திருகோணமலையில் தந்தை செல்வாவின் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது

 தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்காகப் பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் சாத்வீக வழியில் துணிச்சலுடன் போராடிய மாபெரும் தமிழ்த் தலைவர் தந்தை செல்வாவின் நினைவுச்சிலையின் தலைப்பகுதி காடையர் கும்பலொன்றால் கொய்யப்பட்டு அவரது காலடியில் போடப்பட்டது. அதற்கு மலர் மாலை இட்டு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

 
 
இலங்கையில் இனங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படவேண்டுமென உலக நாடுகள் வலியுறுத்திவரும் நிலையில், திருகோணமலையில் இரவோடிரவாக அரங்கேறிய இந்தக் காடைத்தனமான காட்டுமிராண்டித்தனமான சம்பவத்தால் தமிழ்மக்கள் அதிர்ச்சி அதிருப்தி ஆத்திரம் அடைந்துள்ளனர்.
 
திருகோணமலை நகரிலுள்ள சிவன் கோயிலுக்கருகில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் நினைவாலயத்திலேயே விஷமிகள் நேற்றுமுன்தினம் நள்ளிரவு இந்த வெறியாட்டத்தை ஆடியுள்ளனர்.
 
தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் தந்தை செல்வா நாயகத்தின் சிலையை தமிழீழ மக்கள் விடுதலை கழகச் செயலாளர் அமரர் உமா மகேஸ்வரனின் ஆறாவது நினைவு தினத்தன்று அவரது கட்சி திருமலை மாவட்டப் பொறுப்பாளர் ம.செல்லக் கிளி 1995.07.16ஆம் திகதி திறந்துவைத்தார்.
 
பல்லினச் சமூகமும் பரந்துவாழும் திருகோணமலையில் இவ்வாறான காட்டு மிராண்டித்தனமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதானது அங்கு வாழும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த தன்மானத் தமிழ்த் தலைவன் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்குத் தன்மானமற்ற காடையர்கள் புரிந்துள்ள கொடூரமானது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
தமிழர் தாயகப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்த் தலைவர்களின் உருவச்சிலைகள் காட்டுமிராண்டித்தனமாக உடைக்கப்பட்டுவரும் நிலையில் பல்லினச் சமூகமும் வாழும் இலங்கையில் எப்படி நல்லிணக்கம் ஏற்படப்போகின்றது என தமிழ் மக்கள் ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர். 
 
இன நல்லிணக்கம் என்பது உதட்டளவில் மட்டும் இருக்கக்கூடாதென்றும், அதனை செய்கையிலும் காட்டவேண்டும் என்றும் சமூக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டனர்.
 
இரு தசாப்தகால போரின்பின்னர் இவ்வாறான அராஜகத்தனமான சம்பவங்கள் அரங்கேற்றப்படுவதானது தமிழர்களின் மனங்களைப் பெரிதும் பாதிக்கும் எனத் தமிழ்ச் சமூக இன உணர்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 
 
தமிழ் மக்களுக்காக முழுமூச்சாகச் செயற்பட்ட தந்தை செல்வா போன்ற தலைவர்களின் நினைவுச்சிலைக்கு குந்தகம் ஏற்படுத்துவதானது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் செயல் என்றும் அவர்கள்  சுட்டிக்காட்டியுள்ளனர். 

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv