விக்கிலீக்ஸ் இணையத்தளம் தற்காலிகமாக நிறுத்தம்


விக்கிலீக்ஸ் இணையதளத்தை முடக்க சிலர் சதி செய்வதாக கூறியுள்ள அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், தற்காலிகமாக தனது தளத்தின் செயற்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
அமெரிக்க தூதரகங்களுக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கும இடையிலான தகவல் பரிமாற்ற விவரங்களை வெளியிட்டு உலகையே உலுக்கிய இணையதளம் விக்கிலீக்ஸ்.
இதன் தலைவர் ஜூலியன் அசாஞ்ச். விக்கிலீக்ஸ் வெளியிட்ட பல பரபரப்புத் தகவல்களால் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் பல உலக நாடுகளிலும் பெரும் புயல் கிளம்பியது.

இந்த நிலையில் தனது தளத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று லண்டனில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எங்களுக்கு எதிராக அமெரிக்க மற்றும் இங்கிலாந்து வங்கிகள் நிதி கையாளுதலை தடை செய்துள்ளன. இதனால் எங்களது செயற்பாடுகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்காலிகமாக எங்களது செயற்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
எதிர்கால பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இந்த முடிபை எடுத்துள்ளோம் என்றார்.
இரண்டாம் இணைப்பு
விக்கிலீக்ஸ் இணையதளம் மூடப்படும் அபாயம்
விக்கிலீக்ஸ் நிறுவனத்துக்கு விசா, மாஸ்டர் கார்ட், பே பால் மற்றும் வெஸ்டன் யூனியன் வழியாக வரும் நன்கொடைகளுக்கு அமெரிக்கா தடை விதித்திருப்பதை தொடர்ந்து தற்காலிகமாக விக்கிலீக்ஸ்’ செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுகிறது.
இதேநிலை தொடர்ந்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் விக்கிலீக்ஸ் இழுத்து மூடப்படும் அபாயம் ஏற்படும் என்று ‘விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசாஞ்ச் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து அந்தந்த நாடுகளின் இரகசியங்கள் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு இரகசிய கேபிள்கள் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
இப்படி ஒவ்வொரு நாட்டிலிருந்தும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தகவல்களை கடந்த ஆண்டு விக்கிலீக்ஸ் என்ற இணையத்தள பத்திரிகை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது அமெரிக்க அரசுக்கு பெரும் தலைகுனிவையும் அவமானத்தையும் ஏற்படுத்தியது. பல நாடுகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் அசாஞ்ச் மீது சுவீடன் நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பலாத்கார புகார் கூறினர். இந்த வழக்கில் லண்டன் பொலிஸார் அசாஞ்சை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது அவர் ஜாமீனில் வெளியில் இருக்கிறார். சுவீடன் நாட்டுக்கு அவரை நாடு கடத்த லண்டன் கீழ் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.


இந்நிலையில் அசாஞ்ச் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில்,


’’வாடிக்கையாளர்கள் தரும் நன்கொடையில் விக்கிலீக்ஸ் இயங்கி வருகிறது.

பேங்க் ஆப் அமெரிக்கா விசா, மாஸ்டர்கார்டு, பே பால் மற்றும் வெஸ்டர்ன் யூனியன் வாயிலாக ஏராளமான வாசகர்கள் கிரடிட் கார்டு மூலம் நன்கொடை அனுப்பி வந்தனர்.

இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சத்துக்கு 35 ஆயிரம் டாலர்கள் கிடைத்து வந்தன. தற்போது இந்த நன்கொடை வரும் வழிகள் தடை செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல் நன்கொடை வருவது நின்றுவிட்டது.

இதனால் விக்கிலீக்சிற்கு வரும் வருவாய் கணிசமாக குறைந்து தற்போது மாதத்துக்கு 7ஆயிரம் யூரோக்கள் என்ற அளவில்தான் வருவாய் கிடைக்கிறது.

விக்கிலீக்சை தொடர்ந்து நடத்த அடுத்த ஆண்டில் 35 லட்சம் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும். அடுத்த இரண்டு மாதத்துக்குள் இந்த தடை விலக்கிக் கொள்ளப்படாவிட்டால், புதிய தகவல்களை வெளியிடுவதை நிறுத்தி விட்டு நிதி ஆதாரங்களை தேடும் பணியில் விக்கிலீக்ஸ் இறங்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv