பொருளிடம் அறியும் புதிய தொழினுட்பத்தை கண்டுபிடித்த ஈழத்தமிழர்.

பொருட்களின் இருப்பிடத்தை அறிவதற்கான மிகவும் மலிவான புதிய மின்னணு பொறிமுறை ஒன்றை (A groung breaking radio teal time tagging system) கண்டுபிடித்து சாதனை படைத்திருக்கிறார் ஒரு ஈழத்தமிழர். 
பிரிட்டனின் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவரான, இலங்கையைச சேர்ந்த Dr.சிதம்பரநாதன் சபேசன் என்பவரே இந்தக் கண்டுபிடிப்பை செய்திருக்கிறார். 

ஒரு பொருளுடன் இந்தப் பொறிமுறை அலகு பொருத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்தப் பொருள் திருடப்பட்டாலோ அல்லது காணாமல் போனாலோ, அந்தக் கணத்தில் அது எங்கு இருக்கிறது என்பதை இந்தப் பொறிமுறை காண்பிக்கும். இதன் மூலம் காணமால் போன பொருளை இலகுவாகத் தேடிக் கண்டுபிடிக்க முடியும். 
விமானப் பொதிகள் தொலைவதை தவிர்க்க இத்தொழினுட்பம் பெரிதும் உதவி புரியும்.

இச் சாதனைக்காக அவருக்கு Uk pioneer (கண்டுபிடிப்பாளர்) மற்றும் Royal academic enterpreneur ship (கண்டுபிடிப்பை வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்துபவர்)ஆகிய உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே பொருட்களை தேடியறியும் பொறிமுறை கண்டுபிடிக்கப்பட்டு, Apple iphone போன்றவற்றில் பயன்பாட்டில் உள்ள போதிலும், அவை மின்கலன் இருந்தால் மட்டுமே இயங்கும் தன்மை கொண்டவை. அத்துடன் அவற்றின் உற்பத்திச்செலவும் மிகவும் அதிகமாகும். 

ஆனால், Dr.சபேசனின் கண்டுபிடிப்பைப் பொறுத்தவரை, அதற்கு மின்கலம் தேவையில்லை என்பதுடன் அதன் உற்பத்திச் செலவும் வெறுமனே 5 பிரித்தானிய பென்சுகள் மாத்திரமே என்று கூறப்படுகிறது.  

இந்த பொறிமுறையை பெரிய விமான நிலையங்களில் பயன்படுத்துவது குறித்து ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும், அப்படி பயன்படுத்தும் போது பயணப் பொதிகள் காணாமல் போதல், பயணிகள் தமது விமானத்தை தவற விடுதல் போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும் என்றும் இந்த கண்டுபிடிப்புக்கான காப்புரிமைக்கு தற்போது விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார் இந்த சாதனைத் தமிழர்.

26 வயதே ஆகும் சிதம்பரநாதன் சபேசன் யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்தவர். தனது இடைநிலைக் கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் பயின்று 2000 ஆம் ஆண்டு க.பொ.த. (சாதாரண தரத்தில்) 9A,D, சித்தியையும் உயர்தரக் கல்வியை யாழ்.இந்துக் கல்லூரியில் கற்று 3A சித்தியையும் பெற்றவர்.

தொடர்ந்து மொறட்டுவ பல்கலைக் கழகத்தின் பொறியியல் பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு அங்கு சில மாதங்கள் கல்வி பயின்றார். இந்நிலையில் இங்கிலாந்தில் புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களில் ஒன்றான Sheffield பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் கிடைத்ததால் தனது இளநிலை பொறியற் கல்வியை (B.Eng.Electronic Engg) 2007 ஆம் ஆண்டு பூர்த்தி செய்து இங்கிலாந்து ரீதியில் தெரிவு செய்யப்பட்ட முதல் 18மாணவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இந்தச் சாதனைக்காக இவருக்கு Sie William Siemen Medal பதக்கம்வழங்கப்பட்டது. 

தொடர்ந்து தனது முதுமாணிக் கல்வியை உலகளாவிய ரீதியில் திறமை வாய்ந்த இங்கிலாந்து cambrige பல்கலைக்கழகத்தில் புலமைப் பரிசில் பெற்று தொடர்ந்தார்.இங்கு முதலில் Master Of Physicology in Electronic Engg மற்றும் Doctor Of Physicology in Electronics Engg என்ற உயரிய படடங்களையும் பெற்றுக் கொண்டார். 

பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்ற இவரது ஆராய்ச்சி கண்டு பிடிப்புக்கள் இங்கிலாந்து பத்திரிகைகளிலும் பல்வேறு ஆங்கில இணையத்தளங்களிலும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் இரண்டு Patients Inventer என்ற பட்டங்களையும் பெற்றுள்ளார். 

கல்வி மட்டுமன்றி கேம்பிறிச் பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் கிரிக்கெட் கழக தலைவராகவும் கேம்பிறிச் பல்கலைக்கழகத்தின் பொறியியற் தொழில் நுட்ப இளைய வல்லுனர் அமைப்பின் தலைவராகவும் செயற்பட்டு வருகிறார்.

உலக அரங்கில் ஈழத்தமிழர்களின் சாதனைகள் மகிச்சியை ஏற்படுத்தும் அதேவேளை உலகம் வியக்கும் மனித வலுவை சொந்தத்தாயகம் இழந்து நிற்கிறது என்பது சிந்தனைக்குரியது. 

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv