உற்சாகமாக விழித்தெழ....

காலைப்பொழுது பொதுவாக உற்சாகம் தரும் நேரம். படிக்கவோ, தியானம் செய்யவோ, முக்கியமான வேலைகளை முடிக்கவோ, பாடிப் பயிற்சி செய்யவோ.... எதுவாக இருந்தாலும் காலைப்பொழுதுதான் சிறந்தது என்பது பொதுவான கருத்து. ஏனெனில் இரவு முழுவதும் தூங்கி, காலையில் விழித்தெழுந்தால் புத்துணர்வு பொங்கிவரவேண்டும்.


ஆனால், காலை எழும்பொழுதும் சோர்வாகவே உணருகிறீர்களா? நீங்கள் மட்டுமல்ல... இன்னும் பலரும் இந்தத் தொல்லையால் அவதிப்படுகிறார்கள். இப்பிரச்னையில் இருந்து மீண்டு, உற்சாகமாகக் காலைப்பொழுதுகளை வரவேற்கவேண்டுமா? கீழ்க்கண்ட சில முறைகளைப் பின்பற்றிப்பாருங்களேன்.

நிம்மதியான உறக்கத்திற்கு நீங்கள் செய்ய வேண்டியது:

1. இரவு உணவானது பொதுவாக, படுக்கைக்குச் செல்லும் இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகவே உட்கொள்ளப்படவேண்டும். குறிப்பாக, இரவு நெடுநேரம் கழித்து காபி அருந்துவது, மது அருந்துதல் முதலியவை உங்கள் தூக்கத்தைக் கெடுக்கும். இரவு உணவில் அதிகப்பகுதி பழங்கள், காய்கறிகளாக இருப்பதும், மிக எளிமையான உணவாக இருப்பதும் மிக மிக முக்கியம். இரவில் மிதமான சூட்டில் பால் அருந்துவது நல்லது. ஆனால் குளிர்பானங்கள், அதிக சூடான பானங்களுக்குத் தடை விதியுங்கள்.

2. இரவு படுக்கைக்குச் செல்லுமுன், சண்டை சச்சரவுகளைத் தவிர்த்து விடுங்கள். (எப்பொழுதுமே தவிர்ப்பது மிக நல்லது) கூடிய வரையில் மகிழ்ச்சியான சம்பவங்களைப் பகிர்ந்துகொள்ளுதல், நகைச்சுவையாகப் பேசிக்கொண்டிருத்தல் இவை நல்ல தூக்கத்திற்கு அஸ்திவாரம் அமைக்கக் கூடியவை.

3. இரவு படுக்குமுன், மனத்தை அமைதிப்படுத்துவது, நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும். எனவே, தியானம் செய்தல், இறை வழிபாடு இவற்றை மேற்கொள்ளுங்கள். பத்து நிமிட தியானம் அல்லது பிரார்த்தனை போதுமானது. இறைவனிடம் எதுவும் வேண்டுகோள் வைத்துப் பிரார்த்தனை செய்வதை விட, இதுவரை அவன் தந்தவற்றுக்கு நன்றி செலுத்துவது அதிகப் பலனளிக்கும்.

4. கோபம், எரிச்சல், வெறுப்பு ஆகிய உணர்வுகள் தூக்கத்திற்கு எதிரி. நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி, இரவு படுக்கைக்குச் செல்லுமுன் நன்றிக்குறிப்பு எழுதும்படி அறிவுறுத்துவார். 'அன்றைய தினத்தில் உங்களுக்கு உதவி புரிந்த ஐந்து பேருக்கு நன்றி தெரிவித்து நாட்குறிப்பில் எழுதிவிட்டுப் படுங்கள். நல்ல தூக்கம் நிச்சயம்.' என்பார் அவர். கடைப்பிடித்துப் பாருங்களேன்.

5. செடி வளர்ப்பது நல்ல பழக்கம்தான். காலையில் எழுந்ததும் பசுமையான தாவரத்தைப் பார்ப்பதும் நல்லதுதான். ஆனால், உங்கள் மூடிய படுக்கையறைக்குள் செடி வளர்க்கக் கூடாது. எளிய அறிவியல்தான். செடிகளும் இரவில் ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு, கரியமில வாயுவை வெளியேற்றுகின்றன. எனவே, படுக்கையறைக்குள் செடிகள் - வேண்டவே வேண்டாம். இதனால் உங்கள் புத்துணர்ச்சி குறைகிறது. இரவு தூக்கத்தின்பொழுது ஆக்சிஜன் உடலின் பல பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டால்தான், உடல் உறுப்புகள் புத்துணர்வு பெற இயலும்.

6. குளிரூட்டப்பட்ட அறையைப் பயன்படுத்துகிறீர்களா? (குளிர்ப்பிரதேசங்களில் கணப்பைப் பயன்படுத்துபவர்களுக்கும்தான்.) உங்கள் அறை வெப்பம் மிகக் குறைவாகவோ, மிக அதிகமாகவோ இருப்பின் அது உங்கள் தூக்கத்தைப் பாதிக்கிறது.

7. இரவு உடைகள் தளர்வாகவும், உங்கள் ஊரின் தட்பவெப்பத்துக்கு ஏற்றதாகவும் இருப்பது அவசியம்.

8. தலையை உட்பட மூடிக்கொண்டு சிலர் உறங்குவார்கள். இதைக் கூடியவரை தவிர்ப்பது நல்லது. மீண்டும். இது நாம் தூக்கத்தின் பொழுது கரியமில வாயு சுவாசிப்பதை அதிகரிக்கிறது.

9. உங்கள் அறையின் சன்னல்கள் லேசாகத் திறந்து வைக்கப்பட்டு, நீங்கள் இயற்கையான காற்றோட்டத்தில் உறங்குவது மிக நல்லது.

10. படுக்கையில் எத்தனை மணி நேரம் இருக்கிறோம் என்பது முக்கியமில்லை. எத்தனை மணிக்குத் தினந்தோறும் படுக்கச் செல்கிறோம், எத்தனை மணிக்கு எழுகிறோம் என்பது முக்கியம். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு நேரத்தில் படுக்கச் செய்வதால் உடலில் உயிரியல் கடிகாரம் குழம்பிவிடுகிறது.
'Early to bed; early to rise
Keeps the man healthy
Wealthy and wise' - என்ற குழந்தைப்பாடல் நூற்றுக்கு நூறு உண்மை.

11. படுக்கையறை கூடியவரை அமைதியாக இருப்பது முக்கியம். படுக்கையறையில் ஒருவர் செல்பேசியில் பேசிக்கொண்டு, குழந்தைகள் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, மற்றவர் தூங்க முயற்சித்தால்.... சுத்தமாகப் பலனில்லை. உங்கள் வீட்டினருகில் வாகனப்போக்குவரத்து, புகைவண்டிப்போவரத்து இவை இருக்குமானால், காதுகளை ear plug பயன்படுத்தி மூடிக்கொண்டு படுக்கலாம்.

12. படுக்கையறையில் விடிவிளக்கு அவசியமில்லை. உங்களுக்கு வேண்டுமென்று தோன்றினால், மிக மிகக் குறைந்த ஒளி தரும் நீல நிற பல்புகளை மட்டுமே பயன்படுத்தவும்.

காலை விழித்ததும் செய்யவேண்டியது:

1. கூடியவரை காலையில் நம்மை எழுப்புவதற்கு கடிகாரத்தை நம்பாமல், நம் உள்ளுணர்வை நம்புங்கள். இரவு படுக்கைக்குச் செல்லுமுன், உங்களது இடதுகைப் பெருவிரல், உள்ளங்கையுடன் சேருமிடத்தில் உள்ள மேடான பகுதியை, வலதுகைக் கட்டை விரலால் அழுத்திக்கொண்டு 'நான் நாளை காலை ஐந்து மணிக்கு விழித்தெழுவேன்' என்று சொல்லுங்கள். இவ்வாறு மூன்று முறை செய்யுங்கள். மறுநாள் காலை 'டாண்' என்று ஐந்து மணிக்கு உங்களுக்கு விழிப்பு வந்துவிடும். (ஆனால், படுக்கையை விட்டு நீங்கள் எழாமல், மீண்டும் உறங்கிப்போனால் நான் பொறுப்பல்ல.)

2. இதில் நம்பிக்கை இல்லையா, அலாரம் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், அது அடித்தவுடன் எழுந்துவிட வேண்டும், அதைத் தலையில் தட்டிவிட்டு இன்னும் பத்து நிமிடம் கழித்து எழலாம் என்று நினைப்பதோ, 'snooze' பொத்தானை அழுத்தி அழுத்தி நேரம் தாழ்த்துவதோ காலை நேர உற்சாகத்தை இன்னும் குறைத்துவிடும். விழிப்பு வந்தவுடன் துள்ளி எழுந்து விடுங்கள். கண்டிப்பாக புத்துணர்வு உண்டாகும்.

3. காலை எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு, சில்லென்று ஒரு தம்ளர் நீர் அருந்துங்கள்.(மிகவும் குளிரவைக்கப்பட்ட நீர் அல்ல, சாதாரணத் தண்ணீர்) நீர் உங்கள் சோம்பலை விலக்குவதோடு உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.

4. காலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வது சாலச் சிறந்தது. அதனால் வழக்கத்தைவிட நீங்கள் அதிக ஆற்றலுடனும், புத்துணர்வுடனும் இருப்பதை உணரலாம். வீட்டிற்குள் 'Tread mill' போன்ற கருவிகளைப் பயன்படுத்தி நடப்பதைவிட வெளியில் காலார நடப்பதே நல்லது. காலை நேரக் காற்றில் அதிக அளவு ஆக்சிஜன் இருப்பதே இதற்குக் காரணம்.

5. அப்படி வெளியில் நடைப்பயிற்சி செய்ய இயலவில்லையா, வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி செய்யுங்கள். அதிக நேரம் ஒதுக்க இயலாவிடினும் அனைத்து உறுப்புக்களையும் தூண்டும் Warm up exercise மட்டுமாவது செய்யுங்கள். இது உங்கள் உடலை நன்முறையில், நல்ல உடல்நலத்துடன் வைக்கிறது. உடல் நன்றாக இருந்தாலே மனதிலும் உற்சாகம் உண்டாகும். உடல் சோர்ந்தால் மனமும் சோர்வடைந்துவிடும். 'உடலை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே' என்கிறார் திருமூலர்.

6. காலைப்பொழுதில் மூச்சுப் பயிற்சி செய்வது மிகுந்த பலனை அளிக்கும். தகுந்த ஆசிரியரிடம் கற்றுக்கொள்வது நல்லது. முடியாவிடில், குறைந்த பட்சம், சிலமுறை (5-10 நிமிடங்கள்) மூச்சை ஆழ இழுத்து விடுங்கள்.

7. மிகவும் சோர்வாகவோ, தலைவலி போன்றவற்றின் தொந்தரவு இருந்தாலோ மட்டும் காபி அருந்துங்கள். இல்லையெனில், எலுமிச்சைச் சாறு, தக்காளிச்சாறு போன்றவை, Green Tea, Lemon Tea இவற்றை அருந்துவது நல்லது.

இவ்வளவுக்கும் மேலாக, இன்னொரு புதிய நாளை வழங்கியமைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லி, இந்த நாள் இனிய நாளாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் பணிகளைத் தொடங்குங்கள். எல்லா நாளும் பொன்னாளாகும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv