விபச்சாரம், கர்ப்பம் கலைப்பு, விவாகரத்து! தாயகத்தின் இன்றைய நிலைவரம்

யாழ். மாவட்டத்தில் குறைந்த வயதில் பெண்கள் கர்ப்பம் தரித்தல் மற்றும் கருக்கலைப்புச் செய்தல் போன்ற சம்பவங்கள் அண்மைக் காலங்களில் அதிகரித்து இருக்கின்றன என்று மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் திருமதி சரோஜா சிவசந்திரன் தெரிவித்து உள்ளார்.


வட மாகாணத்தின் அபிவிருத்தியும், வளங்களின் பயன்பாடும், என்கிற தலைப்பிலான ஆய்வரங்கு ஒன்று யாழ்.மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஏற்பாட்டில் சிந்த்தனைக் கூடம் அமைப்பினால் அண்மையில் நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவர் இவ்வாறு பேசினார். இச்சம்பவங்களுடன் 18 வயதுப் பெண்கள் முதல் 23 வயதுப் பெண்கள் வரை தொடர்பு பட்டுள்ளனர் என்றும் ஒரு வாரத்தில் மட்டும் ஏழு முறைப்பாடுகள் சராசரியாக கிடைக்கின்றன என்றும் கூறினார்.

இவர் இங்கு மேலும் குறிப்பிட்டவை வருமாறு:-

"யாழ். மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் தற்போது விபச்சாரம் நடந்து கொண்டிருக்கின்றது. இதனை எங்களுடய கலாசாரம், பண்பாடு போன்றவற்றை முன்னிலைப்படுத்தி நாங்கள் மறைத்து வருகின்றோமே தவிர யாராலும் மறுத்து விட முடியாது.

18வயது முதல் 23 வயது வரையான இளம் பெண்கள் கர்ப்பம் தரித்து கர்ப்பத்தைக் கலைக்கின்றமைக்காக வருகின்றார்கள்.

எமது நிறுவனத்துக்கு ஒரு வாரத்தில் 7 முறைப்பாடுகள் வரை சாதாரணமாக கிடைக்கப் பெறுகின்றன.இப்பெண்கள் கர்ப்பத்தைக் கலைக்கின்றமையோடு நின்று விடாமல் விவாகரத்துப் பெற்றுத் தர வேண்டும் என்றும்கோருகின்றனர்.

இங்கே எமக்குப் பல கேள்விகள் எழுகின்றன இந்தப் பெண்கள் வேறு யாருடனும் தொடர்புபட்டு உள்ளார்களா? வேறு யார் மூலமாவது பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்களா? ஆனால் பாலியல் ரீதியான எதிர்பார்ப்புகளும், தேவைகளும் எல்லா மனிதர்களுக்குமே இயற்கையானவையே. அவற்றை பிழை என்று கூறமுடியாது.

இன்றைக்கு இவ்வளவு பிரச்சினைகளுக்கும் நாங்களும் ஒரு வகையில் காரணமானவர்கள். எனவே இவற்றுக்கான பரிகாரங்களையும் நாங்கள் தேடியே ஆக வேண்டும். இந்தியா, பாகிஸ்தான் மோதலுக்குப் பின்னர் மகாத்மா காந்தி கூறினார் விதவைகளை மறுமணம் செய்யுங்கள் என்று.

அதற்கு எங்களில் எத்தனை பேர் தயாராகவுள்ளோம்?வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் யாழ்ப்பாணத்தில் சீதனத்துடன் பெண் தேடுகிறார்கள். நிலைமை இப்படியிருக்க பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களிடம் இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என எப்படிக் கூற முடியும்? 89 ஆயிரம் விதவைகள் வாழ்கிறார்கள்.

அவர்களை எப்படி வாழ வைக்கலாம்?,என்ன செய்யலாம் என்பன பற்றி எல்லாம் புலம்பெயர்ந்த மக்கள் கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒருவரும் இளம் விதவைப் பெண்களுக்கு மறுவாழ்வு கொடுக்கத் தயாராக இல்லை.

உண்மையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு கொடுக்கப்படாவிட்டால் சமூகப் பிறழ்வுகள் தவிர்க்க முடியாதவை ஆகி விடும். பாடசாலை மாணவர்கள் சீருடையைக் கழற்றி வைத்து விட்டுப் போகிறார்கள். அந்த அளவுக்கு மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் விபச்சாரம் நடக்கின்றது.

இன்றைக்கு இளம்பெண்கள் செல் போனில் பேசுகிறார்கள். -நான் உன்னுடன் கதைக்கிறேன் நீ "றீலோட்' போடு -என்று கூறுகிறார்கள். நவீனங்களை மறுக்கவில்லை. ஆனால் அது பயன்படும் விதத்தில் நாம் அக்கறையாக இருக்க வேண்டும் அதற்காக இன்றைக்குப் பெண்கள் முன்னேறவில்லை என நான் சொல்ல மாட்டேன்.

எனினும் கடமை புரியும் இடங்களில் பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். மோதல்களினால் பாதிக்கப்பட்ட பெண்களில் 29 வீதமானவர்கள் இன்றைக்கும் தங்கி வாழ்பவர்களாக உள்ளனர்.

இதனை விட கணவன்மார் பற்றிய தகவல்கள் தெரியாதவர்களாக, கணவன்மாரைப் பிரிந்து வாழ்பவர்களாகவும் உள்ளனர். இவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் அபிவிருத்தி அமைய வேண்டும்.

இதே வேளை அபிவிருத்தி பற்றிப் பேசுவதானால் ஒரு நாட்டின் அபிவிருத்தியில் பெண்களுக்கான அபிவிருத்தி என ஒன்று கிடையாது. காரணம் அபிவிருத்தி பொதுமையானது அமித்தியா சென் சுட்டிக் காட்டியமையைப் போன்று அபிவிருத்தியில் ஜனநாயக விழுமியங்களை இணைக்கின்ற போது அது செழுமை பெற்று சமூகத்தின் அடிப்படைக் கலாசார விழுமியமாக மாற்றம் அடையும்.

எனவே அபிவிருத்தி தன்னிச்சையானதாகவோ, கட்சிகள் சார்ந்ததாகவோ அமைந்து விடக் கூடாது. அப்படி அமைந்தால் அது சிறுபான்மை மக்களைப் பாதிக்கும் ஒன்றாகவே அமையும். இன்றைக்கு அரசு முழு வளங்களையும் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்கு நினைக்கின்றது.

அரச சார்பற்ற நிறுவனங்களையும் கூட. குறிப்பாகக் கிளிநொச்சியில் ""போமிற்'' இல்லை, ஆவணம் இல்லை என மக்களை ஓரம் கட்டிக் கொண்டு இருக்கின்றது. பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக எந்தக் கவலையும் கிடையாது."
Share0

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv