தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன் மூலமே தமிழர்கள் தமது அரசியல் தளத்தைப் பேணிக்கொள்ள முடியும்

ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி நிர்வாகத்திற்கான தேர்தல் குறிப்பிட்டவாறு எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இதன் பின்னணியில் வட பகுதியில் முழுமையாகவும் கிழக்கின் சில பகுதிகளிலும் உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரங்கள் இடம்பெற்று வருகின்றன. ஏற்கனவே இடம்பெற்று முடிந்த தமிழ் உள்ளூராட்சிப் பிரிவுகள் அனைத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ள நிலையில் வடக்கில் இடம்பெறவுள்ள தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பெரும்பான்மையாக வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆனால், நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலுக்கும் தற்போது நடைபெறவுள்ள தேர்தலுக்கும் இடையில் அடிப்படையிலேயே சில பிரதான வேறுபாடுகள் வெளித் தெரிகின்றன. குறிப்பாக வடக்கின் தேர்தல் களத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பலமான தடைகளை எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது. உள்ளூர் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் வடக்கில் சுதந்திரமான தேர்தல் இடம்பெறுவதற்கான சூழ்நிலை இல்லை என்று குறிப்பிடுமளவிற்கு நிலைமைகள் மோசமடைந்துள்ளன.
ஜனாதிபதித் தேர்தல்,பாராளுமன்றத் தேர்தலின் போதெல்லாம் காட்டியிராத அக்கறையைத் தற்போது அரசு வெளிப்படுத்தி வருகிறது. பல்வேறு வகையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கி மக்கள் அணிதிரள்வதைத் தடுக்கும் வகையிலேயே அரச இயந்திரங்கள் செயலாற்றி வருகின்றன. மக்களைத் திசை திருப்பும் வகையில் கடனுதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மக்களை உள ரீதியாக வசப்படுத்தும் நோக்கில் சம்பூரில் இடம்பெயர்ந்த மக்கள் தொடங்கி முல்லைத்தீவு வரை இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவைகள் அனைத்தும் ஏன் தேர்தல் காலத்தில் இடம்பெற வேண்டும்? எனவே அரச இயந்திரங்கள் தமிழ் மக்களின் அரசியல் உணர்வு ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் வகையில் இயங்கி வருகின்றன என்பது வெள்ளிடை மலையாகும்.
இந்தப் பின்புலத்தில்தான் தமிழ் மக்களின் அரசியல் உணர்வுக்கான குறியீடாக இருந்துவரும் கூட்டமைப்பு இலக்கு வைக்கப்படுகிறது. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலக்கு வைக்கப்படுவதன் பின்னணி என்ன? இத்தனைக்கும் உள்நாட்டில் பயங்கரவாதத்தை தோற்கடித்து விட்டதாக அரசு அறிவித்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டன.
கடந்த தேர்தல்களின் போதெல்லாம் மௌனமாக இருந்த அரச இயந்திரங்கள் இப்போது விழித்துக்கொண்டதன் மர்மம் என்ன?
கடந்த முப்பது வருடங்களாக தனிநாட்டுக்கான போராட்டத்தை முன்னெடுத்து வந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அரசாங்கத்தால் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையின் அரசியல் போக்கு பிறிதொரு தளத்திற்கு மாறியது. அதுவரை புழக்கத்தில் இருந்து வந்த பயங்கரவாதம்,பிரிவினைவாதம் போன்ற சொற்களுக்குப் பதிலாக மீள் ஒருங்கிணைவு,மீள்புனரமைப்பு போன்ற புதிய சொற்கள் அரசுக்குத் தேவைப்பட்டன. இலங்கை ஒரு பின்மோதல் நாடு (கணிண்t ஙிச்ணூ இணிதணtணூதூ) என்பதை முதன்மைப்படுத்துவதன் மூலம் தனது அடுத்த கட்ட அரசியலை முன்னெடுக்கலாம் என்பதே இந்த அரசின் திட்டமாக இருந்தது. இதன் பின்னணியிலேயே முதலில் அபிவிருத்தி (ஈஞுதிஞுடூணிணீட்ஞுணt ஞூடிணூண்t) என்ற கருத்து நிலையொன்றை இலங்கை அரசு முதன்மைப் பிரசாரமாக்கியது. இதன் மூலம் போரில் வெல்லுவதற்கு பக்கபலமாக இருந்த சர்வதேச சக்திகள் தமது அடுத்த கட்ட முன்னெடுப்புகளுக்கும் பக்கபலமாக இருப்பர் என்றே மகிந்த கூட்டணி நம்பியது. ஆனால், நடந்தது வேறு.
இலங்கை அரசு எதிர்பாராத வகையில் இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகள் (ஙிச்ணூ இணூடிட்ஞுண்) சர்வதேசமயமாகின. அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் நிலைப்பாட்டால் (ஙிச்ணூ ணிண கூஞுணூணூணிணூ) எழுந்த புதிய சூழலைச் சாதகமாகக் கைக்கொண்டு புலிகளை அழித்தது போல் இதனையும் சுலபமாகக் கையாளலாம் என்றே கொழும்பு நம்பியிருந்தது. ஆனால், பூகோள அரசியல் நிலைமைகள் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதற்கு இலங்கை விடயம் ஒரு உதாரணமாகியது.
அமெரிக்க நிலைப்பட்ட அழுத்தங்கள் தீவிரமடைந்தன. சனல்4 இன் இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பிலான பிரசாரங்கள் சர்வதேச ஊடகப்பரப்பில் முதன்மை பெற்றது. இதன் தொடர்ச்சியாக கொழும்பு மேற்கின் கடுமையான அழுத்தங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. இதற்கிடையில் தமிழக ஆட்சி மாற்றமும் அதனைத் தொடர்ந்து தமிழக சட்டமன்றத்தில் மகிந்த அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தீர்மானமும் கொழும்புக்கு புதிய தலையிடியைக் கொடுத்தது. தமிழ்நாடு எப்போதுமே டில்லியின் வலுவான காய்நகர்த்தல் தளமாகக் கையாளக்கூடிய ஒன்று என்பதை கொழும்பு நன்கு அறியும். மேற்கின் அழுத்தங்கள் அதிகரித்துச் சென்ற பின்னணியில் இந்தியாவின் ஆதரவைத் திரட்டும் கொழும்பின் முயற்சியும் பெருமளவு வெற்றிபெறவில்லை.
இலங்கையின் போர்க் குற்றங்களை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளுவதன் மூலம் கொழும்பின் மீதான தனது பிடியை இறுக்கிக் கொள்ளும் காய்நகர்த்தலில் ஈடுபட்டுவந்த இந்தியா இறுதியில் உலக கரிசனையைப் புறந்தள்ளிச் செயலாற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. இதன் விளைவாக இந்தியாவின் மூலம் ஒரு பாதுகாப்பு அரணை எழுப்பலாம் என்ற கொழும்பின் நம்பிக்கையும் பலவீனமடைந்தது.
ஆரம்பத்தில் சீன,ரஷ்ய ஆதரவுடன் நிலைமைகளைச் சரிசெய்யலாம் என்று இலங்கையின் ஆளுந்தரப்புக் கணக்குப் போட்டிருந்தாலும் போர்க் குற்றங்கள் தொடர்பில் அதிகரித்துச் செல்லும் உலக கரிசனைக்குப் புறம்பாக சீனாவாலும் ரஷ்யாவாலும் நடந்துகொள்ள முடியுமா? என்பதிலும் கொழும்பு சந்தேகம் கொண்டிருக்க வேண்டும். இது தவிர, தற்போது பொதுநலவாய அமைப்பு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் உடன்பாடொன்றைச் செய்து கொண்டுள்ளது. இது கொழும்பிற்கு மேலதிக நெருக்கடிகளைக் கொடுக்கலாம். இவ்வாறான விடயங்கள் அனைத்தையும் தொகுத்து நோக்கிய ஆளுந்தரப்பினர் புதிய காய்நகர்த்தலொன்றில் இறங்கியுள்ளனர். இதன் விளைவே அரச இயந்திரங்கள் முன்னர் எப்போதும் இல்லாதவாறு நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவை அரசுக்கு ஆதரவான சக்திகளுக்கு கைமாற்றும் செயற்பாடுகளில் முனைப்புக் காட்டி வருகிறது.
உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கைப் பலவீனப்படுத்தும் அரசின் நோக்கத்திற்கும் நாம் மேலே நோக்கிய காய்நகர்த்தலுக்குமான தொடர்பு என்ன? இந்தக் கட்டுரை இரண்டு அவதானிப்புகளைச் சுட்டிக்காட்ட முயல்கிறது.
ஒன்று, சர்வதேச ரீதியாக இலங்கைக்கு எதிராக மேலெழுந்துவரும் எதிர்ப்பலையை பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்டே பலவீனப்படுத்த முயல்வது. இரண்டு,புலிகளின் தோல்வியுடன் தமிழ் மக்களுக்கான தனித்துவமான அரசியல் இல்லை இருப்பது இலங்கையர்களுக்கான அரசியல் மட்டுமே என்பதை தமிழர்களின் ஆதரவை தம்பக்கம் திருப்புவதன் மூலம் நிறுவ முயல்தல்.இந்த இரண்டு விடயங்களையும் உள்ளூராட்சித் தேர்தல் மூலம் சாதிக்க முடியுமா? எப்போதுமே நாம் அரசியலின் நுண் இணையத்தளங்களைத் துல்லியமாக மதிப்பிடுவது அவசியமாகும். அவ்வாறாயின் மட்டுமே ஒரு ஒடுக்குமுறை அரசு எவ்வாறு செயற்படுகிறது என்பதை நம்மால் துல்லியமாக மதிப்பிட முடியும். இதில் இலங்கை அரசு கைதேர்ந்தது என்பதைக் கடந்த காலங்களில் சிறப்பாகவே நிரூபித்திருக்கிறது.
இலங்கை குறித்து என்னதான் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அது மக்களால் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கத்தைக் கொண்ட நாடு. எனவே, புறச் சக்திகள் என்னதான் விமர்சனங்களை முன்வைத்தாலும் உள்நாட்டில் இருக்கும் மக்கள் அல்லது மக்கள் பிரிவு அது குறித்து கரிசனை கொள்ளவில்லையாயின் அந்த விமர்சனங்கள் பெரியளவில் ஒரு அழுத்த அரசியலாக (கணூஞுண்ண்தணூஞு கணிடூடிtடிஞிண்) எழ முடியாது. இந்த விடயத்தைத்தான் தற்போது மேலெழுந்திருக்கும் புதிய சிங்கள தேசியவாதப் பிரிவினர் முக்கிய துருப்புச் சீட்டாகக் காண்கின்றனர்.
இந்தப் பின்புலத்தில்தான் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவுத்தளத்தை பலவீனப்படுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்டதாகவும் பாதிக்கப்படுவதாகவும் சொல்லப்படும் தமிழ் மக்கள் அரசின் நிலைப்பாடுகளுடன் கைகோர்த்திருக்கின்றனர்.
அவர்கள் சர்வதேச அமைப்புகளும் புலம்பெயர் தமிழர்களும் சொல்லுவது போன்று தனித்துவமான அரசியல் நிலைப்பாடு எதனையும் கொண்டிருக்கவில்லை. உள்நாட்டில் உள்ள தமிழ் மக்கள் அரசின் சகலவிதமான முன்னெடுப்புகளையும் ஆதரிக்கின்றனர்.ஆனால், புலம்பெயர் புலி ஆதரவாளர்களே தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் மூலம் மேற்கு முதன்மைப்படுத்தும் தேர்தல் ஜனநாயக முறைமையைப் பயன்படுத்தியே மேற்கின் விமர்சனங்களைப் பலவீனப்படுத்த முடியும் என்று அரசு கருதுவதாகத் தெரிகிறது. அரசு கணக்குப் போடுவது போன்று அவர்கள் இதில் வெற்றிபெறுவார்களாயின் மேற்கின் விமர்சனங்கள் வலுவிழக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேற்கு அல்லது இந்தியா எதுவாக இருப்பினும் உள்ளூர் மக்களின் விருப்பங்களுக்கு முரணாக எதனையும் செய்துவிட முடியாது.   இங்கு உள்ளூராட்சித் தேர்தல் இலக்கு வைக்கப்பட்டாலும் அரசின் நிகழ்ச்சிநிரல் பிறிதொரு மறைமுக இலக்கையும் உட்கொண்டிருக்கிறது. புலிகளையும் அவர்களின் கட்டமைப்புகளையும் அழிப்பதில் அரசு பாரிய வெற்றியைப் பெற்றுள்ளது.ஆனால், ஈழத் தமிழ் மக்களுக்கான தனித்துவமான அரசியல் தேவைப்பாட்டை அவர்களால் தோற்கடிக்க முடியவில்லை.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது என்ற கருத்து பெருமளவிற்கு சர்வதேசமயமாயிருக்கும் சூழலில் இந்தியாவின் தலையீட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டிய நிர்ப்பந்தமும் அரசிற்கு உண்டு. இந்தப் பின்னணியில் ஆகக் குறைந்தது 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலாவது பரிசீலிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசிற்கு ஏற்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் பார்த்தால் இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பேசுகின்றன, செல்வாக்குள்ள ஒரேயொரு கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே இருக்கிறது. இந்த ஒரு விடயம்தான் அரசுக்கு இப்போது பிரச்சினையாகவும் இருக்கிறது. எனவே, தற்போது இடம்பெறவுள்ள தேர்தலில் த.தே.கூட்டமைப்பின் ஆதரவுத் தளத்தைச் சிதறடிப்பதன் மூலம் அடுத்து இடம்பெறவுள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தலின்போது கூட்டமைப்பை மேலும் பலவீனப்படுத்தும் வகையில் அரசால் செயலாற்ற முடியும். இங்கு இந்தக் கட்டுரை நமது அரசியலின் அடிப்படையான விடயம் ஒன்றை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறது. புலிகளின் அழிவைத் தொடர்ந்து ஈழத்தமிழர்களின் அரசியல் இலக்கானது ஓர் அநாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நம்பிக்கையான அரசியல் செயற்திறனுள்ள அமைப்பு அல்லது தலைவர்கள் என்போரை நாம் உடனடியாக எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் நாம் தொடர்ந்தும் பயணம் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். இதனைப் பிறிதொரு வகையில் சுட்டுவதாயின், இருப்பது வண்டில் மாடு என்றாலும் அதில் நாம் பயணம் செய்தே ஆக வேண்டியிருக்கிறது. ஏனெனில் நமது பயணம்தான் நாம் நாமாக இருக்கிறோம் என்பதற்கான அத்தாட்சி.
கூட்டமைப்புக் குறித்து பல்வேறு விமர்சனங்களை நம்மால் முன்வைக்க முடியும். ஆனால், இங்கு பிரச்சினை நமது அரசியல் தளத்தை எவ்வாறு பேணிக்கொள்வது என்பதேயாகும். அதற்காக நமக்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன? இன்றைய நிலையில் நமக்கு இருக்கும் ஒரேயொரு மார்க்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே ஆகும். இந்த ஒரு காரணத்தினால்தான் இலங்கை அரசு வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் ஆதரவுத் தளங்களைக் குறிவைத்துச் செயலாற்றி வருகின்றது. தேர்தலில் கூட்டமைப்பு வெற்றிபெறாது அல்லது கூட்டமைப்பின் மக்கள் ஆதரவு சிதறடிக்கப்படுமானால் அரசிற்கு ஆதரவான தமிழ்க் கட்சிகள் மக்கள் தலைமையகமாக மேல்வரும் ஆபத்து நேரும்.
இதன் மூலம் அரசால் ஒரு தர்க்கத்தை உருவாக்கிக் கொள்ளவும் முடியும். இந்தியா மற்றும் மேற்குசார் மனித உரிமை அமைப்புகள் குறிப்பிட்டு வருவது போன்று இலங்கையில் தமிழ் மக்கள் குறிப்பான அரசியல் நிலைப்பாடு எதனையும் கொண்டிருக்கவில்லை.
அவர்கள் சிங்கள முஸ்லிம் மக்களுடன் இணைந்து வாழுவதையே விரும்புகின்றனர். இத்தகையதொரு அரச பிரசாரத்தைத் தோற்கடிக்க வேண்டுமாயின், த.தே.கூட்டமைப்பு பெரும்பான்மையான ஆதரவுடன் வெற்றி பெற்றாக வேண்டும். இந்த இடத்தில் புலம்பெயர் தமிழ் மக்கள் குறித்தும் சில விடயங்களை இந்தக் கட்டுரை குறித்துரைக்க விழைகிறது.
இலங்கைக்கு வெளியில் எத்தகைய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் தற்போது இலங்கையின் ஆட்புல எல்லைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்கள் தமது அரசியல் உணர்வு நிலையை கைவிடுவார்களாயின் அனைத்து முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராகவே அமையும். இந்த விடயத்தை புலம்பெயர் அமைப்புகள் (அவர்கள் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருப்பினும்) ஆழ்ந்து நோக்குவது கட்டாயமானது.
ஏனெனில் எப்போதுமே ஒரு நாட்டில் வாழும் மக்களும் அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமையுமே ஒரு அரசியல் தளத்தின் அடிப்படைகளாக இருக்க முடியும். எனவே, புலம்பெயர் தமிழ் மக்கள் இது தொடர்பில் செய்யக்கூடிய நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் அனைத்து செயற்பாடுகளையும் (இலங்கையில் வாழும் உறவுகளின் வழியாகத் தேர்தலன்று உற்சாகப்படுத்தலாம்) முன்னெடுப்பதுதான் சரியானதாக அமைய முடியும் என்பதே இக்கட்டுரையின் பரிந்துரையாகும்.
0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv