நட்பில் பல விதம். உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதே நட்பு

ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும், தோல்வி அடைவதற்கும் அவரது நட்பிற்கு முக்கிய பங்கு உண்டு. இன்றைய இளைஞர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டால் போதும் நண்பர்கள் வட்டம் புடை சூழ்ந்து விடும். பள்ளிக்குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அவரவர்க்கு ஏற்ப நட்பு வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. ஒவ்வொருவருக்கும் இந்த நட்பு அவர்களின் படிப்பு, திறமை, வேலை, மற்றும் பொழுதுபோக்குகளின் அடிப்படையில் அமைகிறது.

நட்பில் பல வகைகள் உண்டு. நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று திருணம் கோவில் திருவிழா, தேர்வில் வெற்றி, வேலை கிடைப்பது என்று என்ன நடந்தாலும் நண்பர்கள் தங்களுக்குள் பார்ட்டி வைப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. அத்தகைய நண்பர்கள் தனியாக ஒரு குழுவாக சேர்ந்து விடுகிறார்கள். அவர்கள் சேர்ந்து கும்மாளமடிக்கும் விருந்து, கேளிக்கை போன்ற ஆடம்பரங்களுக்கு அளவே இல்லை. இதற்கு உடன்படாதவர்கள் தானாகவே விலகிக் கொள்கிறார்கள். ‘காலத்தை வெல்லும் நட்பு’ உண்டு. சுயநலம் சிறிதும் இல்லாமல் இருக்கும். எத்தகைய வேறுபாடுகள், தடங்கல்கள் என்று வந்து இந்த நட்பை பிரிக்க முடியாது. நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும். உதாரணமாக கண்ணன் குசேலன், கோப்பெருஞ் சோழன் பிசிராந்தையார் போன்றவர்களின் நட்பை சொல்லலாம்.

நேருக்கு நேர் சந்தித்துப் பேசாமல் தொடர்பு கொள்ளும் நட்பை ‘பேனாநட்பு’ என்று சொல்வார்கள். அந்த காலத்தில் பேனாவின் மூலம் கடிதத் தொடர்பு மட்டமே கொண்டிருந்தனர். ஆனால் இத்தகைய நட்பு தற்போது செல்போன் ஈமெயில் என்று வளர்ந்து விட்டது.

சில நண்பர்கள் ஆதாயம் இருக்கும் வரை அருகில் இருப்பார்கள். இல்லாவிட்டால். விலகிச் சென்றுவிடுவார்கள். இன்னும் சிலர் அவர்களுக்கு ஆதாயம் இல்லை என்று தெரிந்து விட்டால் நண்பனை குறை சொல்லத் தொடங்கிவிடுவர். நட்பின் போர்வையை போர்த்திக் கொண்டு கூட இருந்தே குழி பறிக்கும் நண்பர்களும் உண்டு. அதுபோன்ற நண்பர்களிடம் பழகக்கூடாது என்பதால் தான் இதற்கு ‘கூடாநட்பு’ என்று பெயர்.

சில நண்பர்கள் பச்சோந்திகளாக இருப்பர். அவர்கள் யாரிடமிருந்து எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவு கறப்பார்கள். நண்பர்களின் பார்வைக்கு மட்டும் நல்லவர் போல் வேஷம் போடுவர்.

இன்னும் சில நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நண்பன் எந்த அளவிற்கு அவருக்கு உதவி செய்கிறானோ அதை மனதில் வைத்துக் கொண்டு அதே அளவு உதவியை பதிலுக்கு செய்து விடுவார்கள். இவர்கள் பிறர் செய்யும் உதவியை எதிர்பார்த்து செய்யும் மனநிலை உடையவர்கள்.

நல்ல நண்பர்கள் நம் வாழ்க்கைப் பாதையை சீரமைத்துக் கொள்ள உதவுகிறார்கள். இவர்களில் ஆண், பெண் நட்பு கொண்டவர்களும் உண்டு. நட்பை நெருப்பிற்கு உதாரணமாக கூறலாம். நெருப்பைக் கொண்டு விளக்கெரிக்கவும் முடியும். வீட்டை எரிக்கவும் முடியும்.

தன்னலம் கருதாது நண்பர்கள் ஒவ்வொருவரும் பிறருக்கு நன்மை செய்யும் போது தான் அந்த நட்புக்கு பெருமை சேர்கிறது. நட்பு என்பது மனிதாபிமானம், சேவை புரிந்து கொள்தல் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக வேண்டும். உண்மையான நட்பில் ஆண், பெண், சாதி, மதம், நிறம் என்று எந்த வேறுபாடும் இருப்பதில்லை.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv