யார் இந்த காடாபி?"சுட வேண்டாம் சுட வேண்டாம்" கடாபியின் கடைசி வார்த்தை _

இளம் வயதிலேயே பல வல்லரசு நாடுகளுக்கு சவால் விடும் வகையில் தனக்கு இணையான தலைவர் எவரும் இருக்க முடியாது. எவ்வாறான வல்லரசுகள் வந்தாலும் அதற்கு இணையாக எனது நாட்டை வழி நடத்திச் செல்வேன் என்ற மன உறுதியுடன் நான்கு தசாப்த காலமாக லிபியாவை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த சர்வாதிகாரி முவம்மர் கடாபி மட்டுமா? அவரது இராச்சியமும் இன்றுடன் வீழ்ந்தது. பயம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்வென்று தெரியாமல் பல நாடுகளை கதிகலங்க வைக்கும் வகையில் தனது நாட்டு மக்களை தன் பிடியில் வைத்து ஆட்சி நடத்தி வந்த கடாபியின் வரலாற்றை சற்று பின்நோக்குவோம்... 1942ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் திகதி பிறந்த முஅம்மர் கடாபி சிறு வயது முதல் மிகவும் சுறுசுறுப்பாக இருந்து வந்துள்ளார். இளம் வயதிலேயே லிபிய இராணுவத்தில் வீரராக இருந்த இவர் 1965ஆம் ஆண்டு பெங்காசி இராணுவ பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டார். 1966ஆம் ஆண்டு பிரிட்டன் ரோயல் மிலிட்டரி பயிற்சிக்குச் சென்றார். 


மீண்டும் படைக்குத் திரும்பிய அவர், தனக்கென ஆதரவாளர்களைத் திரட்டியதுடன் தனி இராச்சியம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற மன உறுதியை வளர்த்துக்கொண்டார். இச் சந்தர்ப்பத்தின்போதே லிபிய மன்னர் இத்ரீஸ் சிகிச்சை ஒன்றுக்காக வெளிநாடு சென்றிருந்த நிலையில் இரத்தம் சிந்தாத இராணுவப் புரட்சி மூலம் தனது 29 ஆவது வயதிலேயே ஆட்சியைக் கைப்பற்றினார். 
1969ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி ஆட்சியைக் கைப்பற்றி லிபிய அரபுக் குடியரசு என்று அறிவித்தார். 41 வருடங்களாக தொடர்ந்து ஆட்சியைத் தன் இரும்புப் பிடிக்குள் வைத்து ஆட்சி செய்துள்ளார். கடாபி முப்படைத் தளபதியாகவும், ஆளும் கவுன்சில் தலைவராகவும் ஆனார். 1970 ஆண்டு முதல் 1972 பிரதமராகவும், இராணுவ அமைச்சராகவும் இருந்தார். மன்னராட்சி முறையை ஒழிப்பதாகக் கூறியவர், தொடர்ந்து அதிபராக தானே நீடித்தார். ஏழைகளுக்கு அடிப்படை வாழ்க்கை வசதிகளை அளிப்பதாகக் கூறிய அவரது குடும்பம் கடந்த 41 ஆண்டுகளில் ஏராளமான சொத்துக்களை சேர்த்ததாகக்கூட குற்றச்சாட்டு எழுந்தது.

தன் உயிர் உள்ள வரை தனது உயிர் நாடியாக லிபியா இருக்க வேண்டும் என்பதே கடாபியின் கனவாக இருந்தது. ஆனால், இது முழுமையான அளவு நிறைவு பெறாமல் முற்றுப்புள்ளியை நோக்கிச் செல்லும் என்று கடாபி கொஞ்சம் கூட நினைத்திருக்க மாட்டார். ஆம், முஅம்மர் கடாபி…ஆட்சியை தன் கையில் எடுத்த ஆரம்பத்தில் அவருக்கு அதிகளவு ஆதரவு இருந்தது. ஆனால், நாள் செல்லச்செல்ல கடாபிக்கான மக்களின் ஆதரவு வலுவிழந்தது. ஆபிரிக்காவின் வட எல்லையில் மத்திய தரைக்கடல் பகுதிக்கு அண்மையில் சூடானுக்கும் எகிப்துக்கும் இடையில் அமைந்திருப்பது தான் லிபியா. இவ்வாறான புரட்சி வெடிக்கும் நாடாகவே லிபியாவும் இருந்து வந்தது. இந்நாட்டின் அதிபதியாக, தலைவனாக மக்களை தன் வசம் வைத்திருந்தவர் தான் முஅம்மர் கடாபி… அரபு தேசியம் என்றும், இஸ்லாமிய சோசலிசம் என்றும், மக்களின் நேரடிக் குடியரசு என்றும், பலவிதமாக தன் அரசை சித்திரித்துக் கொண்டிருக்கிறார். நவீன குடியரசு என்று சொல்லிக்கொண்டே 41 ஆண்டுகளாக சர்வாதிகாரம் செய்துகொண்டிருந்தவர் தான் கடாபி. இவருக்கு இரண்டு மனைவிகளும் எட்டுப் பிள்ளைகளும் (7 ஆண் பிள்ளைகள், 1 பெண்) உள்ளனர். 


மூத்த மகன் முஹம்மது அல் கடாபி - இவர் லிபியா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக இருந்து வந்தவராவார். இரண்டாவது மகன் சைப் அல் இஸ்லாம் கடாபி - இவர் அரசாங்கத் தரப்பில் ஒரு பெரிய தர்ம ஸ்தாபனத்தை நிர்வகித்துக் கொண்டிருக்கிறார். மூன்றாவது மகன் சாதி கடாபி - தேசிய உதைபந்தாட்டக் கழகத்தின் தலைவராக இருந்து வருகிறார். நான்காவது மகன் முடாசிம் கடாபி – லிபிய இராணுவத்தில் உயர்ந்த பதவியை வகிக்கிறார். நாட்டின் மிக உயர்ந்த பதவியான – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி இவருடையதாகவே இருந்து வந்துள்ளது. ஐந்தாவது மகன் ஹன்னிபால் கடாபி - நாட்டின் எண்ணெய் வளம் முழுவதையும் மேற்கொண்டிருக்கும் நிறுவனத்தை நிர்வகித்து வந்துள்ளார். ஆறாவது மகனான சைப் அலி கடாபியும், ஏழாவது மகனான காமிஸ் கடாபியும் நாட்டின் பொலிஸ் நிர்வாத்தைக் கவனிக்கிறார்கள். அவரது ஒரே மகளான – ஆயிஸா அல் கடாபி ஒரு சட்டத்தரணியாவார். நாட்டின் நீதி நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிப்பவராவார். கடாபி புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். அதை எழுதியது தான் என்றும் சொல்கிறார் ! தனக்கென சொந்தப் பாதுகாப்பு படையைக் கொண்டு சர்வ வல்லமை மிக்கவராகவும் விளங்கிய கடாபி 40 உறுப்பினர்களைக் கொண்ட முற்றிலும் திருமணமாகாத இளம்பெண்களைக் கொண்ட படையொன்றை அமைத்து வைத்திருந்தார். லிபியாவின் எண்ணெய் வளம்தான் கடாபியின் பலமும், பலவீனமுமாக இருந்து வந்தது.கடாபியின் அராஜக ஆட்சியில் அதிருப்தி அடைந்த இளைஞர்கள் தலைமையில் புரட்சிப் படை அமைந்தது. கடந்த பெப்ரவரி மாதம் கடாபிக்கு எதிரான கிளர்ச்சி தொடங்கியது. அதனை ஒடுக்குவதற்கு இராணுவத்தை ஏவினார் கடாபி. இரு தரப்புக்கும் பயங்கர மோதல் நீடித்தது. புரட்சிப் படைக்கு மக்கள் ஆதரவு அதிகரித்ததால் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் தலையிட்டு கடாபியை பதவி விலக வலியுறுத்தினர். மறுத்த அவர், கடைசி லிபியா இருக்கும் வரை அந்நியப் படைகளையும், எதிரிகளையும் எதிர்த்துப் போராடுவேன் என்றார்.
இதையடுத்து, ஐ.நா. அனுமதி பெற்று புரட்சிப் படைக்கு ஆதரவாக நேட்டோ படைகளும் கடாபி ஆதரவு இராணுவம் மீது தாக்குதல் நடத்தின. இந்நிலையில், கடந்த 9 மாதங்களாக நீடித்த சண்டையில் தலைநகர் திரிபோலியைக் கைப்பற்றினர். கடும் தாக்குதலுக்கு மத்தியில் மேற்படி நகரம் கைப்பற்றப்பட்டதுடன் கடாபி தலைமறைவானார். இதையடுத்து, கடாபியின் மாளிகையை புரட்சிப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கொடி நாட்டினர். இந்த வெற்றியை லிபியா முழுவதும் கொண்டாடினார்கள்.
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உடன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 'லிபியா சர்வாதிகாரியின் பிடியில் இருந்து விடுபட்டு விட்டது" என்று அந்த அறிக்கையில் அறிவித்தார். லிபியாவின் எதிர்காலம் இனி அந்த நாட்டின் மக்கள் கைகளில் இருக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இதன் பின்னரே தொடர் போராட்டம் இடம்பெற்று வந்த நிலையில் இன்று சிர்தே நகரை அந்நாட்டு இடைக்கால அரச படையினர் கைப்பற்றியதையடுத்து கடாபி கைது செய்யப்பட்டு, காயம் காரணமாக அவர் பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்படடுள்ளது.


"சுட வேண்டாம் சுட வேண்டாம்" கடாபியின் கடைசி வார்த்தை _


 2011- 10- 20 லிபியர்களின் வாழ்நாளில் மறக்கமுடியாத நாள். காரணம், அந்நாடு முழுமையாக சர்வாதிகாரியின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது.

காலை 8.30 - கடாபி மற்றும் அவரது சிறிய படையணியொன்றும் சிர்தே நகரைவிட்டுத் தப்பியோட முயற்சித்த போது அப் படையணி மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் கடாபியின் முக்கிய ஆதரவாளர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

காலை 11.05 - லிபிய இடைக்கால அரசபடைகள் அந்நாட்டின் இறுதிப் பகுதியான சிர்தே நகரை முற்றிலுமாகக் கைப்பற்றியதுடன், மீதமிருக்கும் கடாபி ஆதரவாளர்களைத் தேடிக்கொண்டிருப்பதாக அறிவித்தனர். பகல் 2.00 - இதில் தப்பித்த கடாபி கொன்கிறீட் குழாய் ஒன்றினுள் நுழைந்து பதுங்கியுள்ளார்.

பின்னர் அவ்விடத்திற்கு வந்த இடைக்கால நிர்வாக அரச படையினர் அவரை அதற்குள் இருந்து இழுத்து வெளியே எடுத்துள்ளனர்.

அதன்போது அவரிடம் தங்கத் துப்பாக்கியொன்று இருந்துள்ளது.

தனது உயிருக்கு அஞ்சிய கடாபி தன்னைச் சுட வேண்டாம் எனக் கெஞ்சியுள்ளார்.

பின்னர் அங்கிருந்தவர்கள் கோபத்தில் அவரை மோசமாகத் தாக்கியுள்ளனர்.

இறுதியில் அவரது தலை மற்றும் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பகல் 2.30 - கடாபி கொல்லப்பட்டதாக அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

பகல் 2.45 - கடாபி கொல்லப்பட்டமையை கடாபி ஆதரவு ஊடகமொன்று மறுக்கின்றது.

பகல் 3.00 - லிபியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் தொடங்குகின்றன. மக்கள் வெற்றியைக் கொண்டாடுகின்றனர்.

பகல் 3.44 - கடாபி கொல்லப்பட்ட காட்சி வெளியாகிறது.

பகல் 4.30 - கடாபி கொல்லப்பட்டுள்ளதாக லிபியாவின் இடைக்கால பிரதமர் மஹுமூட் ஜிப்ரில் தொலைக்காட்சியில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றார்.

பகல் 4.31 - கடாபியின் மகன்முடாசிம் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

இரவு 7.50 கடாபியின் மகன் சயிப் கொல்லப்பட்டுள்ளதாக அல்ஜெசீரா ஊடகம் செய்தி வெளியிட்டது

இவ்வாறு கடாபி மற்றும் அவரது எஞ்சிய படையணியின் ஓட்டம் முடிவிற்கு வந்தது.

எனினும் கடாபி கொல்லப்பட்ட விதம் தொடர்பில் பல சமூக ஆர்வலர்கள் தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

மனிதாபிமானமற்ற முறையில் அவர் தனது இறுதித்தருணத்தில் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv