அகநானூற்று அகப்பொருளில் புறப்பொருள் செய்திகள்

முன்னுரை:

சங்க இலக்கியங்களின் பாடு பொருள்களாக அமைவன அகமும் புறமும் ஆகும். சங்க இலக்கிய அகப்பொருள் இலக்கியங்களுள் ஒன்றான அகநானூறு, அகப் பொருள் செய்திகளை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் எடுத்தியம்புகின்றது. அகநானூறு, அகப்பொருள் செய்திகளைத் திறம்பட வெளிப்படுத்துவது போல் மன்னனது வீரம், கொடை, புகழ், போர் போன்ற புறப் பொருள் செய்திகளையும் உவமை வாயிலாகவும், வருணனைகள் மூலமாகவும் அகச் செய்திகளோடு கலந்து சுவைக்கச் செய்கின்றது.

அன்பின் ஐந்திணைப் பாகுபாட்டின் அடிப்படையில் அமைந்த அகநானூறு பாலைத் திணையில் 200 பாடல்களையும், முல்லைத் திணையில் 38 பாடல்களையும், குறிஞ்சித் திணையில் 82 பாடல்களையும், மருதத்தில் 41 பாடல்களையும், நெய்தலில் 39 பாடல்களுமாக 400 பாடல்களை உள்ளடக்கியது. இந்நானூறு பாடல்களில் புறச் செய்திகள் 56 பாடல்களில் அகச் செய்திகளுடன் கலந்து இடம் பெற்றுள்ளன. பாலையில் 23 பாடல்கள், மருதத்தில் 17 பாடல்கள், குறிஞ்சியில் 13 பாடல்கள், முல்லையில் 2 பாடல்கள் மற்றும் நெய்தலில் 1 பாடல்.
நோக்கம்:

அலர், அல்லகுறி, ஆற்றுவித்தல், இரவுக்குறி, இற்செறிப்பு, உடன்போக்கு, செலவழுங்கியது, நலம் பாராட்டுதல், நெஞ்சிற்குச் சொல்லுதல், பகற்குறி, வரைவு கடாவுதல், வினைமுற்றி மீளுதல் போன்ற அகப்பொருள் கூறுகளில் அகத்திணை மாந்தர்களின் கூற்றுக்களின் வழியாக புறச் செய்திகள் வெளிப்படுகின்றன. அப்புறச்செய்திகள் எங்ஙனம் வெளிப்படுகின்றது? எவ்வகையான புறச்செய்திகள் வெளிப்படுத்தப் பட்டுள்ளன? என்பதைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அலர்:

அலர் குறித்து தொல்காப்பியர் தமது பொருளதிகார கற்பியலில்,

“களவுங் கற்பும் அலர் வரைவின்றே” (தொ.கற். 21)

என்றும்,

“அலரின் தோன்றும் காமத்து மிகுதி” (தொ.கற். 22)

என்றும் கூறுகின்றார்.

பாலைத் திணையில், திணையின் உரிப் பொருளான பிரிதலும் பிரிதல் நிமித்ததிற்கிணங்க,

1. தலைவனின் பொருள் வயிற் பிரிவு, தலைவியின் மெய் மாறுபாடு, அதனால் ஏற்படும் அலர்

தலைவன் பொருள் ஈட்டுதற் பொருட்டு தலைவியைப் பிரிகிறான். அப்பிரிவினை ஆற்றாத தலைவி வருந்துகின்றாள். அது கண்ட தோழி தலைவன் வரும் வரை தலைவியை ஆற்றியிருக்குமாறு கூறுகின்றாள். ஆனால் தலைவியோ தனது மாமை நிறமானது அழகிய நுண்ணிய பசலை பரத்தலால் பீர்க்கின் மலரைப் போன்றாவதால் ஊரில் அலர் எழுகின்றது. அவ்வலரானது அன்னி என்பான் குறுக்கையின் கண்ணுள்ள போர்க்களத்தில் திதியன் என்பானின் தொன்று தொட்டு நிலைபெற்று வருவதான புன்னை மரத்தின் பெரிய அடியை வெட்டி வீழ்த்தி, துண்டுகளாகச் செய்தபோது அவனுடைய புகழைப் பாடிய கூத்தர்களின் இன்னிசை முழக்கத்தினும் பெரியதாக இருந்தது என்கிறாள். இங்கே அலர் என்னும் அகப் பொருள் கூறு அன்னி என்ற மன்னனின் புகழைப் பாடிய கூத்தர்களின் இன்னிசைக்கு உவமைப் படுத்தப் பட்டுள்ளது.

“காடு இறந்தனரே, காதலர், மாமை
அரி நுண் பசலை பாஅய், பீரத்து
எழில் மலர் புரைதல் வேண்டும். அலரை,
அன்னி குறுக்கைப் பறத்தலை, திதியன்
தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி,
புன்னை குறைந்த ஞான்றை, வயிரியர்
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே”

(பாலை: 45:6-12)

இதே போன்று அகநானூறு 211-ஆம் பாடல் எழினி
என்பான் கன்றுகளையும், பிடிகளையும் உடைய யானைக் கூட்டம் பள்ளத்தில் அகப்பட்டுக் கொள்ள, அதைப் பிடிப்பதான வேட்டைக்கு வராமல் போகவே, அதனையறிந்த சோழ மன்னன் சினங்கொண்டு, அவனைப் பிடித்து வர மத்தி என்பானை ஏவ, மத்தி எழினியின் பல்லைப் பிடுங்கி, வெண்மணி என்னும் ஊரினது வலிமை பொருந்திய வாயிற் கதவிலே பதித்தான். அவ்வெற்றியின் அடையாளமாக அம்மத்தியால் நாட்டப்பட்ட வெற்றிக்கல் பொருந்திய குளிர்ச்சியான துறையின்கண் நீர் மோதுவதால் எழுகின்ற ஒலி போன்ற பெரிய அலர்தான் தலைவியிடத்தில் மிஞ்சியது என்று தலைவி கூறுவதாக அமைந்துள்ளது. இப்பாடலில் அலர் என்னும் அகப்பொருள் நீர் மோதுவதால் ஏற்படுகின்ற ஒலிக்கு ஒப்புமைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் 347-ஆம் பாடலில் இவ்வலர் மிகப் பெரிய
படைகளையுடைய நெடுஞ்சேரலாதன் பெரிய கடலின்கண் வந்தெதிர்ந்த பகைவர்களை புறங்காட்டி ஓடச் செய்து அவருடைய காவல் மரமாகிய கடம்பினை வெட்டிச் செய்த ஓசையமைந்த முரசின் கண் முழங்கினாற் போன்றது என்று முரசின் ஓசைக்கு ஒப்பிடுகிறார் பாடல் ஆசிரியர்.

2. மருதத் திணையில், அத்திணையின் உரிப்
பொருளான ஊடலும் ஊடல் நிமித்ததிற்கிணங்க

அ. பரத்தையைத் தலைவன் மணஞ் செய்து கொண்டதால் உண்டான அலர்

தலைவன் இளம்பரத்தை ஒருவளை மணஞ் செய்து
கொண்டான் என்று ஊரார் தூற்றுவதால் ஏற்படும் அலரைப் பின் வரும் அகநானூற்றுப்பாடல் அழகாகச் சுட்டுகின்றது. ஊரார் தூற்றுவதால் ஏற்படும் அவ்வலர் அஃதை என்பாளின் தந்தையான சோழரது பருவூர் போர்க்களத்தில் சேர, பாண்டியராகிய இரு பெரும் வேந்தர்களும் வீழ்ந்தனர். சோழ மன்னன் தோல்வி அடைந்தவர்களின் களிறுகளைக் கவர்ந்து சென்றபோது எழுந்த ஆரவாரத்தினைப் போன்று இருந்ததாக அப்பாடல் ஆசிரியர் ஊரார் தூற்றும் அலரை வெற்றி பெற்றவர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தினோடு உவமித்து சிறப்புச் செய்திருக்கிறார்.

“ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து
கொண்டனை என்ப ஓர் குறுமகள்-அதுவே
செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின்,
அம் கலுழ் மாமை, அஃதை தந்தை,
அண்ணல் யானை அடு போர்ச் சோழர்,
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை
இருபெருவேந்தரும் பொருதுகளத்து ஒழிய
ஒளிறுவாள் நல்அமர்க் கடந்த ஞான்றை
களிறுகவர் கம்பலை போல
அலர் ஆகின்றது பலர் வாய்ப்பட்டே”
(அகம்: 96: 9-18)

மேலும் 36-ஆவது பாடலில் தலைவன் பரத்தையை மணஞ் செய்து கொண்டான் என்று தூற்றும் அலர் பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானம் என்னும் போர்க்களத்தில் சேரன், சோழன், சினம் மிகுந்த திதியன், யானைப் படைகளையுடைய எழினி, எருமையூர்த் தலைவன், இருங்கோ வேண்மான், பொருநன் போன்ற எழுவரையும் அவர்களுடைய வலிமையெல்லாம் அடங்குமாறு முரசமோடு வெண்கொற்றக் குடைகளையும் வயப்படுத்திக் கொண்டு, அவன் வெற்றிப் புகழ் பல திக்கும் பரவுமாறு பகைவரது படைகளைக் கொன்று களவேள்வி செய்தபோது செழியனின் வீரர்கள் எழுப்பிய ஆரவாரத்தினும் பெரியதாக இருந்தது என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

ஆ. பரத்தையரோடு தலைவன் நீராடுதலால் அலர்

பரத்தை ஒருத்தியோடு தலைவன் இடைவிடாது ஓடும் புனலில் நீர் விளையாடியது மற்ற பரத்தையரால் பேசப்படும் பழிமொழியாய் ஆகி அலராகின்றது. அவ்வலர் பாண்டியன் தமது கூடற் போர்க்களத்தில், தம்முள் ஒன்று சேர்ந்து போர்க்கு எழுந்த சேர, சோழர் என்னும் இரு பெரும் வேந்தர் தம் கடல் போன்ற சேனைகளை விரட்டி, வெற்றி கொண்ட பொழுது பாண்டிய வீரர்களால் எழுப்பப் பட்ட ஆரவாரத்தினும் பெரிய அலராகியது என்று கவிஞர் 116 – ஆம் பாடலில் விவரிக்கின்றார்.

“............................காழ் இயல் வன முலை,
எஃகுடை எழில் நலத்து, ஒருத்தியோடு நெருநை
வைகுபுனல் அயர்ந்தனை என்ப அதுவே,
பொய், புறம் பொதிந்து, யாம் கரப்பவும், கையிகந்து
அலர் அகியன்றால் தானே: மலர்தார்,
மைஅணி யானை, மறப்போர்ச் செழியன்
பொய்யா விழவின் கூடற் பறந்தலை,
உடன் இயைந்து எழுந்த இருபெரு வேந்தர்
கடல் மருள் பெரும் படை கலங்கத் தாக்கி,
இரங்குஇசை முரசம் ஒழிய, பரந்து அவர்
ஓடுபுறம் கண்ட ஞான்றை,
ஆடுகொள் வியன்கௌத்து ஆர்ப்பினும் பெரிதே”.

(அகம்: 116: 9-91)

இவ்வாறு பரத்தையுடன் நீராடுவதால் உண்டாகும் அலரானது 226 – ஆம் பாடலில், வலிமை மிகுந்த ஆற்றல் வாய்ந்த பாணன் என்பானோடு போர் செய்வதற்கு வந்த கட்டி என்பான் தித்தன் வெளியன் என்பானது உறையூரின்கண் எழுந்த இனிய ஓசையையுடைய கிணியின் ஓசையைக் கேட்ட அளவிலேயே அஞ்சித் தோற்றோடிய போது எழுந்த ஆரவாரத்தினும் பெரியதாகச் சொல்லப்பட்டுள்ளது. 246-ஆம் பாடலில் தலைவன் புனலாடிய அலர் கரிகாற்பெருவளத்தான் 11 வேளிர், இருபெரும் வேந்தர்களை வெற்றி கொண்ட நாளில் அட்ட மள்ளரால் அழுந்தூரில் எழுந்த அரவாரத்தினும் பெரியதாக இருந்ததாக அப் பாடல் புலவர் வருணித்துள்ளார்.

மேலும் 256-ஆம் பாடலில் கள்ளூர் என்னும் ஊரில் நெறி தவறிய அறமில் ஒருவன், இளம் பெண் ஒருத்தியின் அழகிய பெண்மை நலத்தினைக் கவர்ந்து உண்ட பின், அறவோர் முன்னிலையில் பொய்ச் சூளுரைத்தான். அதனையறிந்த அவையோர் மரத்தில் அவனைக் கட்டி வைத்து அவன் தலையில் நீரைப் பெய்தனர். அப்பொழுது எழுந்த ஆரவாரத்தினும் தலைவன் புனலாடியதால் எழுந்த அலர் பெரிதாயிற்று என்று அகநானூறு பகர்கின்றது.

266–ஆம் பாடலில் தலைவன் பரத்தையருடன் நீராடுவது எவ்வி என்பான் அரிமண வாயில் என்னுமிடத்தில் போரிட்டு வெற்றி பெற்றபின் அவ்வெற்றியினைக் கொண்டாடும் விதமாகத் தன் படை வீரர்களுக்குக் கள்ளுடன் பெருஞ்சோற்றினைப் பகற்பொழுதில் அளித்தபோது எழுப்பிய ஆரவாரம் போன்றது என்று குறிப்பிடுகின்றது. அகநானூற்று 296-ஆம் பாடல், மேற்சுட்டிய அலர் பசும் பூண் பாண்டியன் மதுரையில் கொங்கரை வென்ற வெற்றிக் களிப்பால் ஆடிய போது எழுந்த ஆரவாரத்தைப் போன்றிருந்தது என்கிறது.

இ. பரத்தையைத் தலைவி இகழ்ந்ததாக அலர்

அகநானூற்று 76-ஆம் பாடலில் பரத்தையின் கூத்தைக் காண பரத்தை சேரிக்கு வந்த தலைமகனை, பரத்தை நயப்பித்துக் கொண்டாள் என்ற தலைமகளுக்கு கூத்துக் காண வந்த அளவிற்கே என்னைத் தூற்றினாளோ தலைவி என்று தலைவியின் தூற்றும் வசைச் சொற்களை அஃதை என்பானது நாளோலக்கத்தில் அவையிடத்துப் புகும் கூத்தரது பறை இடைவிடாது ஒலிப்பதைப் போன்று உள்ளது என்று ஒப்பிடுகின்றாள் பரத்தை.

216-ஆம் பாடலில் தலைவி தன் மேல் பழி கூறினாள் என்பதைக் கேள்விப்பட்ட பரத்தை, செல்லூர் மன்னனாகிய ஆதன் எழினி என்பானின் வெண்மையான வேல் களிற்றின் மார்பில் பாய்ச்சப் பெற்ற போது அக்களிறு அடையும் துன்பம் போலத் தலைவியும் துன்பம் அடைதல் வேண்டும் என்கிறாள்.

ஈ. தலைவியின் நாணம்

“……………………………………-பாணன்
மல்அடு மார்பின் வலிஉற வருந்தி
எதிர்தலை கொண்ட ஆரியப் பொருநன்
நிறைத்திரள் முழவுத்தோள் கையகத்து ஒழிந்த
திறன்வேறு கிடக்கை நோக்கி, நல்போர்க்
கணையன் நாணி யாங்கு”
(அகம்: 286: 4-8)

பரத்தை ஒருவள் பகற் பொழுதில் தலைவியிடத்தில் வந்து தானும் அச்சேரியைச் சேர்ந்தவள்தான் என்றும், உனக்குத் தங்கை முறையென்றும் கூறினாள். இப்பாடலைப் பாடிய புலவர் பரணர், அச்செய்கையை, பாணன் என்ற மற்போர் வீரன் ஆரியப் பொருநனோடு போரிட்டான். அப்போரில் பொருநனின் தோள்கள் இற்று, அவன் போரிலே இறந்து பட்டான். இறந்த அவனது உடல் கிடந்த கிடக்கையைப் பார்த்து கணியன் என்ற வீரன் நாணியது போன்று நாணம் அடையக் கூடியதாக தலைவிக்கு இருந்தது என்று உவமிக்கின்றார்.

உ . காதற் பரத்தை தலைவனின் பொய்ச் சூளுரைக்கு உவமித்தல்

வெல்லுதற்கரிய தெய்வத்தின் முன்னின்று தலைவன் உரைத்த பொய்ச் சூளுரையை பின் வரும் பாடல் மூலமாகக் கவிஞர் உவமிக்கின்றார்.

“பொலம்பூண் நன்னன் புனலாடு கடிந்தென,
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண்
‘அஞ்சல்’ என்ற ய் எயினன்
இகல்அடு கற்பின் மிஞலியோடு தாக்கி
தன் உயிர் கொடுத்தனன், சொல்லியது அமையாது
தெறல்அருங் கடவுள் முன்னர்த் தேற்றி,
மெல்இறை முன்கை பற்றிய சொல் இறத்து,”

(அகம்: 296: 2-8)

சினமிகுந்த புன்னாட்டு மன்னன் நன்னனுக்கெதிராக ஆய் எயினன் என்னும் மன்னன் புன்னாட்டு மக்களுக்கு கொடுத்த அஞ்சாதீர்! என்னும் வாக்கைக் காப்பாற்றும் பொருட்டு நன்னனின் நண்பனான மிஞிலி என்பானோடு போரிட்டு அயலாருக்காகத் தம்முயிரைத் தந்தான். ஆனால் நீயோ அவ்வாறில்லை என்று தலைவனின் பொய்ச் சூளுரை என்னும் அகப் பொருளை ஆய் எயினனின் இரக்க தன்மைக்கு ஒப்பிடுகின்றார் கவிஞர் பரணர்.

குறிஞ்சித் திணையில்,

1. தலைவன் தலைவியை இரவுக்குறியில் சந்தித்துப் பழகுவதை அறிந்த பலரும் அலர் தூற்றினர் என்பது

தலைவன் தலைவியை இரவுக்குறியில் வந்து சந்தித்து, மகிழ்வுடன் கூடி இன்புற்றுத் திரும்புகின்றான். இதையறிந்த பலரும் அலர் தூற்றுவதை அகநானூற்று 142-ஆம் பாடல் மூலம் அறிய முடிகின்றது.

“கூட்டுஎதிர் கொண்ட வாய்மொழி மிஞிலி,
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும்பெயர்
வெள்ளத் தானை அதிகற்கொன்று, உவந்து
ஒள்வாள் அமலை ஆடிய ஞாட்பின்,”
(அகம்: 141: 11-15)

பாழி நகரில், பலியிடுவதற்கு அரிய தன்மையையுடைய அச்சம் வருகின்ற பேய்க்குக் களவேள்வி செய்து மகிழும் மிஞிலி என்பான் அதிகன் என்பானைக் கொன்று மகிழ்ந்து, அப்போர்க்களத்தே “ஒள்வாள் அமலை” என்னும் வெற்றிக் கூத்தினை ஆடிய போது ஏற்பட்ட ஆரவாரத்தினைப் போன்று இருந்தது என்று கவிஞரின் கற்பனை புனையப்படுகின்றது. அகநானூற்று 62 – ஆம் பாடலும் இந்த அலரினை ஆரவாரமுள்ள துடிக்கு ஒப்பிட்டுப் பேசுகின்றது.

அல்லகுறி:

அல்லகுறி என்பது தலைவன், தான் வந்தமையை அறிவிக்கும் பொருட்டு செய்த குறி, அவன் வருவதற்கு முன்பே இயற்கையாக நிகழ்ந்துவிட, குறி போன்ற குறி நிகழ்ந்தவிடத்து, அல்லாத குறியிடத்துச் சென்று சேர்தலும் தலைவிக்கு நேர்தல் ஆகும்.

“அல்லகுறிப்படுதலும் அவள்வயின் உரித்தே
அவன்குறி மயங்கிய அமைவோடு வரினே”

(தொல்.கள. 43)

அகநானூறு குறிஞ்சித் திணையில் 212 – ஆம் பாடல், அல்ல குறி பட்டு நீங்கும் தலைவன் தன் நெஞ்சிற்கு நெருங்கிச் சொல்லியதாகப் புலவரால் பாடப்பட்டுள்ளது.“படைநிலா இலங்கும் கடல்மருள் தானை
மட்டுஅவிழ், தெரியல் ணரப்போர்க் குட்டுவன்
பொருமுரண் பெறாஅது விலங்குசினம் சிறந்து,
செருக்குச் செய் முன்போடு முந்நீர் முற்றி,
ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஒட்டிய
நீர்மாண் எஃகம் நிறத்துச் சென்று அழுந்தக்
கூர்மதன் அழியரோ – நெஞ்சே! – ஆனாது
எளியன் எனக் கருதி,
விளியர் எவ்வம் தலைதந்தோயே.”

(அகம்: 212: 15-23)

கடலைப் போன்ற சேனையினையும், ஒளி வீசும் படைக்கலன்களையும் பல வீரர்கள் கொண்ட பாசறையைத் தாம் விரும்பும் இடங்களில் அமைத்துக் கொள்ளும் ஆற்றலும், சினந்தெழுந்து போர் ஆற்றும் வலிமையுமுடையவன் குட்டுவன், அவன் ஓங்கியெழும் அலைகள் கொண்ட பெருங்கடலை முற்றுகையிட்டு, அதன் நடுவே வாழ்ந்த பகைவர்க்கு அரணாக அமைந்த கடலின் வலிமைதனைக் கெடச்செய்யும் தன்மையையுடையவன். அத்தகைய வல்லமையானின் மாண்புற்ற வேல் தன் நெஞ்சுதனில் பாய்ந்து அதன் செருக்கு அழியுமாறு போக! என்று தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறுவதாக அழகாக உவமித்திருக்கிறார் இப்பாடலின் ஆசிரியர் பரணர்.

இதே போன்று குறிஞ்சித் திணை 338 – ஆம் பாடலில் பசும்பூட் பாண்டியனின் தெய்வம் வாழும் பொதியில் மலைச்சாரலில் தழைத்து வளர்ந்த காந்தட் செடியில் பூத்துக்கிடக்கும் ஒளி பொருந்திய மலர்போல மணங்கமழும் நெற்றியினையும், அளவொத்து நீண்ட நெய்ப்பையுடைய கூந்தலையும், மாமை நிறத்தினையும் உடைய தலைவியிடத்து அவளது செறிந்த வளையல்கள் நம் வளமான முதுகினைச் சுற்றிக் கொள்ளுமாறு முயங்குதல் நமக்குக் கிட்டாமல் போயிற்று என்று தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறுவதாக புலவர் பெருமான் மதுரைக் கணக்காயர் அமைத்துள்ளார். மேலும் 342 – ஆம் பாடல் பாண்டியனது அருவி வீழும் பொய்கையினையுடைய மலைக்குகையில் மறைந்த மகளிர் போல நம் தலைவி நமக்கு அடைதற்கு அரியவள் என்று தலைவன் தன் நெஞ்சிற்கு உரைப்பதாகவும், 372 –ஆம் பாடல் அஞ்சி என்பானது வீரர்கள் தம் பகைவர்தம் ஆநிரைகளைக் கவர்ந்து வரும் போரில், நன்கு ஒலிக்குமாறு அடிக்கும் உடுக்கையின் வாரைப்போல நெடுமூச்செறிந்து வீங்கியும், நெகிழ்ந்தும், மேய்தற் பொருட்டுத் தான் உமிழ்ந்து வைத்த மணியை இழந்த பாம்பைப் போல நீயும் வாடி நின்றாய் என்று தலைவன் தன நெஞ்சிற்கு உரைக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

ஆற்றுவித்தல்:

பாலைத் திணையில் மூன்று பாடல்களில் பொருளீட்டுதற் பொருட்டுத் தலைவன் பிரிந்து செல்ல, அதை ஆற்றாத் தலைவி வருந்தி உடல் மெலிவுற, அதனைக் கண்ட தோழி அவளைத் தேற்றும்படி எவ்வளவு செல்வங்களை அள்ளிக் கொடுப்பினும் தலைவர் உன்னை முயங்குதற்கு வருவார் என்று சொல்லி ஆற்றுவிக்கிறாள். 127 –ஆம் பாடலில்

“வலம்படு முரசிற் சேரலாதன்
முந்நீர் ஒட்டிக் கடம்புஅறுத்து, இமயத்து
முன்னோர் மருள ழணங்குவில் பொறித்து,
நல்நகர் மரந்தை முற்றத்து ஒன்னார்
பணிதிறை தந்த பாடுசால் நன்கலம்
பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்றுவாய் நிறையக் கவைஇ, அன்று அவண்
நிலம்தினத் துறந்த நிதியத்து அன்ன,
ஒரு நாள் ஒரு பகற்பெறினும், வழிநாள்
தங்கலர் – வாழி! தோழி!”

(அகம்: 127: 3-12)

பகைவருடைய காவல் மரமாகிய கடம்பினை வெட்டி வெற்றி முரசினைச் செய்த சேரலாதன் ஆம்பல் என்னும் எண்ணளவு தம் பகைவர் பணிந்து கொடுத்த பெருமை மிக்க அணிகலன்களோடு, பொன்னாற் செய்த பாவையினையும், வயிரங்களையும் மாந்தை என்னும் ஊரிலுள்ள தன் மனைக்கண் முற்றித்து இடமெல்லாம் நிறையும்படி கொண்டு வந்து குவித்தான். அந்நிலம் தின்னும் கைவிட்டுப் போன அந்நிதியம் போன்ற பெரும் பொருளை ஒரு நாள் பகற்பொழுதிலேயே பெற்றாலும் நம் தலைவர் தான் பொருளீட்டச் சென்ற இடத்தில் உன்னைப் பிரிந்து மறுநாள் தங்கமாட்டார் என்று தோழி தலைவியை ஆற்றுவிக்க புறப் பொருள் கூறுகளாகிய மன்னனின் வீரம், போரிலே அவன் கைப்பற்றிய நிதியினை உவமைப்படுத்தி அந்நிதியைவிட தலைவி மேம்பட்டவள் என்று கூறுகின்றாள். இதே போன்று,
237 – ஆம் பாடலில் வளமான உறையூரைத் தந்தாலும் பொருளீட்டச் சென்ற இடத்தில் உன்னைப் பிரிந்து தங்கமாட்டார் என்று தோழி தலைவியை ஆற்றுவிக்கிறாள்.

இற்செறிப்பு:

நெய்தற் திணை 60 – ஆம் பாடலில் மணந்து கொள்வதில் கருத்தின்றிக் களவொழுக்கத்தை விரும்பியனாய் தலைவன் பகற்குறியிடத்தே பன்முறை வந்து சென்றனன். இதனையறிந்த தோழி தலைவனிடம் இவ்வொழுக்கத்தைத் தலைவியின் அன்னை அறிந்தால் தலைவியைப் புறம் போகாது இரக்கமில்லாமல் இற்செறிப்பாள். அதோடு மட்டுமின்றி அரிய பாதுகாப்பினையும் செய்வாள். ஆதலின் நீ இவ்வாறு பகற்குறியிடத்தே வராதொழிக எனப் பகற்குறி மறுத்து இற்செறிப்பையும் அறிவுறுத்திக் குறிப்பாக தலைவியை மணஞ் செய்து கொள்ள வற்புறுத்துதல் ஆகும். இவ்வகையான இற்செறிப்பைப் புலவர் பெருமான் குடவாயிற் கீர்த்தனார் பின் வரும் அகநானூற்றுப் பாடலில் அழகாக வருணிக்கின்றார்.

“........................................வென் வேற்
கொற்றச் சோழர் குடந்தை வைத்த
நாடு தரு நிதியினும் செறிய
அருங்கடிப் படுக்குவள், அறன் இல் யாயே”

(அகம்: 60: 12-15)

தலைவிக்கு கொடுக்கும் இறிசெறிப்பு சோழ மன்னவனின் குடந்தை என்னும் ஊரின்கண் பாதுகாத்து வைக்கப்பட்ட, பகைவர் நாடு திறையாகத் தந்த நிதியைக் காட்டிலும் அரியது என்று தோழி குறிப்பிடுவதாக நயம்பட உரைக்கின்றார். இதன் மூலம் தலைவி, பகைவர் நாட்டு திறைப் பொருளாகப் பெற்ற பெரும் நிதியைக் காட்டிலும் பெரு மதிப்புடையவள் என்று தெரிய வருகின்றது.

இரவுக் குறி:

தலைவன், தலைவியை இரவு நேரத்தில் சந்திப்பது இரவுக்குறி ஆகும். இதில் தலைவன் தலைவியை, அவள் வீட்டிற்க்கு அருகிலேயே சந்திப்பது ஆகும். இதனைத் தொல்காப்பியர்,

“இரவுக்குறியே இல்லகத்துள்ளும்
மனையொர் கிளவி கேட்கும் ழழியதுவே
மனையகம் புகாஅக் காலையான”

(தொல். கள. 41)

என்ற நூற்பாவின் வழி இரவுக் குறியின் இடத்தை வரையறை செய்கிறார்.

தலைவன் தலைவியைப் பார்க்க வரும்போது ஏற்படும் இடையூறுகளைத் தலைவன் அறியும் வண்ணம் தலைவி தோழிக்கு எடுத்துரைக்கிறாள். நல்ல குதிரைகளையும், காவல் வேலிகளையுமுடைய தித்தனது உறையூரைச் சூழ்ந்த கல் முதிர்ந்த புறங்காடு போல, தலைவன் தலைவி உறவானது பல இடையூறுகளை உள்ளடக்கியது என்ற தலைவியின் கூற்று வழி அறியலாம். தலைவன் இரவு நேரத்தில் தலைவியைப் பார்க்க வரும்பொழுது தலைவியின் உறவினர்களான அண்ணன், தாய், மற்றும் பலர் இருப்பர். அதனால் தலைவனுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தலைவி உணர்த்துகின்றாள்.

இரவுக் குறியில் வந்து செல்லும் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொன்னதாக,

“மாஅல் யானை ஆஅய் கானத்துத்
தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல்
வேய்அமைக் கண்இடை புரைஇ,
சேய ஆயினும், நடுங்குதுயர் தருமே.”

(அகம்: 152: 21-24)

பரிசிலை விரும்பிச் செல்பவர்கள் யாராயினும் அவர்களுக்குச் சோற்றினை அவர்களது பெரிய உண்கலத்தின் குழி நிரம்பும் படியாக அளிப்பவன் ஆய். அவனுடைய கானகத்தில் தலையாறு என்னுமிடத்தில் உள்ள புகழ் பெற்ற மிகவும் உயர்ந்து விளங்கும் மலைகளிடத்தே ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களின் கணுக்களின் இடைப் பகுதியைப் போல, விளங்குகின்ற எம் தலைவியின் தழைத்த மென்மையான கூந்தலும், திரண்ட மென்மையான தோள்களும் எமக்குத் தூரத்தில் உள்ளதாயினும் நடுங்கத் தக்க துயரினைத் தருவதாகும். இது அன்பின் மிகுதியால் தலைவன் தலைவி பற்றி தன் நெஞ்சிற்குச் சொன்னதாக அமைக்கப்பட்டுள்ளது பரணரின் இப்பாடல்.

மேலும் குறிஞ்சி 206 –ஆம் பாடலில் இரவுக் குறியில் வந்து புணர்ந்து நீங்கும் தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறியதாக, தலைவியின் புணர்ச்சியின்பம், பறவைகளின் பாதுகாவலன் வெளியன் வேண்மாண் ஆஅய் எயினன் மிஞிலியோடு போரிட்டுப் போர்க்களத்திலேயே வீழ்ந்து பட்ட போது, பறவைகள் பலவும் ஒன்றுகூடி, தம் சிறகுகளால் பந்தரிட்டு நிழல் செய்ததும், களம் வந்த வேளிர் மகளிர் அழுதி ஆரவாரம் செய்ததையும் காண முடியாத ஆகுதை என்பான் நீங்கினாற் போல, ஓரியின் கொல்லி மலையில் மழைகாலத்துப் பூக்கும் மலரினைப் போன்ற மணங்கமழும் அழகும் மேன்மையும், கொண்ட கூந்தலையும் உடைய நம் தலைவி உப்பினால் கட்டப்பட்ட அணையில் தடைபட்டு நில்லாது, அவ்வணையை உடைத்துக் கொண்டு பெருகிச் செல்லும் பெருமழை வெள்ளம் போன்று நாணத்தின் எல்லையில் கட்டுப்பட்டு நில்லாது காமக் கடும்புனல் பெருகப் பெற்றவளாய் இரவில் வந்து இன்பம் தந்தாள் என்று கூறுகின்றான்.

உடன்போக்கு:

உடன்போக்கு என்பது சுற்றத்தார் அறியாவண்ணம் தலைவன் தலைவியை களவுப் புணர்ச்சியின் பின் தன்னுடன் அழைத்துச் செல்வது. அகநானூறு பாலைத் திணையில் 263 – ஆம் பாடல் சுற்றத்தார் அறியாவண்ணம் தலைவன் தலைவியை அழைத்துச் சென்றான். அதனையறிந்த செவிலித் தாய் தன் நெஞ்சிற்குச் சொல்லும் முகத்தான் அமைக்கப்பட்டுள்ளது.

“ஒளிறுவேல் கோதை ஓம்பிக் காக்கும்
வஞ்சி அன்னஎன் வளநகர் விளங்க,
இனிதினின் புணர்க்குவென் மன்னோ – துனிஇன்று
துரிநுதல் பொலிந்தஎன் பேதை
வருமுலை முற்றத்து ஏமுறு துயிலே!”

(அகம்: 263: 11-15)

இந்த உடன்போக்குப் பாடலில் ஒளி வீசும் வேலையுடைய சேரன், முறைசெய்து காப்பாற்றும் வஞ்சிமாநகரம் போன்ற என் வளஞ்சான்ற பெருமனை விளக்கமுற, அழகிய நெற்றியாற் பொலிவுற்றுச் சிறந்த என் மகளது வளர்ந்து வரும் முலையிடத்து, அவள் தலைவன் இன்புற்றுத் துயிலுமாறு மனமுவந்து இருவருக்கும் மணஞ்செய்து வைத்திருப்பேனே ஐயகோ அது முடியாமற் போயிற்றே யான் என் செய்கேன் என்று செவிலித்தாய் தன் நெஞ்சிற்குச் சொல்வது போல தலைவியின் இல்லத்தை சேரனின் வஞ்சி மாநகருக்கு ஒப்பிட்டுப் பேசுவதாகப் பாடல் அமைக்கப்பட்டுள்ளது. அதே போன்று பாலை 385 – ஆம் பாடலில் தலைவியின் தந்தையின் இல்லம் சோழரது சோலை சூழ்ந்த காவிரியாற்றின் அருகிலுள்ள உறையூரைப் போன்றது என்று வருணிக்கப்பட்டுள்ளது.

பகற்குறி:

பகற்குறி என்பது தலைவனும், தலைவியும் மதிலின் புறத்தே எதிர்பட்டுப் புணர்வதாகும். அதுவும், தலைவிக்கு நன்கு அறிந்த இடமாக இருத்தல் வேண்டும் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.

“பகற்புணர் களனே புறனென மொழிப
அவனறி வுணர வருவழியான”

(தொல்.கள. 42)

மேற்குறிப்பிட்ட நூற்பாவின் வழி பகற்குறியின் இடத்தை வரையறை செய்கிறார் தொல்காப்பியர். தலைவன் பகற்குறியில் தலைவியைப் பார்க்க வருவதால் தலைவி நாணி, அவளால் வெளியே வர முடியாத நிலை ஏற்படுகின்றது. அந்நிலையினைப் புலவர், அகநானூற்று 148 – ஆம் பாடலில் கூகைக்குப் பகலில் பார்வை தெரியாததால் வெளியில் செல்ல அஞ்சி நாணி இருப்பதைப் போன்று தலைவியும் பகலில் வெளியே வர நாணியிருக்கிறாள் என உவமை நயத்துடன் வருணித்துள்ளார்.

“கடும்பரி குதிரை ஆஅய்எயினன்
நெடுந்தேர் மிஞிலியோடு பொருதிகளம் பட்டெனக்
காணிய செல்லாக் கூகை நாணிக்
கடும்பகல் வழங்கா தாஅங்கு இடும்பை
பெரிதால் அம்ம இவட்கே; அதனால்
மாலை வருதல் வேண்டும்”

(அகம்: 148: 7-12)

மேற்கூறிய பாடலின் வழி மிகவும் விரைவாகச் செல்லக் கூடிய குதிரைகளையுடைய ஆய் எயினன் என்பான் நெடுந்தேரினையுடைய மிஞிலியோடு போரிட்டுக் களத்தில் இறந்தான். பறவைகளின் பாதுகாவலனான அவனைப் பிற பறவைகள் போல களத்தில் சென்று காணவியலாத கூகை நாணிக் கடும் பகற் பொழுதில் வெளியே வராமல் துன்பம் அடைந்ததைப் போல, பகற்பொழுதில் வரும் உன்னைக் காண வரும் எம் தலைவிக்கு உளதாகும் துன்பமும் மிகப் பெரிதே.

நலம் பாராட்டுதல்:

தலைவியின் நலம் பாராட்டும் முகமாக குறிஞ்சி, பாலை, முல்லை, மருதத் திணைகளில் பாடல்கள் அமைந்துள்ளன. குறிஞ்சி 338– ஆம் பாடலில் பசும்பூட் பாண்டியன் தெய்வம் வாழும் பொதிகை மலை காந்தட் பூ போன்ற மணங்கமழும் நெற்றி, முல்லை 44– ஆம் பாடலில் வலிமை பொருந்திய தேரினையுடைய கணையன் என்பானின் அழும்பில் என்னும் ஊரினைப் போன்ற குளிர்ந்த குடவாயில் என்னும் ஊரினைப் போன்ற சிறப்பினைக் கொண்ட தலைவி, மருதம் 6– ஆம் பாடலில் பலவேற்படைகளையுடைய மத்தி என்பானது கழாஅர் என்னும் ஊரினை ஒத்த தலைவியின் இளமை, 46 – ஆம் பாடலில் ஒளி வீசும் வாட்படையினையுடைய வெற்றி பொருந்திய செழியனது நெற்குவியலையுடைய அள்ளுர் என்னும் ஊரையொத்த தலைவியினது ஒளி பொருந்திய வளையல், பாலைத் திணையில் 47 – ஆம் பாடலில் செழியனின் சிறு மலை என்னும் பக்க மலையின் கூதளம் கமழ்கின்ற மலையிலுள்ள மூங்கிலைப் பேன்ற தலைவியின் தோள், 81 – ஆம் பாடல் கடலன் என்பானின் விளங்கில் என்னும் ஊரையொத்த அவகிய மையுண்ட கண்கள், 113 – ஆம் பாடல் புதிய கள் மணங் கமழும் கோசரது நெய்தலஞ் செறு என்னும் வளஞ் சான்ற நல்ல நாட்டை ஒத்த தலைவியினது தோள் 115 – ஆம் பாடல் நுண்ணிய வேலைப் பாடமைந்த ஆபரணங்களையுடைய எருமை என்பானது குடநாட்டைப் போலும் தலைவியினது பெண்மை நலன் என்றவாறு ஒப்பிடப்படுகின்றது.

நெஞ்சிற்குச் சொல்லியது:

தலைவியை இரவுக்குறியில் சந்தித்துப் புணர்ந்து மீளுகின்ற
தலைவன் புணர்ச்சி இன்பத்தால் பெரிதும் மகிழ்ந்து தன் நெஞ்சிற்குச் சொல்லியது

“...........................................................பூ மலிந்து
அருவி ஆர்க்கும் அயம்திகழ் சிலம்பின்
நுண்பலஸ் துவலை புதல்மிசை நனைக்கும்
வண்டுபடு னறவின் வண்மகிழ்ப் பேகன்
கொணடல் மாமலை நாறி
அம்தீம் கிளவி வந்த மாறே”

(அகம்: 262: 13- 18)

பேகன் என்பவன் வண்டுகள் வீழும் கள்ளினையும், வள்ளன்மையால் மகிழும் மகிழ்ச்சியையும் உடையவன். அவனது சுனைகள் விளங்குகின்ற பக்கமலையில் பூக்கள் நிறைந்திருக்கும். அருவிகள் ஆரவாரிக்கும். மேகம் தவழும் பேகனது அத்தகைய பெரிய மலை மணங்கமழுமாறு போல, இனிய சொல்லையுடைய நம் தலைவியும் நறுமணங்கமழ வந்து நம்மைக் கூடி இன்பம் தந்தாள் என்று தலைவன் கூறுவதாக அமைந்துள்ளது. இப்பாடலில் இனிய சொல்லையுடைய நறுமணம் தலைவியின் முலை முயக்கம் மேகம் தவழும் பேகனது மலைக்கு ஒப்பிடப்பட்டுள்ளது.


செலவழுங்கியது:

இடைச்சுரத்து ஒழியக் கருதிய தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறும் முகத்தான் அகநானூறு 181 – ஆம் பாடலில்,

“ஆலமுற்றம் கவின்பெறத் தைஇய
பொய்கை சூழ்ந்த பொழில்மனை மகளிர்
கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும்
மகர நெற்றி வான்தோய்புரிசைச்
சிகரம் தோன்றாச் சேண்உயர் நல்இல்
புகாஅர் நல்நாட்டதுவே – பகாஅர்
பண்டம் நாறும் வண்டுஅடர் ஐம்பால்
பணைத்தகைத் தடைஇய காண்புஇன் மென்தோள்,
அணங்குசால் அரிவை இருந்த
மணங்கமழ் மறுகின் மணற்பெருங் குன்றே.”

(அகம்:181: 17-26)

போரில் வல்ல மிஞிலி என்பானிடம் வலிமையையுடைய, பறவைகளின் பாதுகாவலனாகிய ஆய் எயினன் என்பவன் போரிட்டுத் தோற்று களத்திலேயே வீழ்ந்து பட்டான். பறவைகளின் பாதுகாவலன் ஆதலின் புதிய பறவைகளின் பெருங்கூட்டம் கதிரவனின் வெம்மை எயினனின் உடலைத் தாக்காதவாறு வானில் ஒன்றுகூடி வட்டமிட்டன. அத்தகைய பறவைகள் சோழ நாட்டு ஆலமுற்றம் என்னும் ஊரின்கண் வந்து தங்கும். அச்சோழநாட்டில் உள்ள மூங்கிலைப் போன்ற திரண்ட தோள்களையுமடைய நம் தலைவி காண்பாரை வருந்தச் செய்யும் அழகினை உடையவள். அத்தகையாளைப் பிரிய மனமின்றித் தலைவன் தன் நெஞ்சிற்கு உரைப்பான் போன்று செலவழுங்கியது.

வரைவு கடாவுதல்:

தலைவன் தலைவியை இரவுக்குறியில் சந்தித்துப் பழகுவதை அறிந்த தோழி, தலைவனை தலைவியை மணஞ் செய்ய வற்புறுத்துதல்

தலைவன் தலைவியைப் பகற்குறி, இரவுக் குறி ஆகிய இரு வகைக் குறியின்கண் வந்துவந்து தலைவியைப் பிரிந்து செல்கிறான். அவ்வாறு வரும் தலைவன் ஒரு நாள் இரவுக் குறியின்கண் வந்த போது அவனைக் கண்ட தோழி, நீ இவ்வாறு இருவகைக் குறியின்கண் வந்து பின் பிரிந்து செல்வாயின் அவள் ஒரு நாள் இறந்துபடுதல் உறுதி. அவள் இறவாத காத்தற்கு அவளை நீ மணத்தலே சரியாகும் என்றுரைக்கிறாள்.


“..................................................................இரப்பேர்க்கு
இழைஅணி நெடுந்தேர் களிறோடு என்றும்
மழைசுரந்தன்ன ஈகை, வண்மகிழ்,
கழல்தொடித் தடக்கை, கலிமான், நள்ளி
நளிமுகை உடைந்த நறுங்கார் அடுக்கத்து,
போந்தை முழுமுதல் நிலைஇய காந்தள்
மென்பிணி முகைஅவிழ்ந்து அலர்ந்த
தண்கமழ் புதுமலர் நாறும்நறு நுதற்கே”

(அகம்: 238: 14-18)

இப்பாடலில் நள்ளி என்ற மன்னனின் வள்ளல் தன்மையினையும், வீரத்தினையும் எடுத்துக் கூறி, அப்படிப்பட்ட மன்னனின் அரும்புகள் மலர்ந்த பக்க மலையின் பனை மர அடிவாரத்திலுள்ள காந்தள் மலர்களின் மணங்கமழும் புதிய மலர் போல, மணக்கும் நெற்றியையுடைய தலைவியை பிரியாமல் மணஞ் செய்து கொள்வாயாக! என்று தோழி கூறுகின்றாள். இப்பாடலில் தலைவியின் மேன்மைத் தன்மைக்கு மன்னனின் வீரம், கொடை போன்றவைகளை எடுத்துக் கூறி அப்படிப்பட்ட மன்னவனின் மலை அடிவாரத்திலுள்ள மணமுள்ள புதிய மலர் போல என்று உவமிக்கப்படுகின்றது.

வினைமுற்றி மீண்டது:

பாலைத் திணை 125 – ஆம் பாடலில் தலைமகன் வினைமுற்றி மீள்கின்றான். அதையறிந்த தோழி தலைவிக்குக் கூறும் படியாக அமைந்த இப்பாடலில் பிரிவில் வருத்திய வாடைக் காற்றைப் பார்த்து, தலைவி கரிகாற்பெருவளத்தான் வாகையூர்ப் போர்க்களத்தில் ஒன்பது மன்னர்களை வெற்றி கொண்டபோது, தமது ஒன்பது குடைகளையும் நடுப்பகலிலே போட்டுவிட்டுத் தோற்றோடிய மன்னர்களைப் போல வாடையே எம் தலைவர் விரைந்து வருவார். நீயும் எமக்குத் தோற்று விரைந்து ஓடுவாய் என்று கூறுவதாகப் புலவர் பரணரால் பாடப்பட்டுள்ளது.

“பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார்,
சூடா வாகைப் பறந்தலை, ஆடுபெற
ஒன்பது குடையும் நன்பகல் ஒழித்த
பீடுஇல் மன்னர் போல,
ஓடுவை மன்னால் – வாடை – நீ எமக்கே.”


(அகம்: 125: 18-22)


முடிவுரை:

1. அலர் தலைவியின் உடல் மாறுபாட்டினால், தலைவனது பரத்தை மணம், பரத்தையருடன் நீராடுதல், பரத்தையைத் தலைவி இகழ்தல், பரத்தை தங்கை உறவு முறை கொண்டாடுவதால் தலைவிக்கு ஏற்படும் நாணம், தலைவன், தலைவி புணர்ச்சி போன்ற காரணங்களினால் ஏற்படுகின்றது. இந்த அலர்கள் எல்லாம் கூத்தர்களின் இன்னிசைக்கு, வீரர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்திற்கு, நீர் மோதுகின்ற ஒலிக்கு, கூத்தரது பறையின் ஓசைக்கு, ஆரவாரமுள்ள துடிக்கு, ஒள்வாள் அமலை என்னும் வெற்றிக் கூத்திற்கு, முரசின் ஒலிக்கு, வெற்றிக் களிப்பு ஆரவாரத்திற்கு ஒப்பிடப்படுகின்றன. வெற்றிக் களிப்பினால் ஏறிபடுத்தப் படும் ஆரவாரம் மகிழ்ச்சியின் வெளிப்பாடு. ஆனால் தலைவன், தலைவியின் புணர்ச்சி, தலைவியின் உடல் வேறுபாடு போன்றவற்றினால் ஏற்படும் அலர் உண்மையில் மகிழ்ச்சியின் வெளிப்பாடா? அல்லது பொறாமையினால் தலைவியின் இழி நிலையில் ஏற்படும் மகிழச்சி உணர்வா? அல்லது ஒருவர் துன்பப்படும்போது மற்றவர்கள் அடையும் மனநிம்மதியா?

2. மேற்கூறிய உவமைப் புறப்பொருள்கள் எல்லாமே அகப்பொருளுக்கு வலிமை செர்ப்பனவாகவே இடம் பெற்றுள்ளன.

3. தலைவிக்கு உவமையாகக் கூறப்படும் புறச்செய்திகள் யாவும் தலைவியின் மேன்மையை எடுத்தியம்புவனவாகவே உள்ளது.


அனுப்புனர்.
முனைவர் அ.பூலோகரம்பை,
இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
திராவிடப் பல்கலைக்கழகம்,
குப்பம் – 517 425.
ஆந்திரா.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv