கயிறே, என் கதை கேள்!ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்துப் போட்டதுதான் நான் செய்த பெரும் பிழை. எவ்வளவோ அடி, உதை சித்திரவதை​களைச் சுமந்தவன் அன்றைக்கும் பல்லைக் கடித்தபடி அவர்களின் தாக்குதலைத் தாங்கி இருக்கலாம். இல்லையேல், அவர்களின் தாக்குதலில் உயிரையே விட்டிருக்கலாம்.
ஒப்புதல் வாக்குமூலம்... உலுக்கும் உண்மைகள்!

ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்துப் போட்டதுதான் நான் செய்த பெரும் பிழை. எவ்வளவோ அடி, உதை சித்ரவதை​களைச் சுமந்தவன் அன்றைக்கும் பல்லைக் கடித்தபடி அவர்களின் தாக்குதலைத் தாங்கி இருக்கலாம். இல்லையேல், அவர்களின் தாக்குதலில் உயிரையே விட்டிருக்கலாம்.
அன்றைக்கே மண்ணோடு மண்ணாகிப் போயிருந்தால், இன்றுவரை மரணத்தின் துரத்தலுக்கு ஆளாகித் தவித்திருக்க வேண்டியது இல்லை. ஒவ்வொரு நாளும் செத்துச் செத்துப் பிழைப்பதைவிட செத்து ஒழிந்துவிடுவதே மேல்.
ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்துப் போட்டதன் மூலமாக ராஜீவ் கொலை விவகாரத்தில் தனக்கு இருக்கும் பங்களிப்பை முருகன் ஒப்புக்கொண்டு இருக்கிறார்’ என மீடியாக்​களிடம் அறிக்கை வாசித்தார்கள் அதிகாரிகள்.
எத்தனையோ சித்திரவதைகளை நடத்தி, அவர்​களின் புனைவுக் கதைகளுக்குக் கையெழுத்து வாங்கினார்கள் என்பது எங்களுக்குத்தான் தெரியும். பிரம்புகளின் பின்னணியில் எங்​களிடம் கையெழுத்து வாங்கப்பட்ட அன்றைய சூழலிலும் கூட நான் சமயோசி​தமாக ஒரு காரியத்தைச் செய்தேன்.
என் கையொப்பம் நான் விரும்பிப் போட்டது அல்ல என்பதை நிரூபிக்க ஐ.பி.சி. செக்ஷன் 29 மற்றும் இண்டியன் எவிடென்ஸ் ஆக்ட் செக்ஷன் 15-ன் படி எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய சான்றுக் குறியீடுகளைப் போட்டு வைத்தேன்.
அந்தக் குறியீடு​களைப்​பற்றி என்னிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அங்கும் இது கேட்கப்படவில்லை.
விசாரணையின் போது நடந்த சித்திரவதைகளைப் பற்றி நீதிபதியிடம் முறையிட்டு இருக்கலாமே? என்று சிலர் கேட்கிறார்கள். நியாயமான கேள்விதான்.
ஒரு எலியைப் பூனையின் காவலில் வைத்துவிட்டு, அந்த எலியிடமே 'பூனை உன்னை துன்புறுத்தியதா?’ என வீட்டு எஜமான் கேட்டால் எப்படி இருக்கும்?
அதுபோல்தான் அப்போது எமக்கிருந்த நிலையும். அதிகாரிகளின் சித்திரவதைகளைப் பற்றிச் சொல்லிவிட்டு திரும்பவும் அவர்களின் பிடிக்குத்​தானே நாங்கள் வரவேண்டும்?
அப்படியிருக்க வாய் திறந்த பாவத்துக்காக மேலும் தாக்குவார்களே... உடல் முழுக்கக் காயங்கள் இருந்தாலும், வாய்விட்டுக் கதறக்கூட அப்போது எங்களுக்குத் தைரியம் இல்லை.
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது எங்களால் நீதிபதியின் முகத்தைக்கூட தெளிவாகப் பார்க்க முடியவில்லை. தவறியும் அவர் எங்களையோ, நாங்கள் அவரையோ பார்த்துவிடாதபடி 10-15 அதிகாரிகள் எங்களை வளையம்போல் சுற்றி நின்றனர்.
நீதிமன்றம் என்றுகூடப் பார்க்காமல், 'ஏதாச்சும் பேசுனீங்கன்னா......!’ என மிரட்டினார்கள். அதையும் மீறி என் மனைவி நளினி, நீதிபதியின் முகத்தைப் பார்க்கப் போராடியபடி இருந்தாள்.
அடி, உதைகள் இல்லாத ஒரே இடம் எங்களுக்கு அந்தக் கூண்டுதான். எங்களின் சோகத்தைச் சொல்வதற்கான கடைசி வாய்ப்பிடமும் அதுதான். நீதிபதியைப் பார்க்க என் மனைவி போராடுவதும், அதிகாரிகள் சுற்றிச் சுற்றி அவரை மறைப்பதுமாக இருந்தார்கள்.
ஒருகட்டத்தில், 'அரசாங்க செலவில் எங்களுக்கு வக்கீல் நியமிச்சு கொடுங்க...’ என நீதிபதியிடம் கைகூப்பியபடி வேண்டினாள் நளினி. இத்தனைப் போராட்டங்களைக் கடந்து அந்தக் குரல் வருகிறது என்பதை அந்த நீதிபதி அறிந்திருக்க வாய்ப்பில்லை. 'பார்க்கலாம்’ என்றபடியே ஏதோ எழுதினார். ஆனால், அடுத்த ஒரு வருடம் முடியும் வரை அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
நீதிபதி முன் எங்களை ஆஜர்படுத்த அழைத்துவரும்போது எல்லாம் அதிகாரிகளின் பூச்சாண்டித்தனம் அப்பட்டமாகவே தெரியும். 'நீதிபதியிடம் ஏதாவது சொன்னா, சண்முகத்துக்கு ஏற்பட்ட நிலைமைதான் உங்களுக்கும்’ என மிரட்டுவார்கள். அடி, உதைகள் வாங்கி மிரண்டு கிடக்கும் எங்களால் இதையும் தாண்டி என்ன பேசிவிட முடியும்?!
3.8.91 அன்று ஒப்புதல் வாக்குமூலத் தாள்களில் எனது கையொப்​பத்தினை பெற்றுவிட்டு மறுநாள் எம்மை ஒருவர் முன் ஆஜர்படுத்தினார்கள். அதற்கு முன்னர் அவரை நான் பார்த்தது இல்லை. சைதாப்பேட்டை சிறையில் சிறிய அறையில் ஒரு பக்கம் அரசு வக்கீலும், இன்னொரு பக்கம் வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியும் அமர்ந்திருந்தனர்.
புதுமுகமாகத் தெரிந்த அவர் தலை குனிந்தபடி எமது காவல் நீடிப்பு திகதியைச் சொன்னார். உண்மையில் அவர்தான் நீதிபதி என்றே எனக்குத் தெரியாது. அவர் உத்தரவிட்டது பொலிஸ் காவலுக்கா அல்லது நீதிமன்றக் காவலுக்கா என்பதும் எனக்கு விளங்கவில்லை.
நான் நிறுத்தப்பட்ட இடம் ஒரு நீதிமன்றம் என்பதுகூட எனக்குத் தெரியாது. அங்கே அப்படி ஒரு சூழ்நிலையும் இல்லை. எங்கே கொண்டு செல்லப்படுகிறோம் என்பதை அதிகாரிகள் தொடர்ந்து இரகசியமாகவே வைத்திருந்தார்கள். நீதிமன்றம் எனச் சொன்னால் அங்கே சகலத்தையும் கொட்ட நாங்கள் ஆயத்தமாகி விடுவோம் என்கிற பயம் அதிகாரிகளுக்கு.
ஜுடிஷியல் கஸ்டடியில் சிறைக்கு அனுப்பப்பட்ட பின்பு கூட அங்கு அதிகாரி ஒருவர் வந்து எங்களை மிரட்டினார். ஜுடிஷியல் கஸ்டடிக்கு வந்த பின்னர் பொலிஸார் எங்களைச் சித்திவதை செய்தது பற்றியும், பல தாள்களில் எமது கையொப்பத்தினை அனுமதி இன்றிப் பெற்றது பற்றியும் முறையீட்டு மனு அனுப்பினோம்.
இந்த மனுக்களின் நகல் மற்றும் அதன் மீது நீதிமன்றம் போட்ட உத்தரவு நகல் ஆகியவை அனைத்தையும் நீ2.ஜீ.நீ.313 செக்ஷன் கீழ் சமர்ப்பித்த வாக்கு மூலத்தின் கீழ் சேர்த்து இணைத்துள்ளோம்.
இந்த வழக்கில் 20.5.1992 அன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். 16.5.92 வரை இந்த வழக்கில் 20 எதிரிகள்தான் சேர்க்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 16 பேர்களிடம் ஒப்புதல் வாக்குமூலத் தாள்களிடம் கையொப்பம் பெற்றிருந்தனர்.
(ஏ-7) கனகசபாபதி, (ஏ-14) பாஸ்கரன், (ஏ-22) சுபா சுந்தரம், (ஏ-26) ரங்கநாத் ஆகியோரிடம் ஒப்புதல் வாக்குமூலக் கையெழுத்து வாங்கப்படவில்லை. கனகசபாபதி, பாஸ்கரன் இருவரும் மிகவும் வயதான​வர்கள். சுபா சுந்தரம் வயோதிபப் பருவத்தினை நெருங்கிக்கொண்டு இருந்தவர்.
நமது கால நேரத்துக்கு எதுவெல்லாம் கைகொடுக்கும் என்பதற்கு உதாரணம் சொல்கிறேன். சுபா சுந்தரத்தை அதிகாரிகள் பெரிதாக விசாரிக்கவில்லை. எங்கள் மீது பாய்ச்சப்பட்டது போன்ற கொடூர சித்திரவதைகளுக்கும் அவரை ஆளாக்கவில்லை. காரணம், அப்போது அவருடைய உடல் எடை 130 கிலோ. அதனால், அவரைப் பிறர் உதவி இல்லாமல் எழ வைக்கவோ, அமர வைக்கவோ முடியாது. அதனாலேயே அவர் கொடூர சித்திரவதைகளில் இருந்து தப்பினார்.
கனகசபாபதி ஓர் அரசு ஊழியர், சுபா சுந்தரம் ஒரு பத்திரிகையாளர் என்பதால் விசாரணை அதிகாரிகள் காட்டிய இடங்களில் கையெழுத்துப் போட அவர்கள் ஒத்துழைக்கவில்லை. கையெழுத்து என்று ஒன்று கிடைத்துவிட்டால், அதைவைத்தே எத்தகைய திரைக்கதையையும் அதிகாரிகள் அச்சேற்று​வார்கள் என்பதை அந்த இருவரும் அறிந்து வைத்திருந்​தார்கள்.
ரங்கநாத் (ஏ-26) அவர்களை பெங்களூர் நீதிமன்​றத்தில் ஆஜர் செய்தபோது, தனக்கு நேர்ந்த சித்திரவதை​களை அவர் ஆதாரத்துடன் சொன்​னார். அவருடைய பல் உடைக்கப்பட்டதை அவர் ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி​னார்.
இதனாலேயே ஒப்புதல் வாக்குமூலத்தில் ரங்கநாத்திடம் கெடுபிடி காட்டப்படவில்லை. அவரது மனைவியையே அவருக்கு எதிராக மாற்றி வாக்குமூலம் கொடுக்க வைத்துவிட்டமையால், அவர்களுக்கு ரங்கநாத்தின் ஒப்புதல் வாக்குமூலம் தேவை இல்லாமல் போய்விட்டது.
மேற்படி 16 எதிரிகளும் 60 நாட்கள் வரை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு இருந்தோம். ஒவ்வொருவரிடமும் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கு​வதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றி அதிகாரிகள் எழுதி இருந்த விவரங்களைப் பார்த்தோம். மூன்று மணி நேரம் முதல் ஒன்பது மணி நேரம் வரை ஒப்புதல் வாக்குமூலம் வாங்கச் செலவானதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஒப்புதல் வாக்குமூலத்தில் உள்ள தகவல்களை நாமாக முன்வந்து சொல்லியிருந்தோம் என்பது உண்மையானால், அதே தகவல்களை பொலிஸாரிடம் சொல்லவும் அதே அளவு நேரம்தான் செலவாகி இருக்க வேண்டும். அதிகபட்சம் அதனைப்போல் 10 மடங்கு நேரம் செலவானது எனக் கொண்டால்கூட மொத்தம் ஆறு நாட்கள்தானே ஆகும்.
ஆனால், ஒப்புதல் வாக்குமூலத்தை வாங்க 60 நாட்களாக பொலிஸார் எங்களைப் படுத்தி எடுத்தது ஏன்? அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதால்தானே... பொய்யான கற்பனைகளில் நாங்கள் கையெழுத்திட மாட்டோம் என்பது தெரிந்துதானே இத்தனை சித்திரவதைகள்? இந்த 60 நாட்களில் எங்களின் உடலும் மனமும் எத்தனை விதமான குரூரங்களுக்கு ஆளாகி இருக்கும்? மரணத்தையும் ஒப்புக்கொள்ளும் மனநிலையை உருவாக்கத்தான் அதிகாரிகளுக்கு இந்த 60 நாள் அவகாசம்?
16.05.92-ல் இந்த வழக்கில் சேர்க்கப்பட்ட ஆறு எதிரிகளும் விடுதலை செய்யப்பட்டனர். அதிலும், நால்வர் எந்த வகையிலும் ராஜீவ் காந்தி கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல எனச் சொல்லி விடுவிக்கப்பட்டனர்.
நியாயமாக நாங்கள் சொல்லிய உண்மைகளை மட்டுமே கருத்தில் கொண்டிருந்தால், இவர்களைப்போல் வெளியே வந்திருக்க வேண்டியவர்கள்தான் நாங்களும்... ஆனால், சித்திரிப்புகளுக்கும், சித்திரவதைகளுக்கும் எங்களைப் பலிகொடுக்க அதிகாரிகள் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெற்றுவிட்டன.
ஒப்புதல் வாக்குமூலம் என்கிற பெயரில் அதிகாரிகள் எங்களின் தலை எழுத்தை தண்டனைகளாலேயே நிரப்பினர்.
மரணம், பனை மர நிழலைப்போல் எங்களைச் சுற்றி அங்கும் இங்குமாக நகர்ந்து வருகிறது. அதன் துரத்தலுக்குப் பயந்து நாங்களும் அங்கும் இங்குமாக ஓடுகிறோம். இன்னும் முழுவதுமாக மரண பயம் எங்களைவிட்டு நீங்கவில்லை.
குற்றவாளிகளாக நாங்கள் கொத்தாக வளைக்கப்பட்ட நேரம் நெஞ்சத்துக்குள் அப்படியே நீள்கிறது.
ராஜீவ் காந்தி இந்தியாவின் பலம் பொருந்திய தலைவர். அவர் கொலை செய்யப்பட்ட செய்தி பரவியபோது மொத்த இந்தியாவும் ஸ்தம்பித்துப் போனது. தமிழ்நாடு முழுக்க கொந்தளிப்பு... பல இடங்களில் நாசகார வேலைகள் நிகழ்ந்தன.
வீதிகள் முழுக்க வெட்டுக் குத்து... தீக்குப் பயந்து பேருந்துகள் பதுங்கிக்கொண்டன. 'அவ்வளவு பெரிய தலைவரைக் கொன்னுட்டாங்களே...’ என்கிற ஆதங்கமும் பரிதவிப்பும் எல்லோருடைய மனங்களிலும் எதிரொலித்த நேரம்.
அப்போதுதான் நாங்கள் ராஜீவ் கொலையின் காரணகர்த்தாக்களாக வளைக்கப்பட்டோம். நாடே கோபாவேசமாகி இருந்த நிலையில் எங்களை நோக்கியப் பார்வை மக்களுக்கு எப்படி இருந்திருக்கும்? 'தலைவரைக் கொன்ற பாவிகள் இவங்கதானா?’ எனப் பத்திரிகைகளில் வெளியான எங்களது படங்களைப் பார்த்து மக்கள் எப்படி எல்லாம் கர்ஜித்து இருப்பார்கள்? அந்த நேரத்தில் நாங்கள் எந்தவித நியாயத்தைச் சொன்னாலும், அது மக்களால் ஏற்கப்பட்டிருக்காது.
எங்களுக்காக ஆஜராக வழக்கறிஞர்கள் முன்வரவில்லை. ராஜீவ் கொலையின் நிஜப் பின்னணி என்ன என்பதை அறிந்துகொள்ளக்கூட வழக்கறிஞர்கள் ஆர்வம் காட்டவில்லை. அப்படியே அவர்கள் எங்களுக்காக ஆஜராகி இருந்தாலும், மக்கள் மன்றத்தில் அவர்களையும் அவமானப்பேய் சூழ்ந்திருக்கும்.
மிகப் பெரிய தலைவர் கொல்லப்பட்ட பரபரப்பும் பதற்றமும் நிலவிய நிலையில், கண்ணியில் சிக்கியக் காடைக் குருவிகளாய் நாங்கள் அதிகாரிகளின் பிடியில் இருந்தோம். கதறினால்கூட தவறு என்கிற நிலையில், எங்களால் என்ன செய்திருக்க முடியும்?
எங்களை விசாரித்த அதிகாரிகள் இந்நேரம் பணி ஓய்வில் வீட்டுக்குப் போயிருப்பார்கள். ஆனால் எங்களின் வாழ்க்கையில் அதிகாரம் அள்ளிப்போட்ட மண், மரண மேடாக எங்களை விழுங்கத் துடிக்கிறது.
மரணம் வெல்கிறதோ, வீழ்கிறதோ... ஆனால், அதற்குள், எங்கள் நெஞ்சக் கூட்டுக்குள் இருக்கும் அத்தனை உண்மைகளையும் உரக்கச் சொல்லிவிட வேண்டும் எனத் துடிக்கிறது மனது!

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv