6 வருடமாக மக்கள் முகாம்களில்: சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கும் இந்தியா!

திருகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூர் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கடந்த ஆறு வருட காலமாக அகதி முகாம்களில் இருக்கும் நிலையில் அவர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு எதனையும் முன்வைக்காத நிலையில், அவர்களுடைய சொந்தப் பகுதியில் புதிய அனல் மின்நிலையம் அமைக்க வழி செய்யும் ஒரு ஒப்பந்தம் இந்திய இலங்கை அரசுகளிடையே கையெழுத்தாகியுள்ளது.


இந்தப் புதிய அனல் மின்நிலையம் 500 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. நிலக்கரியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்த மின்நிலையத்தை சம்பூர் பகுதியில் ஏற்படுத்த இந்தியாவின் மிகப் பெரிய மின் உற்பத்தி நிறுவனமான தேசிய அனல் மின்நிலைய நிறுவனமும், இலங்கை மின்சார சபையும் உடன்பட்டுள்ளன.
இந்தத் திட்டம் இந்திய இலங்கை அரசுகளுக்கு இடையேயான இருதரப்பு பொருளாதார உடன்பாடுகளில் ஒரு மைல்கல் என்று கொழும்பிலுள்ள இந்திய தூதர் அஷோக் காந்தா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அதிகரித்து வரும் மின் தேவைகளை சமாளிக்கும் வகையில், 2016 ஆம் மின் உற்பத்தியை தொடங்கவுள்ள இந்த ஆலை பெரிதும் உதவும் எனவும் இந்தியத் தரப்பு கூறுகிறது. சம்பூர் மின்நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை இலங்கை நிலக்கரி நிறுவனம் இறக்குமதி செய்து கொடுக்கும்.

இந்திய இலங்கை அரசுகள் இணைந்து முன்னெடுக்கும் கூட்டு பொருளாதார நடவடிக்கையில் இந்த சம்பூர் அனல் மின்நிலையம்தான் மிகப் பெரியது என்று கொழும்புக்கான இந்தியத் தூதர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த உடன்படிக்கையின் மூலம் இருநாட்டு ஒத்துழைப்புகள் இதுவரை இல்லாத ஒரு உச்சத்தை எட்டியுள்ளது என்று இந்தியா கூறுகிறது.

இலங்கை அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான நான்காவது ஈழப்போர் மூதூர் பகுதியிலேயே 2006 ஆம் ஆண்டு ஆரம்பமாகியது. அதன்போது சம்பூர் பகுதிதான் இலங்கை அரச படைகளால் முதலாவதாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அந்தப் பகுதியை இலங்கை அரசு கைப்பற்றிய பின்னர் அது உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது.

போரின் காரணமாக அந்தப் பகுதியிலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் இன்னமும் மீள்குடியேற்றம் செய்யப்படாமல், கிளிவெட்டி, பட்டித்திடல் போன்ற முகாம்களில் வசித்து வருகிறார்கள்.

இவர்களுடைய மீள்குடியேற்றத்துக்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. போர் முடிவுக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேல் சென்றுவிட்ட போதிலும் இவர்களுடைய மீள்குடியேற்றத்துக்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.

சம்பூரில் இந்த அனல் மின்நிலையம் அமைக்கப்படுவது ஆரம்பத்திலிருந்தே சர்ச்சையான ஒரு விடயமாகவே இருந்துள்ளது. அந்தப் பகுதியிலிருந்து போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்களது இடங்களில் இந்த மின்நிலையம் வருவதை எதிர்த்து வந்துள்ளனர்தற்போது உடன்படிக்கையும் கையெழுத்தாகியுள்ள நிலையில் இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாகவும் உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.

அனல்மின் நிலையத்தை அமைப்பதற்கு வேறு பல இடங்களைப் பயன்படுத்தக்கூடிய நிலை காணப்படுகின்ற போதிலும், சம்பூர் பகுதியின் கேந்திர முக்கியத்துவம் கருதி அங்கிருந்து தமிழர்களை முழுமையாக வெளியேற்றிவிட வேண்டும் என்ற இலக்குடனேயே இந்தப் பகுதியில் அனல் மின்நிலையத்தை அமைப்பதற்கு அரசு திட்டமிட்டது.

இதற்காக தமிழர்களுக்குச் சொந்தமான சுமார் 10,000 ஏக்கர் காணி பலாத்காரமாக அபகரிக்கப்பட்டு உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv