பேராசிரியர் சிவத்தம்பி காலமானார் _

தமிழ்கூறும் நல்லுலகின் இலக்கிய விமர்சகரும் திறனாய்வாளரும் சமூக சிந்தனையாளருமான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி தனது 79 ஆவது வயதில் நேற்று புதன்கிழமை இரவு காலமானார். 

யாழ்ப்பாணம், கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் சிவத்தம்பி, சிலகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் தெஹிவளை வெண்டவற் பிளேஸில் உள்ள அன்னாரது இல்லத்தில் நேற்றிரவு 8.00 மணியளவில் காலமாகியுள்ளார். 


இவரது உடல் அன்னாரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பண்டிதரும் சைவப்புலவருமான த.பி. கார்த்திகேசு வள்ளியம்மை தம்பதியினருக்குப் புதல்வராகப் பிறந்த சிவத்தம்பி, ரூபாவதி நடராஜாவை திருமணம் செய்தார். மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான இவர், இலக்கியவாதியாகவும் சமூக ஆர்வலராகவும் தமிழ் பேசும் சமூகங்கள் வாழ்கின்ற இடங்களில் எல்லாம் நன்கு அறியப்பட்டவராகவும் விளங்கியவர். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் கரவெ ட்டி விக்னேஸ்வராக் கல்லூரியில் கற்ற இவர் தனது இடை நிலைக் கல்வியை கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் கற்றதுடன் அக்கல்லூரியிலேயே ஆரமபத்தில் ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளமாணிப் பட்டத்தையும் பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் பயின்று முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். 

ஐக்கிய இராச்சியத்திலுள்ள பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்படிப்பை மேற்கொண்டு முனைவர் (கட.ஈ) பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். 1978 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். பின்னர், மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார்.

தொடர்ந்து, தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வருகைப் பேராசிரியராகவும் ஓராண்டுவரை பணிபுரிந்தார். இந்தியா, இங்கிலாந்து, ஜேர்மனி போன்ற பல்வேறு நாடுகளிலுமுள்ள பல்கலைக்கழகங்களிலும் வருகைப் பேராசிரியராகவும் இருந்துள்ளார். கலைப் பங்களிப்பு பல்கலைக்கழக காலத்தில் மேடை நாடகங்களில் நடித்ததோடு, பின்னர் வானொலி நாடகங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். இலங்கையர் கோன் எழுதிய “விதானையார் வீட்டில்’ தொடர் நாடகத்தில் இவரே முக்கிய பாத்திரத்தில் நடித்தார். 

ஆக்கங்கள் 

பல்வேறு துறைகளிலும், ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கியவர். இவர் முதன்மையாகப் பயின்ற துறைகளுக்கு புறம்பாகவும் பல துறைகளில் இவர் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது ஆர்வம், தமிழ், சமயம், சமூகவியல், மானிடவியல், அரசியல், வரலாறு, கவின்கலை என பல்துறைகளையும் தழுவியிருந்தது. மார்க்ஷிய சிந்தனைப்போக்குடைய இவர் யாழ்ப்பாண சமுதாயத்தின் பல்வேறு குறைபாடுகளையும் கடுமையாக விமர்சித்தார். 

இவர் பற்றிய படைப்புக்கள் 

தமிழ் அரசின் திரு வி.க. விருது அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட ஈழத் தமிழ் அறிஞர் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் ஆளுமை விகசிப்பின் சில ஊற்றுக்களை பதிவு செய்யும் வகையில் கரவையூற்று எனும் தலைப்பில் யாழ்ப்பாணம், கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளை நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இவருடைய நூல்கள் 

இலங்கைத் தமிழர் யார், எவர்? , யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு , தமிழில் இலக்கிய வரலாறு, இலக்கணமும் சமூக உறவுகளும் , மதமும் கவிதையும் , தமிழ் கற்பித்தலில் உன்னதம், சுவாமி விபுலானந்தரின் சிந்தனை நெறிகள், திராவிட இயக்கக் கருத்து நிலையின் இன்றைய பொருத்தப்பாடு, தமிழ்ப் பண்பாட்டில் சினிமா (மக்கள் வெளியீடு), பண்டைத் தமிழ்ச்சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி உள்ளிட்ட பல்வேறான நுõல்களையும் ஆய்வு கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 

இவரது மரணச் செய்தியைக் கேள்வியுற்ற தமிழ்நாட்டு இலக்கியவாதிகள், அரசியல் தலைவர்கள், புலம்பெயர் நாடுகளில் வாழும் முக்கியஸ்தர்கள் மற்றும் நம் நாட்டுக் கலைஞர்கள் எல்லோரும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர் அன்னாரது இறுதி கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். 

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv