உலகப் பொருளாதார நெருக்கடி என்றால் என்ன ?

அமெரிக்காவைச் சார்ந்து தான் உலக நாடுகளின் பொருளாதாரம் பிணைக்கப்பட்டிருக்கிறது. பரிவர்த்தனைகள் அனைத்தும் அமெரிக்க கரன்சியான, “டாலரில்’ தான் நடக்கிறது. இதனால், அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உலகளவிலும் எதிரொலித்தது.கடந்த 2008ல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், 2001க்கு செல்ல வேண்டும். அங்கிருந்து தான் இந்த கதை ஆரம்பிக்கிறது.


“டாட் காம் பபுள்’ நெருக்கடி : கடந்த 1990களில், இணையதள நிறுவனங்கள் துவங்க ஆரம்பித்தன. இணையதளங்கள் மிக விரைவில் அமோகமாக வளர்ச்சி பெறும் என்று எண்ணிய பலர், அவற்றின் பெயரில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தனர். இணையதளத்துக்கு கொஞ்சம் கூட தொடர்பில்லாத நிறுவனங்கள் கூட தங்கள் பெயருக்கு பின்னால், “டாட் காம்’ சேர்த்தால் அவர்களுக்கு அமோக வசூல் தான் என்ற நிலைமை.கடந்த 2000, மார்ச் மாதம் இந்த பங்குகளில் பெருத்த அடி விழுந்தது. இதன் காரணமாக, இணையதள தொழில் என்பதன் மாயை வெளியுலகுக்குத் தெரிய வந்தது. இது தான் பொருளாதார நெருக்கடியின் ஆரம்பம்.அமெரிக்காவில் 60ல் இருந்து 70 சதவீதம் பேர், பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தனர். அவர்கள் இந்தப் பங்குகளை வாங்கியிருந்தனர். இவை சரிய ஆரம்பித்த பின் பெரிய நஷ்டம் ஏற்பட்டது.இதையடுத்து, 9/11 என்று குறிப்பிடப்படும் இரட்டை கோபுர தகர்ப்பு நடந்தது. 1987ல் இருந்து 2006 வரை அமெரிக்காவின் மத்திய ரிசர்வ் வங்கியான, “பெடரல் ரிசர்வ்’ வங்கியின் தலைவராக இருந்த ஆலன் கிரீன்ஸ்பான், பங்குச் சந்தை சரிவையடுத்து, பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் நடவடிக்கையாக, வங்கிகளின் வட்டி விகிதத்தை 1.25 சதவீதமாகக் குறைத்தார். அதற்கு முன் 4 அல்லது 5 சதவீதம் இருந்தது.

வாரி வழங்கப்பட்ட வீட்டுக் கடன் : “டாட் காம் பபுள்’ நெருக்கடி காலகட்டத்திலேயே மிகக் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் கொடுக்க ஆரம்பித்தனர். இப்போது மேலும் வட்டி விகிதம் குறைந்தவுடன், அமெரிக்காவில் நடுத்தர வர்க்கத்தினர் எல்லாரும் வீட்டுக் கடன் வாங்க ஆரம்பித்தனர். கடனை திருப்பிக் கொடுக்கும் தகுதி வாங்குபவருக்கு இருக்கிறதா என்பதை ஆராயாமல், கேட்டவர்களுக்கு எல்லாம் கடன் கொடுக்க ஆரம்பித்தது அமெரிக்கா. தகுதி பார்க்காமல் கொடுக்கப்பட்டதால் இந்தக் கடன், “சப் ப்ரைம்’ கடன் என்றழைக்கப்படுகிறது. இந்தக் கடனை வாங்கி வீடு வாங்குபவர்கள், ஆறு மாதத்துக்கு வட்டி கட்டிய பின் வீட்டை விற்றனர். அதில் வரும் லாபத்தில் மீண்டும் கொஞ்சம் வட்டி கட்டினர். அதன் பின், அவர்கள் வங்கி பக்கம் எட்டிப் பார்க்க மாட்டார்கள். இப்படி கடன் வாங்கியவர்களில் பெரும்பாலானோர் வட்டி கட்டாமல் தப்பிக்க ஆரம்பித்தனர்.இன்னொரு திட்டமும் முன்வைக்கப்பட்டது. முதல் ஒரு சில ஆண்டுகளுக்கு வட்டி கட்டாமல், வீடு வாங்கும் திட்டம் அது. இந்த வட்டி கட்டாத ஆண்டுகளுக்கான வட்டியை பின்பு கட்டப்படும் மாதத் தவணையில் சேர்த்து கழித்து விடுவர்.இந்தக் கடனுக்கு குறைந்த அளவில் வட்டி வசூலித்தனர். கடன் தொகைக்கும், வாங்கியவர்கள் திருப்பியளிக்கும் தொகைக்கும் 1 அல்லது 1.5 சதவீதம் மட்டுமே வித்தியாசம் இருந்தது. இதன் மூலம் பொருளாதாரம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஓரளவு அதில் உண்மையும் இருந்தது. ஆனால், பெரும்பான்மையான வீட்டுக் கடன்கள் வராக் கடன்களாகிவிட்டன.

“சப் ப்ரைம்’ நெருக்கடி : கடன் அளிக்கும் போதே, அவற்றை அமெரிக்க வங்கிகள் “கடன் பத்திரங்களாக’ மாற்றி உலக சந்தையில் விற்று விட்டன. வங்கிகளின் தாராள போக்கினால் பொருளாதாரத்தில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டது. 30 கோடி மக்களில் 25 கோடி பேருக்கு வீடு, கார்கள் இருக்கின்றன. எவ்வளவு தான் வாங்குவர்?கடனுக்கான வட்டி விகிதம் ஏற ஆரம்பித்தது. மாதத் தவணை கட்ட இயலவில்லை. “வீடு வேண்டாம்’ என்ற மனநிலைக்கு மக்கள் திரும்பினர். அதேநேரம், வீட்டு விலையும் சரியத் துவங்கியது. அன்றைய நிலையில், தேவையை விட கூடுதலாக ஆளில்லாமல் ஒரு கோடி வீடுகள் இருந்தன என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.ஐம்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டை, இரண்டு கோடிக்கு விற்று, 50 லட்சத்தை கட்டிவிட்டு, மீதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்து பணம் பெருக்கலாம் என்பது அவர்களின் திட்டம். அப்படியும் கொஞ்ச காலம் நடந்தது.ஆனால், வங்கிகள், பங்குச் சந்தைகளோடு பிணைக்கப்பட்டிருந்தன. பங்குச் சந்தையில் ஏற்பட்ட நெருக்கடி, வங்கிகளில் எதிரொலித்தது. வங்கியில் “கரன்சி’ இல்லை; மாறாக, பத்திரம் தான் இருந்தது. கடன் கொடுக்கும் திறனை இழந்து வங்கி திவாலானது. நாட்டில் பணப்புழக்கம் குறைந்தது. இதைத் தான், “சப் ப்ரைம்’ நெருக்கடி என்றனர்
.

சமச்சீரற்ற நிலை : அமெரிக்காவின் “செக்யூரிட்டைசேஷன்’ என்ற விதிப்படி தான் வங்கிகள் தாம் வைத்திருந்த கடன் பத்திரங்களை, “ரேட்டிங் ஏஜன்சி’ மூலம் மதிப்பிட்டு அவற்றை உலகச் சந்தையில் விற்றன. இந்தக் கடன் பத்திரங்களை சீனா, ஜப்பான் போன்ற நாடுகளும் வாங்கின.அமெரிக்க வங்கிகள் தமது கடன் பத்திரங்களை கைமாற்றி விட்டன. மிச்சமிருந்த பத்திரங்களை அரசு பணம் கொடுத்து சரிக்கட்டியது.இந்தியப் பொருளாதார நிபுணரும், மத்திய ரிசர்வ் வங்கியின் அப்போதைய தலைவருமான ஒய்.வி.ரெட்டியின் ஆலோசனையின் பேரில் இந்தியா மட்டும் அந்தக் கடன் பத்திரங்களை வாங்கவில்லை. இதற்கிடையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க, அமெரிக்கா கரன்சியை அச்சடிக்க ஆரம்பித்தது. இதனால், டாலர் புழக்கம் அதிகரித்தது. அதன் விளைவாக யூரோ, யென், யுவான் போன்ற பிற நாடுகளின் கரன்சி புழக்கமும் அதிகரித்தது. இந்த அதிகரிப்பால் பணவீக்கம் ஏற்பட்டது. பணவீக்கம் உயர்ந்ததால் விலைவாசி அதிகரித்தது.அமெரிக்கா அடிப்படை உற்பத்தியில் ஈடுபடாமல், உயர் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், தயாரிப்புகளில் மட்டும் ஈடுபட்டது. தற்போதும் அதுதான் நிலைமை. அடிப்படை உற்பத்திப் பொருட்களை சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விடுகிறது. ஒரு பக்கம், அமெரிக்கா நுகர்கிறது. இன்னொரு பக்கம், மற்ற நாடுகள் உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கு அனுப்புகின்றன. இதை “உலக சமச்சீரற்ற நிலை’ என்கின்றனர் நிபுணர்கள். இதில், ஒரு பக்கம் அடி விழுந்தாலும் மற்றொரு பக்கமும் அதன் தாக்கம் இருக்கும்.

அமெரிக்க நுகர்வு கலாசாரம் : இந்தப் பிரச்னைக்கெல்லாம் அடிப்படை காரணம், அமெரிக்காவின் நுகர்வு தான். ஏன் அமெரிக்கா நுகர்வுக் கலாசாரத்துக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறது? “வீட்டில் சும்மா இருக்க வேண்டாம், ஷாப்பிங் செல்லுங்கள். அதன் மூலம் உங்கள் கையில் இருக்கும் காசு சந்தைக்கு வந்து அப்படியே ஒரு சுழற்சியில் ஈடுபடும். இதுதான் பொருளாதாரத்தை வளர்க்கும்’ என்பது தான் அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கை.இந்த கொள்கை உருப்பெறுவதற்கு எது காரணமாக இருந்தது? கலாசாரம். ஒரு நாட்டின் கலாசாரம் தான் அதன் சகல விஷயங்களுக்கும் அடிப்படை. ஆசிய நாடுகளுக்கும், மேற்கத்திய அமெரிக்க நாடுகளுக்கும் இடையில் ஒரு பெரிய வித்தியாசம் இந்தக் கலாசாரம் தான்.அமெரிக்காவில், பெண்கள் பொருளாதார ரீதியில் சுயசார்பு பெற்ற பின், “குடும்பம்’ என்ற அமைப்பு சிதைந்தது. குடும்பம் இல்லாததால் அதைக் காக்க வேண்டும் என்ற கடமையும் இல்லாமல் போனது.அதனால் ஏற்பட்ட பெரிய பாதிப்பு, தனிநபர் சேமிப்பு குறைந்தது தான். சம்பாதிப்பது எல்லாம், செலவழிப்பதற்காகத் தான் என்ற கொள்கை உருவானது. இதை அந்நாட்டுப் பொருளாதார நிபுணர்களும் அரசும் வரவேற்றனர்.பெற்றோர், குழந்தைளைக் காக்க வேண்டிய குடும்பத் தலைவனின் கடமை, அரசு தலை மேல் விழுந்தது.

சேமிப்பின் அவசியம் : தனிநபர்கள் சம்பாதித்ததை எல்லாம் ஷாப்பிங்கில் ஆரம்பித்து எல்லாவற்றிலும் செலவழிக்க ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் இது பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வந்தது என்றாலும், அதையடுத்து ஒரு பெரிய நெருக்கடியையும் கொண்டு வந்து விட்டது.சீனா, இந்தியா, கொரியா, ஜப்பான், இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகள் இதற்கு நேர்மாறானவை. குடும்பம் என்ற அமைப்பு இவற்றில் இன்றும் இருப்பதால், சேமிப்பு சரியான நிலையில் உள்ளது.அமெரிக்காவில் சேமிப்பு பூஜ்யம் என்றால், சீனாவில் சேமிப்பு 35 சதவீதமாகவும், இந்தியாவில் 25ல் இருந்து 30 சதவீதமாகவும் உள்ளது. குடும்பத்தை மையமாக வைத்து தான் பொருளாதாரம் உள்ளது. இதுதான் பொருளாதார அடிப்படை கட்டமைப்பு. சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இது தான் பொருளாதாரத்தின் அடிப்படை. அமெரிக்காவில் இது நேர்விரோதம்.இது பற்றி, பிரான்சிஸ் புக்கியாமா என்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர், தான் எழுதிய, “ட்ரஸ்ட்’ என்ற நூலில், “எல்லா நாட்டுக்கும் அமெரிக்கப் பொருளாதார மாதிரி ஒத்து வராது. அந்தந்த நாட்டுக் கலாசாரத்தின் அடிப்படையில் தான் அவற்றின் பொருளாதாரம் அமைய வேண்டும்’ என்பதை வலியுறுத்தியுள்ளார். பொருளாதாரம் என்பது கலாசாரத்தை மையமாகக் கொண்டது என்பதை இப்போது இந்த நெருக்கடிக்குப் பின், பல பொருளாதார நிபுணர்களும் ஒத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்திய மனநிலை : அமெரிக்காவை ஒப்பிடும் போது இந்தியா சேமிப்பு நாடு; சீனாவோடு ஒப்பிடும் போது இந்தியா நுகர்வு நாடு. ஆண்டு முழுவதும் உள்ள நமது பண்டிகைகள், விழாக்கள் அனைத்தும் நுகர்வு கலாசாரத்தோடு தொடர்புடையவை தான். இதன் மூலம் பணப்புழக்கம் அதிகரிக்கும்; பொருளாதாரம் செழிப்பாகும்.அதேநேரம், நம்மூரில், கடன் வாங்குவது என்பது இன்றும் ஒரு அவமானமாகவே கருதப்படுகிறது. தேவைக்கு கடன் வாங்குவதை நம்மவர்கள் தவறு என்று சொல்லவில்லை. சக்திக்கு மீறி கடன் வாங்குவதைத் தான் நமது கலாசாரம் தவறு என்கிறது.ஆனால், அமெரிக்காவில் ஒருவன் துணிந்து, “நான் திவாலாகி விட்டேன்’ என்று சொல்லி விட்டு, அவனே மறுபடியும் தொழில் துவங்க முடியும். இந்தியாவில் இது நடக்காது. ஒருவன் திவாலாகி விட்டான் என்றால் அவனால் மறுபடியும் தொழில் துவங்க முடியாது.அமெரிக்காவில் அதிகளவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பதால் அதன் வீழ்ச்சி பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், இந்தியாவில் 3 சதவீதம் பேர் தான் பங்குச் சந்தையோடு தொடர்பில் உள்ளனர். பங்குச் சந்தை விழுந்தால் 2 சதவீதம் பேருக்கு பாதிப்பு இருக்கும். ஒரு சதவீதம் பேருக்குத் தான் பெரியளவில் பாதிப்பு இருக்கும். மற்றபடி 97 சதவீதம் பேருக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது.இந்தியாவின் மொத்த முதலீடு 38 சதவீதம்; சேமிப்பு 37 சதவீதம். 1 சதவீதம் வெளிநாட்டு முதலீடு. அந்த 1 சதவீதம் வராமல் போய்விட்டாலும் நமக்கு ஒரு பாதிப்பும் இல்லை. நமது சேமிப்பு நம்மைக் காப்பாற்றும்.நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள் பெரும்பான்மையும் இங்கேயே நுகரப்படுகின்றன. அதன் மூலம் செலாவணி கிடைக்கிறது. அது சேமிப்பாகிறது. பின்பு அதுவே முதலீடாகிறது.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், நமது சேமிப்பு 23 சதவீதமாக இருந்தது. அப்போது சில பொருளாதார நிபுணர்கள், “இந்தியாவில் சேமிப்பு இவ்வளவு இருப்பது ஆபத்தானது; நுகர்வு அதிகரிக்க வேண்டும்; அதனால் உற்பத்தி அதிகரிக்கும்; பொருளாதாரம் செழிக்கும்’ என்றனர். ஆனால், அது நடக்கவில்லை.கடந்த 2008ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி இந்தியாவை பெருமளவில் பாதிக்காததற்கு இதுதான் காரணம். அதேநேரம், உலகளாவிய அளவில் இந்தியர்கள் பரவியிருப்பதால், சிறிது பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்.இந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமானால், அமெரிக்கா சேமிக்கத் துவங்க வேண்டும். சீனா நுகரத் துவங்க வேண்டும். சேமிப்பைக் குறைக்க வேண்டும். இதன் மூலம் நெருக்கடி ஓரளவுக்கு மாறத் துவங்கும்.

ஐரோப்பிய நெருக்கடி : ஐரோப்பாவில், கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் அயர்லாந்து நாடுகளில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல், அந்நாடுகளின் தவறான உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ளது.இதனால், ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த நாடுகளும் பாதிக்கப்படத் தான் செய்யும். ஏனெனில், ஐரோப்பிய யூனியனில் இப்போது “யூரோ’ கரன்சி புழங்குவதால், கிரீஸ், அயர்லாந்து நெருக்கடியால், கரன்சி மதிப்பில் பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு, ஜெர்மனி போன்ற நாடுகளையும் பாதிக்கும்.இதன் விளைவாக, யூரோ கரன்சி கூட்டணியில் இருந்து ஜெர்மனி, பிரிட்டன் போன்றவை விலகலாம். ஜெர்மனி தனது பழைய கரன்சியான “மார்க்’குக்குத் திரும்பலாம் அல்லது கிரீஸ் போன்ற நாடுகள் யூரோவை விட்டு விட்டு தங்களது பழைய கரன்சிக்குத் திரும்பலாம். மொத்தத்தில் “யூரோ’ கரன்சியில் பிளவு ஏற்படவே வாய்ப்புகள் அதிகம்.ஒரு முன்னெச்சரிக்கை தான்கடந்த 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஒரு முன்னறிவிப்பு தான். முழு நெருக்கடி இனிமேல் தான் ஏற்படப் போகிறது. அது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். ஒரே நேரத்தில் டாலரும், யூரோவும் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் ஏதாவது ஒன்று முழுமையாக விழும் போது, அந்த பயங்கர நெருக்கடி தோன்றும்.இது பற்றி நாம் மிகச் சரியாக ஆரூடம் கூற முடியாது என்றாலும், இன்னொரு பயங்கர நெருக்கடி காத்திருக்கிறது என்று மட்டும் கூற முடியும். இந்த நெருக்கடி அமெரிக்கா, பிரிட்டனை கடுமையாகத் தாக்கும். அதில் இருந்து அந்நாடுகள் மீள்வது மிகக் கடினம். ஆனால், அதனாலும் இந்தியா பெருமளவில் பாதிக்கப்படாது.

அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏன்? அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு நிபுணர்கள் சில முக்கியமான காரணங்களை முன்வைக்கின்றனர். அவை:
* தவறான பொருளாதாரக் கொள்கை. சேமிப்பை விட, முதலீடு மற்றும் செலவழிப்புக்கு அதிக ஊக்கமளித்தது அந்தக் கொள்கை. அங்கு ஒருவர், தன் வாழ்க்கையையே கடனில் கழிக்க வேண்டிய அவல நிலை இதனால் ஏற்பட்டது. தற்போது ஒவ்வொரு அமெரிக்கனின் தலையிலும் 17 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் (36,314 டாலர்) கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது.
* சந்தையை விட உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தியதால், உற்பத்திப் பொருட்களின் தேக்கம். சந்தையின் ஸ்திரத்தன்மையை சரியாகப் புரிந்து கொள்ளாதது.
ஊ இணையதள நிறுவனங்கள், பங்குச் சந்தையில் செய்த மோசடியால் ஏற்பட்ட “டாட் காம் பபுள் நெருக்கடி!’

ஊ அமெரிக்காவில் வங்கிகள், கடன் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் முதலீட்டுச் சந்தையிலும் புகுந்ததால், அவற்றோடு, பங்குச் சந்தை, நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் என சங்கிலித் தொடராக முதலீட்டுச் சந்தை நீண்டது. ஒன்றில் அடி விழுந்ததால் மற்ற அனைத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.

*”சப் ப்ரைம்’ நெருக்கடியால் வங்கிகளில் ஏற்பட்ட வீழ்ச்சி, பங்குச் சந்தை, நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என அடுத்தடுத்து அமெரிக்க நிறுவனங்களை வீழ்ச்சியடைய வைத்தது.

* கடந்த 2008-09ல் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் இயங்கிய ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு, கிரைஸ்லர் ஆகிய மூன்று கார் உற்பத்தி நிறுவனங்களின் தயாரிப்புகள் விலை போகாமல் முடங்கின. இதனால், பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.அமெரிக்க பொருளாதார நெருக்கடியால், அங்கு கடந்த மூன்றாண்டுகளில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை 10 சதவீதத்தையும் தாண்டியது. இந்தாண்டில் தான் அது 9 சதவீதத்திற்கும் குறைவாக ஆகியுள்ளது.

வேறு காரணங்கள்:உலகளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு நிபுணர்கள் வேறு சில காரணங்களை கூறினர்
.

அவை:
* வளர்ந்த நாடுகள் தங்களது எரிபொருள் தேவைக்காக, உணவுப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் “உயிரி எரிபொருள்’ (பயோ ப்யூவல்) உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட்டன. இதனால், வளர்ந்து வரும் நாடுகள், மூன்றாம் உலக நாடுகளில் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலைவாசி உயர்ந்தது.

*உலகம் முழுவதும் கணக்கு வழக்கின்றி பெருகிக் கொண்டிருக்கும் மக்கள் தொகை. இவர்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு.

* கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட காலநிலை மாற்றம். வறட்சி, வெள்ளம், சூறாவளி, மாறி வரும் மழை போன்றவற்றால் எதிர்பார்த்த உற்பத்தி இல்லை.
*உற்பத்தி நாடுகளின் ஸ்திரமற்ற அரசியல் மற்றும் பொருளாதாரம்.

நிதிக் கொள்கை :உள்நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, பணவீக்கம், உலகப் பொருளாதார நிலவரம் இவற்றை அனுசரித்து, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மத்திய ரிசர்வ் வங்கி, நிதிக் கொள்கையை வகுக்கும். காலாண்டு தோறும் வகுக்கப்படும் இதில், வங்கிகளின் வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படும்.அமெரிக்க பெடரல் ரிசர்வ், தன் நிதிக் கொள்கையில், அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியது. பங்குச் சந்தை வீழ்ச்சியை சரிக்கட்ட வட்டி விகிதத்தை ஒன்றரை சதவீதமாகக் குறைத்தது.வட்டி குறைந்தால், வங்கிகளில் கடன் வாங்குவோர் அதிகரிப்பர். அதனால், பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பது தான் பெடரல் ரிசர்வ்-ன் கணிப்பு. ஆனால், அது நேர்மாறாகிப் போனது.


எம்.ஆர்.வெங்கடேஷ்

2 கருத்துரைகள்:

Nalliah said...

உலகம் பூராக ஜனநாயகத்தை, ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலின் பணநாயகம் வெல்லும்.

அன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கொம்பனி மூலம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைக் கொள்ளையடித்த ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், இன்று அமெரிக்க டாலரை அச்சிடும் தமக்குச் சொந்தமான பெடரல் ரிசர்வ் (FEDERAL RESERVE) போன்ற தனியார் வங்கிகள் மூலம், பெறுமதியற்ற கடதாசி நோட்டுக்களை, பில்லியன் கணக்கில் அச்சிட்டு, உலகைக் கொள்ளையடிக்கிறார்கள். அத்துடன் இல்லாமையிலிருந்தே உருவாக்கிய, தமக்குச் சொந்தமான கடனட்டைகளை, வங்கிகளுக்கு விஸ்தரித்து, ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், சாதாரண மக்களை, பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கின்றார்கள்.

கடனில்லாத பன்னாட்டு நிறுவனங்கள் கிடையாது. இல்லாமையிலிருந்தே உருவாக்கிய கடன்களால் வர்த்தக நிறுவனங்களும், தொழிலாளர்களும் கடன்காரர்களாக மாற்றபடுவதோடு இக்கடன்கள் அதிகரிக்கப்படுமே அன்றி மீளச் செலுத்தப்படுவதில்லை.

இதனால் வர்த்தக நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் எதிராகச் சண்டையிட்டுக் கொள்வார்களே தவிர, வர்த்தக நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டு ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கு எதிராகப் போராடமாட்டார்கள்.

உலகம்பூராகவும், அனைவரும் இலகுவில் கட்டுப்படுத்தப்பட்டு, ஆளப்படக் கூடியவர்களாக ஆக்கப்பட்டு, பயத்தினூடாகவும், அச்சுறுத்தியும், நலமடிக்கப்பட்ட சமூகம் உருவாக்கப்படுகின்றது, மக்களின் சிந்தனை, நிகழ்கால வேலைப்பழுவுடனும், அடுத்தநேரச் சாப்பாட்டுடனும் மட்டுப்படுத்தப்படுகின்ற சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது.

எண்பதுகளில் மேற்குலகமும், சோவித்யூனியனும் பொருந்திக் கொண்டிருந்த போது, சோவியத்யூனியனை வீழ்த்துவதற்காக, ஆப்கானிஸ்தானில் வேற்றுநாட்டு இசுலாமிய தீவிரவாத இளைஞர்களை ஆயுதபாணிகளாக்கி, சோவியத்யூனியனுக்கு எதிராக யுத்தத்தை நடாத்தி வந்த அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, வேறு பல நாடுகளுக்கும் அதே இசுலாமிய தீவிரவாத இளைஞர்களால், பலத்த பிரச்சனைகள் வருவது தவிர்க்க முடியாது.

- நல்லையா தயாபரன்

Nalliah said...

1910ம் ஆண்டு.சக்திவாய்ந்த 7 பெரும் பணக்காரர்கள் ரகசியமாக சந்தித்தார்கள். அமெரிக்காவின் ஜெக்கிள் தீவில் இந்த சந்திப்பு நடந்தது. ரொத்ஸ்சைல்ட் , ராக்கபெல்லர், ஜே.பி.மோகன், ஆகிய மூன்று பெரிய பணக்கார குடும்பங்கள்.சட்டவிரோதமாக தாங்கள் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் பாதுகாப்பதற்கும், அந்தப் பணத்தை கொண்டு மேலும் மேலும் கொள்ளை லாபம் அடிப்பதற்கும் ஒரு வங்கி உருவாக்குவதென முடிவு செய்தார்கள்.

இந்த மூன்று பெரும் வங்கி உரிமையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அடுத்த 3 ஆண்டுகளில் உதயமானதுதான் இன்றைக்கு ‘பெட் ரிசர்வ்’ என்று ஊடகங்களால் புகழ்ந்து தள்ளப்படுகிற அமெரிக்க மைய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கி.அரசாங்கத்திற்கு சம்பந்தமே இல்லாத, முற்றிலும் தனியார் முதலாளிகளின் லாபத்திற்காக மட்டுமே இப்படி ஒரு வங்கியை உருவாக்குவதற்கு, அன்றைய தினம் அமெரிக்காவின் சட்டம் இடம் கொடுக்கவில்லை என்ற போதிலும், ஜனாதிபதி உட்ரோ வில்சன் நாடாளுமன்றத்தை நிர்ப்பந்தித்தார். பணக்காரர்களின் நாடாளுமன்றம் மிகப் பெரிய விவாதம் இல்லாமல், 1913ம் ஆண்டு கிறிஸ்துமஸ்க்கு இரண்டு நாள் முன்பு நள்ளிரவில் இதற்கு ஒப்புதல் அளித்தது.

அமெரிக்கர்களின் தலைவிதியை மட்டுமல்ல, பிற்காலத்தில் ஒட்டுமொத்த உலகின் நிதி கட்டமைப்பையும் தனது காலடியின் கீழ் கொண்டுவரப் போகும் பெடரல் ரிசர்வ் ஆக்ட் என்ற அந்த மசோதாவை, கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு செல்லும் அவசரத்தில் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் படித்து பார்க்காமலேயே கைதூக்கி நிறைவேற்றினார்கள்.அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு முரணாக, அந்நாட்டின் நிதி கட்டமைப்பையும், புதிதாக ஒரு நாணயத்தை உருவாக்கும் பொறுப்பையும் தனியார்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த வங்கியிடம் அளித்தது அமெரிக்க நாடாளுமன்றம்.முற்றிலும் சட்டவிரோதமாக உதயமான பெடரல் ரிசர்வ், பிற்காலத்தில் அனைத்து சட்டங்களையும் தீர்மானிக்கின்ற சக்தி கொண்டதாக மாறியது.

‘நான் மிகவும் சோகமான மனிதனாக இருக்கிறேன். தெரிந்தே எனது நாட்டை நாசமாக்கிவிட்டேன். ஒரு மாபெரும் தொழில்வள நாடான அமெரிக்கா முற்றிலும் வங்கிக் கடன் முறையால் கட்டுப்படுத்தப்படும் நாடாக மாறுவதற்கு காரணமாகிவிட்டேன். ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியும் இப்போது வெகுசில தனிநபர்களின் கைகளுக்கு சென்றுவிட்டது. இந்த உலகிலேயே ஒரு வங்கியால் கட்டுப்படுத்தப்படுகிற, சுதந்திரமான கருத்துக்களுடன் செயல்பட முடியாத, பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப உறுதிமொழிகள் அளிக்க முடியாத, முற்றிலும் சில ஆதிக்க மனிதர்களால் வழிநடத்தப்படுகிற அரசாங்கமாக அமெரிக்க அரசாங்கம் மாறிவிட்டது...’ என்று பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அதே உட்ரோவில்சன் எழுதினார்.

1860களில் அமெரிக்காவின் வங்கிக் கட்டமைப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன்.. அப்போதைய காலச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு, வங்கிகளை நாட்டின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். வங்கி நடத்துபவர்களுக்கு வட்டி என்ற பெயரில் பெருவாரியான பணம் போவதை அவர் தடுத்து நிறுத்தினார். லிங்கன் படுகொலை செய்யப்பட்ட பிறகு நிலைமை மாறிவிட்டது. மக்கள் நடமாடும் வீதிகளிலிருந்த நிதி அதிகாரங்கள் முற்றிலும் பெருவங்கிகளின் உரிமையாளர்கள் குடி கொண்டிருக்கும் வால்ஸ்டிரீட் எனும் வீதிக்கு மாறியது.அங்கிருந்தே இன்றைக்கு உலகம் முழுவதும் வங்கிகளின் பொருளாதார யுத்தம் உலக நாடுகள் மீது ஏவப்பட்டிருக்கிறது. மனிதகுலத்தின் மீது நிதியுத்தம் கட்டவிழ்த்துவிடப்படுகிறது. டாலர் எனும் பணத்தின் மூலம் உலகம் முழுவதும் சந்தையை கட்டுப்படுத்துகிற பெடரல் ரிசர்வ் எனும் அமெரிக்காவின் மத்திய வங்கி, இங்கிருந்தே கட்டுப்படுத்தப்படுகிறது.

2013 டிசம்பர் 23ம்தேதியன்று பெடரல் ரிசர்வ் தனது நூறாவது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறது. இந்த நூறு ஆண்டுகளில் உலகம் முழுவதும் நிதித் துறையில் மிகப் பெரும் போரை கட்டவிழ்த்துவிட்டது பெடரல் ரிசர்வ். உலகப் பொருளாதாரங்களின் லாபங்களையெல்லாம் உறிஞ்சி எடுத்துக் கொண்டது; கோடிக்கணக்கான மக்களின் உழைப்பையெல்லாம், விலைவாசியை உயர்த்தி சுரண்டிக் கொண்டது.இதைத்தான் நிதித்துறை தொடர்பான வரலாற்று அறிஞர் கரோல் குய்க்லி, தனது ‘துயரமும் நம்பிக்கையும்‘ என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘நிதி மூலதனத்தின் அடிப்படையில் இயங்குகிற இன்றைய வங்கிகள் தமது ஆதிக்கத்தை அனைத்துத் துறைகளிலும் பரப்பி வருகிறது;

உலகம் முழுவதும் உள்ள நிதிக் கட்டமைப்பை சில குறிப்பிட்ட தனியார் முதலாளிகளின் கைகளுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறது. அதற்காக ஒவ்வொரு நாட்டின் அரசியல் கட்டமைப்பையும் தகர்க்கவோ அல்லது தனக்குச் சாதகமாக மாற்றவோ முயற்சிக்கிறது.

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv