ஜெயகாந்தன் சிந்தனைகளில் இருந்து

தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனின் பல்வேறு படைப்புக்களில் இருந்தும் தொகுக்கப்பட்ட கருத்துச் சிதறல்கள்

01. நம்மிடம் உள்ள மாபெரும் தீய குணம், நாம் எதையுமே கோயிலாக்கிவிடுவது. எவரையுமே தெய்வமாக்கிவிடுவது.. எனவேதான் நாம் வழிபடுவதில் சமர்த்தர்களாக இருக்கிறோம், வளர்வதில் இல்லை.


02. உணர்ச்சியின் எல்லைகளை மீறியவர்கள் விரும்பினால் கூட பின்வாங்கிவிட முடிவதில்லை. அவர்கள் நின்று நின்று அதற்காக வருந்தி, மேலும் மேலும் அந்த எல்லைகளை மீறுவதையே இயல்பாகக் கொள்வார்கள்.03. இலட்சியங்கள் தமிழரிடையே வெறும் பேச்சுக்காகவே பாவிக்கப்படுகின்றன. தமிழன் என்பவன் ஒரு மனிதனே ஆனாலும் அவன் பல்வேறு கூடுகளில் வசிக்கிறான். அதனால் நாம் மேலோட்டமாகவே எல்லாவற்றையும் சீர் செய்துவிடப் பார்க்கிறோம். நாம் ஆழமாக எப்போதுமே சீர் பெறுவதில்லை.04. அரசாங்க அலுவலகங்களில் மகான்களின் மரணத்திற்காக கொடிகள் பறக்கவிடப்படட்டும். அதற்காக பிரார்த்தனைகளும் நடக்கட்டும், அதற்காக எல்லோரும் கும்பல் கூடி அழ வேண்டாம். ரேடியோக்காரர் சோக கீதத்தை இசைக்கவிட்டு தம் பொய்த் துயரத்தைக் காட்ட வேண்டாம்.05. ஒன்றில் ஆழ்ந்து ஈடுபட்டிருக்கையில் அதுபற்றிப் பேச முடியாது. அப்படிப் பேசின் அப்பேச்சு அந்த ஒன்றின் கூறு ஆகுமே அல்லாது அனுபவமாகாது. அந்த ஒன்றிலிருந்து விலகிய பிறகுதான் அதுபற்றி முழுமையாக உணர்வது சாத்தியம்.06. மரணம் வாழ்வின் ஒரு பகுதிதான், அதைப்புரிந்து அதைத் தாங்கும் பக்குவம் பெற வேண்டுமே ஒழிய அதை ரசிக்க முடிவதில்லை. அதை ரசிக்கிறவர்களே அதைத் தாங்க முடியாதவர்களாக அழுது புலம்புகிறார்கள்.07. தமிழ் ஒரு மொழி, தனித்தமிழ் ஒரு முயற்சி. தனித்தமிழே தமிழ் மொழியல்ல. இந்தத் தெளிவு இல்லாத தனித்தமிழ் பிரியர்கள் தமிழை வெறுத்து வருகிறார்கள். மற்றவன் செய்த சைக்கிள் நமக்கு இனிக்கும், அவன் வைத்த பெயர் மட்டும் நமக்கு கசக்கும், இதுவல்ல தனித்தமிழ்.08. கல்வி பயில்கிறவனின் நோக்கம் அறிவுதானே ஒழிய மொழியல்ல. மொழியியற் கல்வி என்பது தனியாக உண்டு.09. இலக்கிய ரசனைக்கும் பள்ளிக்கூட கல்விக்கும் சம்மந்தமே இல்லை. வாழ்க்கையில் நாம் எவ்வளவு தூரம் கற்றுக் கொண்டிருக்கிறோம், வாழ்க்கை நம்மை எந்த அளவுக்கு பக்குவப்படுத்தியிருக்கிறது என்பதைப் பொறுத்தே ஒருவரின் இலக்கியத் தரம் அமைகிறது.10. குற்றங்களுக்கு தண்டிப்பது வேறு, குற்றங்களுக்காக அவமதிப்பது வேறு. தண்டிக்கும்போது குற்றவாளி மட்டுமே தண்டிக்கப்பட வேண்டும். அவமதிக்கின்றபோது மனிதனே அவமதிக்கப்படுகிறான். ஒரு தனிமனித குற்றவாளியைப் பகிரங்கமாக அவமதிக்கிறவர்கள் அந்தக் குற்றம் புரிந்தவனைவிட மிகவும் கொடியவர்கள்.11. சட்டங்களை விடவும் சமுதாய நலத்திற்கும், தனி மனித நலத்திற்கும் தன்னடக்கமே முக்கியம்.12. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு போலீஸ்காரனை நிறுத்தி கண்காணிப்பதைவிட ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஞானவானை உருவாக்க ஏதாவது செய்வதே நல்லது.13. நடராஜ விக்கிரகம் வெறும் அழகியல் உருவில் வந்ததல்ல, அதற்கு ஓர் அர்த்தம் – வலுவான அர்த்தம் இருக்கிறது. இன்னும் தெளிவாய் சொன்னால் அந்த அர்த்தமே அந்த அற்புத வடிவத்தை உருவாக்கியிருக்கிறது.14. நாலு மூடர்கள் கூடி காலத்தால் சவமாகிப் போன கருத்துக்களை சுமந்து திரிவதுதான் சமூக நெறி எனில், ஞானவான்களின் வருகையே ஒரு துர்ச்சகுனமாகிப் போய்விடும்.


15. உண்மையைச் சோதிக்கிறவன் அதைப் பொய்யாக்கும்வரை திருப்தியடையமாட்டான்.


16. பிழை என்று தெரியாமல் செய்கின்ற பிழைகளை எல்லாம் திருத்திக்கொள்ளும் முறையை மறுத்து, அதுவே சரியென்று ஆள் சேர்த்துக் கொண்டு நிலை நிறுத்தும் பேதமையை படைப்பாளியின் சுதந்திரம் என்று கூற முடியாது.17. ஒரு மரபை உடைப்பதற்கு அதைவிடவும் பலமான ஒரு புதிய மரபை கைக்கொள்ள வேண்டும். அந்த மரபு ஏன் உடைக்கப்பட வேண்டும் என்பது கூட அல்ல, அது எவ்விதம் உடைக்கப்பட்டிருக்கிறது என்று தர்க்கபூர்வமாக நிலை நிறுத்துவதன் மூலம்தான் வழக்கொழிந்த மரபுகளை கட்டி மாரடிக்கிற – வாழ்க்கைக்கு உதவாத மரபுகளை ஒதுக்கித்தள்ள முடியும்.18. கர்நாடக சங்கீதத்தை கற்க விரும்பும் ஓர் ஆங்கிலேயன் அதை ஆங்கிலத்தில்தான் கற்பேன் என்று அடம்பிடிப்பது அபத்தம். ( இது தனித்தமிழருக்கும் பொருந்தும் )19. தீமைகளைப்பற்றிய ஞானமின்மையே ஒருவனை அழிக்க வல்ல அறியாமைகளில் எல்லாம் தலையானது.20. பிரசாரமில்லாத இலக்கியமே கிடையாது, பிரச்சாரங்களும் இலக்கியமாவதுண்டு. இலக்கியங்களும் பிரச்சாரமாவதுண்டு. முன்னது சிறப்பு, பின்னது வீழ்ச்சி.21. வாழ்க்கையையும் மனித குலத்தையும் தேசம், மொழி என்ற எல்லைகளை தகர்த்து, காலம் எனும் வேலிகளை எல்லாம் கடந்து, நேசிக்கிற அன்புமயமான ஓர் ஆத்மாவின் விவேகக் கேள்வியே மார்க்ஸ் மேற்கொண்ட வாழ்நெறி என்று நான் புரிந்து கொள்கிறேன்.22. அடிப்படையில் தங்களுக்கு எதிரியாக இருந்தும் ஏதோ ஓர் அம்சத்தில் சுயநலம் கருதி தம்முடன் உடன்படுகிறவர்களை தழுவி அணைத்துக் கொள்வதும், எல்லாவிதத்திலும் தங்களோடு உடன்பட்டு ஒரு குறிப்பிட்ட விடயத்தில் மட்டும் தம்மோடு உடன்படாதவர்களை பிரதிர்ஷ்டம் செய்வதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பிடித்த தீராத வியாதி. ( இது புலம் பெயர் தமிழர் நாடுகளுக்கும் பொருந்தும். தேர்தலில் வெற்றிபெற தமிழ் தேசியத்தை ஆதரிப்பதாக நடிப்போருடன் சமரசம் காண்பதும், தமிழ் தேசியத்தை ஏற்றவன் ஊழலை கண்டித்தால் அவனை உதைப்பதும் இதற்கு உதாரணமாகும் )23. நாம் நிச்சயதார்த்தம் செய்த கல்யாணங்களை தவறு என்கிறோம், அதேவேளை காதல் என்பதும் இருவர் செய்யும் நிச்சயதார்த்தம்தான் என்பதை கூர்ந்து அவதானிப்பதில்லை.

24. ஒரு ரோஜாப்பூவில் இன்னொரு இதழ் கூடியிருந்தால் எப்படியிருக்கும், அதில் மல்லிகையின் வாசம் வந்தால் எப்படியிருக்கும் என்று நாம் சிந்திப்பதே இல்லை. மாற்றிச் சிந்திக்க நாம் எப்போதுமே தயங்குகிறோம்.25. நமது பெண்களை சுற்றி அவதூறு என்கிற வேலி போடப்பட்டுள்ளது. கொஞ்சம் அசைந்தால் முட்கள் கீறிவிடும். கண்ணைக்கட்டிய குதிரைபோல அவர்கள் வாழ்க்கை போகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv