான் மனிதன் உலக சமுதாயம் உருவாவதற்கான வழியை கண்டு பிடித்தான். உலக நாடுகள் அழிக்க அல்ல ஆக்க ஒன்றுபடும் நாள் மிக அண்மையில் தெரிகிறது, நம்பிக்கையுடன் இருங்கள்.
23. நாம் மனிதர்களைப் போல வாழ வேண்டும். ஆஸ்டிரிக் பறவையைப் போன்றோ, பட்டியில் இருக்கும் நாய்களைப் போன்றோ வாழக்கூடாது என்று அறிவுள்ள மனிதன் கண்டு கொண்டுள்ளான். மற்றவர்களும் அதை விரைவாக கண்டு கொள்ள வேண்டும்.
24. ஒரு நண்பனைப் பெற ஒரே வழி நண்பனாக இருப்பதுதான் – எமர்சன்
25. சந்தேகத்துடனோ அல்லது பயத்துடனோ அணுகினால் நீடித்த அமைதியை பெற முடியாது.
26. நாம் விஷ வாயு பயன்படுத்தத் தேவையில்லை, அணு குண்டு வீசத்தேவையில்லை. நம்மிடையே உள்ள சிறந்த அறிவுள்ளவர்கள் வழி நடாத்தினாலே போதும்.
27. வாழ்வை, சிரிப்பை, நம்பிக்கையை, தோழமையை வளர்ப்போம், நல்ல உணர்வை நேசிப்போம்.
28. அழிவையோ அல்லது கஷ்டத்தையோ தந்தாலும் இந்த விசித்திரமான சாகசமான வாழ்வை நாம் எதிர்கொண்டேயாக வேண்டும்.
29. கடவுளின் வடிவமாக மனிதன் வாழும் உரிமையை நாம் உறுதி செய்ய வேண்டும்.
30. நாம் நம்மிடம் தரப்பட்டுள்ள சக்திகளை அழிவுக்காக அன்றி ஆக்கத்திற்கு மட்டும் பயன்படுத்துவோம் என்று உறுதி பூண்டால் இன்னொரு உலகப்போர் வராது. அதற்கு ஒவ்வொரு நாட்டுக்கும் அறிவும், உறுதியும், தூரப்பார்வையும் கொண்ட தலைவர்கள் வேண்டும்.

Written by Thurai
Thanks

அலைகள் 

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv