தமிழ்நாட்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், 10 மாநகராட்சிகள் உள்பட பெரும்பாலான இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது

இந்த தேர்தலில் தே.மு.தி.க. மட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, பாரதீய ஜனதா, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய முக்கிய கட்சிகள் அனைத்தும் தனித்தே போட்டியிட்டன.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து களம் கண்ட கட்சிகள் இப்போது தனித்து போட்டியிட்டதால் இந்த உள்ளாட்சி தேர்தல் கட்சிகளின் சுயபலத்தை நிர்ணயிக்கும் களமாக அமையும் என்று கருதப்பட்டது.
மொத்தம் உள்ள 1 லட்சத்து 32 ஆயிரத்து 467 பதவி இடங்களில் ஏற்கனவே 19 ஆயிரத்து 646 பதவி இடங்களுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டு விட்டதால், மீதம் உள்ள 1 லட்சத்து 12 ஆயிரத்து 759 பதவி இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில் 77 சதவீத வாக்குகளும், 2-வது கட்ட தேர்தலில் 81 சதவீத வாக்குகளும் பதிவாயின. இரு கட்ட தேர்தலிலும் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் முன்னணியில் இருந்து வந்தனர். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதனால் வாக்கு எண்ணும் மையங்களின் முன்பு கூடி இருந்த அ.தி.மு.க. தொண்டர்களிடையே மகிழ்ச்சியும், உற்சாகமும் கரை புரண்டது.
அதே சமயம் தி.மு.க., காங்கிரஸ் போன்ற பிற கட்சியினர் உற்சாகம் இழந்து காணப்பட்டனர். இந்த தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய 10 மாநகராட்சிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றி புதிய சாதனை படைத்தது.
இதேபோல் மொத்தம் உள்ள 125 நகரசபைகளில் 89 நகரசபைகள் அ.தி.மு.க. வசமாயின. தி.மு.க. 23 நகரசபைகளையும், தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பாரதீய ஜனதா ஆகிய கட்சிகள் தலா 2 நகரசபைகளையும், ம.தி.மு.க. ஒரு நகர சபையையும் கைப்பற்றின. 5 நகரசபைகளின் தலைவர் தேர்தலில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்.
(வேட்பாளர் மரணம் அடைந்ததால் வெள்ளக்கோவில் நகரசபைக்கு தேர்தல் நடைபெறவில்லை.) தமிழ்நாடு முழுவதும் 529 பேரூராட்சிகள் உள்ளன. இதில் பெரும்பாலான பேரூராட்சிகளை அ.தி.மு.க. கைப்பற்றியது. 526 பேரூராட்சி தலைவர் தேர்தல் முடிவுகள் வெளியானதில் அந்த கட்சி 287 பேரூராட்சிகளில் வெற்றி பெற்றது.
தி.மு.க.வுக்கு 119 பேரூராட்சிகளும், காங்கிரசுக்கு 23 பேரூராட்சிகளும், பாரதீய ஜனதாவுக்கு 13 பேரூராட்சிகளும், ம.தி.மு.க. வுக்கு 7 பேரூராட்சிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 பேரூராட்சிகளும், தே.மு.தி.க.வுக்கு 3 பேரூராட்சிகளும், பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டுக்கு தலா 2 பேரூராட்சிகளும் கிடைத்தன. 65 பேரூராட்சிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்.
சென்னை உள்பட 10 மாநகராட்சிகளிலும் மொத்தம் 820 வார்டுகள் (கவுன்சிலர் பதவிகள்) உள்ளன. இதில் பெரும்பாலான வார்டுகளை அ.தி.மு.க. கைப்பற்றியது. இதேபோல் நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு தேர்தலிலும் அ.தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து அமோக வெற்றி பெற்று தனித்து ஆட்சியை கைப்பற்றிய அ.தி.மு.க., இந்த உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்று வரலாற்று சாதனை படைத்து உள்ளது. தேர்ந்து எடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டமும், பதவி ஏற்பு நிகழ்ச்சியும் வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
124 நகரசபை தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி அ.தி.மு.க. 89 நகர் மன்றங்களையும், தி.மு.க. 23 நகர்மன்றங்களையும், தே.மு.தி.க., பாரதீய ஜனதா, மார்க்சிஸ்ட் தலா 2 இடங்களையும் ம.தி.மு.க. 1 இடத்தையும், சுயேட்சை 5 இடங்களையும் பெற்றுள்ளன.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv