குடும்பத்துடன் சிறைச்சாலை முன் தற்கொலை செய்வோம்- பேரறிவாளன் தந்தை!

சாந்தன், முருகன். பேரறிவாளன் ஆகியோரைத் தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டு விட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன. இந்நிலையில் ஜோலார்பேட்டையில் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் உருக்கமாக, “செய்யாத குற்றத்திற்காக மகன் பேரறிவாளன் 21 ஆண்டாக சிறையில் வாடுகிறான். மகன் தூக்கிலிடப்படுவதற்கு முன்பே சிறை முன் குடும்பத்துடன் தற்கொலை செய்வோம்” என்று தெரிவித்தார்.


வேலூர் மாவட்டம் ஜோலார்ப்பேட்டையில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் கலந்து கொண்டு கூறுகையில், “சாதாரண பொம்மைகளில் பயன்படுத்தப்படும் பற்றரியை வாங்கிக் கொடுத்ததற்கா எனது மகனுக்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளனர்.

இது என்ன அநியாயம். செய்யாத குற்றத்துக்காக எனது மகன் 21 வருடமாக சிறையில் வாடி வருகிறான். எனது மகன் உயிரை விடுவதற்கு முன்பே, நானும், எனது குடும்பத்தினரும், வேலூர் சிறை முன்பு தற்கொலை செய்து கொண்டு மாண்டு போவோம்.

எனது மகனை முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள்தான் காப்பாற்றி என்னிடம் தர வேண்டும். அவரால்தான் இது முடியும். அவரைத்தான் நாங்கள் நம்பியுள்ளோம்” என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இதேவேளை இப்பிரச்சினை தொடர்பாக கோவையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று மாவட்ட ஆட்சித் தலைவரை சிறை பிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு போராட்டம் நடத்த சட்ட மாணவர்கள் வந்தனர். அப்போது அவர்களை போலீஸார் தடுத்து வெளியேயே நிறுத்தினர். ஆனால் மாணவர்கள் திமுதிமுவென உள்ளே புகுந்தனர்.

அங்கு விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கலெக்டர் என்னவென்று விசாரிக்க வெளியே வந்தார். இதைப் பார்த்த மாணவர்கள் கலெக்டரை சிறை பிடித்து முற்றுகையிட்டு ஆவேசமாக கோஷமிட்டனர். பின்னர் போலீஸார் தலையிட்டு அவர்களை அமைதிப்படுத்தினர்.

இதேபோல சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் தாம்பரம் செல்லும் மின்சார ரயிலை மறித்து சட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ரயில் முன்பு தலை வைத்துப் படுத்து அவர்கள் போராட்டம் நடத்தியதால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவ்வாறே இப்பிரச்சினை தொடர்பாக தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பல்வேறு போராட்டங்களும் விழிப்புணர்வுக் கருத்தரங்குகளும் நடைபெற்று வருகின்றது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv