உழைப்பின் உன்னதத்தை உலகிற்கு உணர்த்திய "மகளிர் தினம்' _

இவ்வுலகில் பிறப்பெடுத்த அனைவருமே தமது வாழ்க்கை ஆனந்தமாகவும் பூரணமாகவும் நிறைவாக வேண்டுமெனவே அவாவுறுகின்றனர். அதற்கேற்ப பாடுபட்டு உழைக்கவும் முயல்கின்றனர். தம் வாழ்வின் முன்னேற்றத்திற்காக உழைப்பில் ஈடுபடுவதில் ஆண், பெண் என்ற வேற்றுமை இல்லை. இருவருமே ஏதோ ஒரு வகையில் பாடுபட்டுக் கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில் வறிய மக்களின் நிலையோ படு மோசமாகவே உள்ளது.
அல்லும் பகலும் அயராது உழைத்தால்தான் வாழ்க்கை வண்டியை ஓட்ட முடியும் என்பதே அவர்களது முடிவாக உள்ளது. அதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆண்களும் பெண்களுமாக நீண்ட நேரம் வேலை செய்கின்றனர்.

மரபு மரபாகப் பெண்கள் இரண்டாந்தர நிலையில் வைத்துப் பழக்கப்பட்ட வேலை கொள்வோர், முதலாளிகள், ஆலைகளின் அதிகாரிகள் பெண்கள் செய்யும் வேலைகளைப் பெரிதாகக் கருத்தில் எடுக்காமல் துச்சமாகவே எண்ணினர். அதன் பயனாக ஒரே விதமான வேலையை பெண் செய்தால் சம்பளம் குறைவாகவும், பெண் வேலை செய்வதாயின் நீண்ட நேரம் செய்ய வேண்டுமெனப் பணிப்பதோடு பெண்தானே என்ற அசட்டைத் தனத்தால் வேலை செய்யும் இடங்களில் போதிய வசதிகளையோ வாய்ப்புக்களையோ ஒழுங்கு செய்து கொடுக்காமல் மிகத் தரக் குறைவாகவே நடத்தினர். இத்தகைய அவலமான சூழ்நிலையிலும் பல்லைக் கடித்துக் கொண்டு யாவற்றையும் பொறுத்துக் கெணண்டே தமது வறுமைக் கொடுமையால் பெண்கள் தொழில் புரிந்தனர்.

இத்தகைய துன்பங்களைச் சீர்கேடுகளை இல்லாமைக்காக எத்தனை நாட்கள்தான் பொறுமையுடன் அனுபவிப்பது? குழந்தைகளையும் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டுமே.

இந்த நிலையால் சிற்×ழியர்களாகப் பணிபுரிந்த வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்த ஏழைப் பெண்கள் பசி, பட்டினி, ஓய்வின்மை, நோய் வாய்ப்பட்டிருத்தல் என்ற நிலையில் தாங்கொணாத் துயரில் தள்ளப்பட்டனர். ஓரிரு நாட்களல்ல, பல்லாண்டு காலமாகவே இந்நிலையிலிருந்து எவ்வித மாற்றத்தையும் காண முடியாத அவலத்தில் இடருற்றோர் அனைவரும் ஒன்றிணைந்து போராட முன்வந்தனர். ஆனால் முதலாளி வர்க்கமோ இவர்கள் போராட்டத்தைத் தீர்ப்பதற்கு ஏற்றதான வழிமுறைகளைக் காண முயலாமல் இவர்களது எதிர்ப்பைத் தமது ஆதிக்கத்தால் நசுக்கவும் மழுங்கடிக்கவுமே முயற்சித்தது.

ஆனால் பசித்த வயிறுகளோ உரிமை வேட்கைக்கான சிந்தனைகளோ மேலோரின் எதிர்ப்பைத் துச்சமெனத் தூக்கி வீசிவிட்டு தியாகத்துடனும் உறுதியோடும் உழைத்துப் போராடித் தம் உரிமையைப் பெற பல வழிகளிலும் முயன்றனர். மிக மிக ஏழ்மை நிலையில் வாழ்ந்த அன்னாடங் காய்ச்சிகளான கூலித் தொழிலாளர்கள், தொழிற்சாலைகளில் சிற்×ழியர்களாகப் பணி செய்யும் பெண்கள், தையல் தொழில் செய்வோர் துணி துவைப்போர், அச்சுத் தொழிற்சாலையில் வேலை செய்வோர், சாலைகளைத் துப்புரவு செய்வோர் எனப் பல தொழில்களிலும் ஈடுபட்டிருந்தோர் ஒன்று சேர்ந்தனர்.

சம்பளம் போதாமை, நீண்ட நேரம் வேலை, ஓய்வின்மை, லீவு இன்மை, ஆண்களுக்குச் சமமான சமசம்பளமின்மை, தொழிலில் உயர்ச்சி இன்மை போன்ற குறைபாடுகளைச் சுட்டிப் பல போராட்டங்களைத் தொடங்கினர். பெண்கள் வீதியில் இறங்கி மறியல் செய்தும் ஊர்வலங்கள் நடத்தியும் கோஷங்கள் எழுப்பிப் போராடியும் பல்லாண்டு காலமாக எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி ஈற்றில் பெற்ற வெற்றிக் கனியே இந்த மார்ச் 8ஆம் நாளான மகளிர் தினமாகும்.

அகில உலகமும் ஏற்றுக் கொண்ட மகளிர் தினமான இந்த "மார்ச் 8ம் நாள்' ஒரு சில பெண்களாலோ அல்லது ஒரு சில ஆண்டுகள் போராட்டம் நடத்தியதன் காரணமாகவோ பெற்றுக் கொண்ட விழிப்புணர்வல்ல. பல்லாயிரக் கணக்கான பெண் தொழிலாளிகள் சுமார் 50, 60 ஆண்டுகள் தொடர்ந்து தம் உழைப்பைச் சுரண்டுவதற்கும் அவமதிப்பதற்கும் அங்கீகாரமின்றித் தவிப்பதற்கும் எதிரான போராட்டத்தை பல்வேறு வடிவங்களிலும் பல்வேறு நாடுகளிலும் இடையறாது தொடர்ந்து நடத்திக் கொண்டே வந்தனர். ஆரம்பத்தில் ஆண் உழைக்கும் வர்க்கத்தினரோடு இணைந்து தொழிற்சங்கங்களிலுள்ள பெண்களும் ஒன்றுபட்டு வர்க்கப் போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்து வந்த பெண்கள் காலகதியில் தமது தனித் தன்மையைப் பற்றிக் கவனஞ் செலுத்தினர்.

அதன் விளைவாக தையல் துறையில் ஈடுபட்டிருந்த நியூ இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் தொழிலாளிகள் ஒன்றுகூடி 1820ல் முதன் முதலாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுத் தமது ஒற்றுமையையும் உரிமைக்கான போராட்டத்தையும் பொறுப்புக்களையும் உறுதிப்படுத்தினர்.

தையற் தொழிற்சாலைகள், நூல் நூற்கும் நூற் பாலைகள் என்பனவற்றில் தொழில் செய்யும் பெண்களை அங்கு வேலை கொள்வோர் ஆடு, மாடுகள் போலவே பாவித்தனர். ஒரு வாரத்தில் ஒரு பெண்ணுக்கு 81 மணித்தியால வேலை கொடுப்பர். அதற்கான கொடுப்பனவு மூன்றே மூன்று டாலர்கள்தான். அதிலும் ஒன்றே கால் டாலரை அவள் தங்கும் விடுதிக்கும் உணவுக்குமாகக் கழித்துக் கொண்டு ஒன்றே முக்கால் டாலரே அவள் கைக்குப் போகும். இவ்விபரம் மசாசூ செட்ஸில் இருந்த "லோவெல்' என்ற நூற்பாலையில் 1830களில் இடம்பெற்ற விடயமாகும்.

பெண்கள் அங்கே அதிகாலை 5 மணிக்கே வேலைக்குச் செல்ல வேண்டும். சாப்பாட்டிற்கான நேரமாக அரை மணித்தியாலம் மட்டுமே ஒதுக்கப்படும். கழிப்பறைக்குச் செல்வது ஓய்வின்றித் தொடர்ந்து வேலை செய்வது என்பனவற்றிலெல்லாம் மிகவும் இறுக்கமான சட்டாம்பிள்ளையாக இருந்தே வேலை வாங்குவர். சாப்பாட்டிற்கு வேறு வழியின்றி வறுமை வாட்டவும் உடம்பின் சோர்வையும் உள்ளத்தின் வாட்டத்தையும் பொருட்படுத்தாமல் ஓடாக உழைத்தும் விரைவில் நோயாளியாக உருமாறி விடுவர். அதனால் தொடர்ந்தும் தொழில் செய்ய முடியாமல் பல பெண்கள் அத்தொழிற்சாலையை விட்டு வெளியேறினர். அதிகார மிடுக்கைத் தம் கரங்களில் ஏந்திக் கொண்ட தொழிற்சாலை முதலாளி வர்க்கம் வாடி வதங்கிய பெண்களைத் திறமையற்றோர் என்று வெளியேற்றியும் சின்னஞ்சிறு தவறு செய்தோரைக் கூடத் தண்டிக்கும் முகமாக வேலை தெரியாதவர்கள் எனக் கூறி விடை கொடுத்தனுப்பியும் வைத்தமையால் இப்பெண்கள் பட்ட இன்னலுக்கு ஓர் எல்லை இல்லை.

போக்கிடமற்ற பெண்கள் தன்மானமும் சுவாலையாகச் சீறிட ஐயையோ! ஐயையோ! அழகிய இளம் குமர்ப் பெண்களாகிய நாம் இறக்கவா, மெலிந்து வாடிக் கருகவா இத்தொழிற்சாலைக்குத் தொழில் செய்யப் போகிறோம் எனத் தம் ஆற்றாமையை வீதிகள் தோறும் ஓலமிட்டு அரற்றித் திரிந்தனர். சில நாட்களின் பின்னர் இவர்கள் திரும்பவும் வேலையில் சேர்க்கப்பட்டனர். எல்லோரும் ஒன்றிணைந்து "லோவெல் உழைக்கும் பெண்கள் சீர்திருத்தச் சங்கம்' என்றொரு அமைப்பினை 1844ல் ஏற்படுத்திப் பல முற்போக்கான விடயங்களில் கவனம் செலுத்தினர். 1857இல் நியூயோர்க்கில் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த பெண்கள் எதிர்ப்பு இயக்கமொன்றைத் தொடக்கி நடாத்தினர்.

1908இல் தையல் தொழிற்சாலைகளில் தொழில் பார்க்கும் பெண்கள் வேலையைப் புறக்கணித்து குறைந்த வேலை நேரம், உழைப்புக்கேற்ற கூலி வாக்குரிமை என்பனவற்றை முன்வைத்துச் சுமார் பதினையாயிரம் பெண்கள் ஒன்றிணைந்து கோரிக்கை வைத்து நியூயோர்க் நகரில் அணிவகுத்து வீதி வலம் வந்து வேலை நிறுத்தம் செய்தனர்.

இப்படியே படிப்படியாகப் பல நாடுகளிலும் போராட்டங்கள், மறியல், ஊர்வலங்கள், கோரிக்கைகள் அடங்கிய கோஷங்கள் எனப் பெண்களே தமது சொந்த உரிமைகளையும் சமத்துவமான வாழ்வையும் வேண்டிப் பல்வேறு நடவடிக்கைகளில் காலூன்றினர்.

உழைக்கும் பெண்களின் போராட்டத்தோடு இவற்றை ஆதரிக்கும் நடுத்தர வர்க்கத்தினர் அறிவு ஜீவிப் பெண்கள் எனப் பலரும் இணைந்து ஆதரவு காட்டினர்.

இத்தகைய போராட்டங்களில் ஈடுபட்டிருந்தோர் நடுநடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாது குளிரைத் தாங்கும் வெது வெதுப்பான உடைகள் கூட இன்றிக் குளிரைத் தாங்கிக் கொண்டு பல வாரங்கள் தொடர்ந்தும் மறியலில் ஈடுபட்டிருந்தனர். சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டும் என்பது போல இதுவரை காலமும் அடக்கியொடுக்கப்பட்டு நசுக்கப்பட்டிருந்த பெண்கள் வீறு கொண்டெழுந்ததன் விளைவாகத் தமது விடுதலையும் உரிமையும் கருதி மிக வைராக்கியத்துடன் துணிந்து போராடினர். இத்தனை போராட்டங்களின் பின் இவற்றின் பயனாக அமெரிக்கா முழுவதும் 1908ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் நாள் பெண்கள் வாக்குரிமை மற்றும் அரசியல் பொருளாதார உரிமைகள் ஆகியவற்றை முன்நிறுத்தி ஊர்வலம் நடத்துவதோடு அன்றைய தினத்தைப் பெண்கள் தினமாகப் பிரகடனப்படுத்தியது. அத்தோடு இத்தினத்தைச் சர்வதேச பெண்கள் நிகழ்ச்சியாக அடையாளப்படுத்த வேண்டுமெனவும் கோபென்ஹேகனில் நடந்த இரண்டாவது சர்வதேச சோஷலிசப் பெண்கள் தினத்தில் முடிவு செய்யப்பட்டது.

1913இல் பெப்ரவரி இறுதி ஞாயிறன்று பெண்கள் தினமாக நடத்த வேண்டுமென இப்படிப் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

சர்வதேச அளவில் புகழ் பெற்றவரும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவரும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான கிளாரா ஜெட்கின் என்பவர் அமெரிக்க சோசலிச இயக்கத்தவருடனும் உழைக்கும் பெண்கள் சார்பிலும் பெண்கள் மாநாடு ஒன்றில் ஒரு கருத்தை முன்வைத்தார்.

அதாவது உலகம் முழுவதிலுமுள்ள பெண்களின் உரிமை இயக்கத்தை வரவேற்று அங்கீகரிப்பதற்கும் எல்லாப் பெண்களுக்கும் வாக்குரிமை பெற உதவுவதற்கும் ஒரு பெண்கள் தினம் அவசியமென்பதை உணர்த்தி 1910ஆம் ஆண்டு கோபன்ஹெகனில் இடம்பெற்ற பெண்கள் மாநாட்டில் ஒவ்வொரு வருடமும் ஒரு தினத்தைப் பெண்கள் தினமாகப் பிரகடனப்படுத்தி மேலே குறிப்பிட்டுள்ள பெண்களின் உரிமை தொடர்பாக வற்புறுத்துவதெனவும் இத்தினம் அகில உலகிலும் ஒரே நாளில் அனுஷ்டிக்கப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. உழைக்கும் பெண்களின் பல்வேறு வடிவிலான போராட்டங்கள் சோசலிச இயக்கப் பெண்களின் ஒத்துழைப்பு, கம்யூனிஸ இடதுசாரி இயக்கப் பெண்களின் உதவிகள் எனப் பல்வகையான பெண்களின் உழைப்பாலும் போராட்டங்களினாலும் புரட்சிகரமான ஆர்ப்பாட்டங்கள் எழுச்சிகளினாலுமே வருடா வருடம் மார்ச் 8ஆம் நாள் மகளிர் தினமாக நினைவூட்டவும் உழைக்கும் மகளிரின் உரிமைகள் என்பன பற்றிச் சிந்திக்கவும் பொதுவாகவே மகளிரின் குறை நிறைகள், சமத்துவம், மேம்பாடு என்பன பற்றிக் கருத்துக்கள் பரிமாறவும் உரிய தினமாக மார்ச் மாதம் 8ஆம் நாள் மகளிர் தினமாக மலர்ந்துள்ளது. பெண்களுக்குக் கிடைத்த இந்த அரிய தினத்தை நாம் அனைவருமே நன்கு பயன்படுத்துவதில்தான் பெண்களின் மேம்பாடு பெரிதும் தங்கியுள்ளது. ___

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv