18 வயதான தமிழ் பெண்கள் இரவுநேரக் கேளிக்கை விடுதிகளில்: நாம் எங்கே செல்கிறோம் ?


அண்மையில் நோர்வே நாட்டின் தலைநகரான ஓசிலோவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தேன். அங்கு நான் வருவதை எப்படியோ அறிந்துகொண்ட எனது மருமகன் எனக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டான், மாமா உங்க லண்டனில அல்ககோல்(alcohol) எல்லாம் சீப்பாமே ! நல்ல வொட்க்கா(Vodka) இருந்தா ஒருபோத்தல் வாங்கிவாறீங்களா நான் காசு தாரேன். எண்ட நண்பர் கேட்டார் அதுதான். அப்போது நான் உணக்கு எத்தனை வயதடா என்றேன் ? எனக்கு 18 என்றான். அப்ப உன் நண்பனுக்கு எண்டு நான் இழுக்க… அவருக்கு 21 என்று பதில் வந்தது.

நண்பன் தனது வீட்டிற்க்காகத்தான் அதைக்கேட்கிறார் என்று மிகவும் அழுத்தம் திருத்தமாக என் மருமகன் கூறியதால், விமான நிலையத்தில் உள்ள டியூட்டி பிரீ ஷாப்பில் அதை வாங்கிச் சென்றிருந்தேன். என்ன தான் இருந்தாலும் என் மருமகன் எனக்கு முன் தண்ணியடிக்க மாட்டான் என்ற அசாதாரண நம்பிக்கை. அது மட்டுமல்ல உண்மையாகவே, மதுபாணங்கள் நோர்வே நாட்டில் மிகக் கூடுதலான விலைக்கு விற்கப்படுவது யாவரும் அறிந்த விடையம் ! அதுவும் நண்பனுக்கு என்று சொல்லுவதால் அதை வாங்கிச் சென்றேன். ஓசிலோ சென்ற நான் எனது வேலைகள் அனைத்தும் முடித்துவிட்டு பின்நேரம் இளைப்பாற ஹோட்டலுக்குச் சென்றேன். எனது மோபைல் அலறியது.

எனது மருமகன்,…. மாமா வாங்கிட்டு வந்தனீங்களா ? ஓமடா, ஓகே நான் அங்க வந்து எடுக்கிறேன்.. நீங்கள் ஹோட்டலில் நில்லுங்கோ என்றான். பின்னர் திடீரென நீங்கள் தங்கியிருப்பது பெரிய ரூமா மாமா என்றான் ? நானும் ஓம் என்று பதிலழிக்க, சற்றும் தயங்காமல் என்னோடு 2 பிரன்ஸ் வருவினம் ஓகேயா என்றான் ? போத்தலை வந்து எடுத்துச் செல்ல ஏன் இவ்வளவு கூட்டம் என எனக்கு புரியவில்லை, சரி என்றேன். பின்னர் 5 நிமிடம் கழித்து திரும்பவும் போன் செய்த அவன், இன்னும் இரண்டுபேர் வர ஆசைப்படுகினம் என்றான். ஓகே வாருங்கள் வந்து என்னை பார்த்துவிட்டு போத்தலை எடுத்து போங்கள் எனக் கூறினேன்.

சிறிது நேரத்தில் ஹோட்டல் அறைக் கதவு, பலமாக தட்ட களைப்பில் அரை நித்திரையில் இருந்த நான் எழுந்துசென்று கதவை திறந்தால் 3 பெண்கள், அத்தோடு 2 ஆண்கள், அதில் ஒருவர் எனது மருமகன், மற்றையவர் அவர் நண்பராம். பாக்கிஸ்தானைச் சார்ந்தவர் என அவன் அறிமுகப்படுத்த, அப்படியானால் நீங்கள் முஸ்லீமா என நான் கேட்க அவரும் ஆம் என்கிறார். முஸ்லீம்கள் தண்ணியடிக்க மாட்டார்களே என நான் மருமகனிடம் கேட்டேன், இவனுக்காகவா போத்தலை கேட்டாய் என்று கேட்டுக்கொண்டு இருக்கும்போதே, இன்னொரு அதிர்சியும் வருகிறது.

அங்கு வந்த 3 பெண்களில் ஒருவர் தனது சூ வை லாவகமாகக் கழற்றி நிலத்தில் வைத்துவிட்டு, கட்டில் மேல் ஏறி, ஒரு பொலித்தீன் பையால், Smoke alarm (சிகரட் பிடித்தால், அலறும் அலாமை) சுற்றி கட்டிக்கொண்டு இருக்கிறாள். அப்போது தான் எனக்கே தெரிகிறது, அவர்கள் எனது அறையில் சிகரட் பிடிக்க உள்ளார்கள் என்று. வெளியே ஒரே குளிர் அதனால் தான் என்று எனக்கு ஒரு சாட்டுப்போக்கைச் சொல்லிவிட்டு, வந்த 3 தமிழ் பெண்களில் இருவர் சிகரட் பிடிக்க, மருமகனும், பாக்கிஸ்தானியும் மற்றப்பக்கமாக தாங்கள் கொண்டுவந்த பையைப் பிரித்து ஏதோ தேட அரம்பித்தனர்.

அப்பா அம்மா எல்லாரும் சுகமா என நான் கேட்டுக்கொண்டு இருக்கும் போதே, 6 கிளாசை வெளியே எடுக்கிறார் என் மருமகன். அப்படியே சிவரோடு சாத்தி பின்னி பெடல் எடுக்கவேண்டும் போல எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. வளர்ந்து மூன்று இலைவிடவில்லை, வாயில் சிகரெட், அத்தோடு நான் கொண்டுவந்திருக்கும் வொட்காவை(vodka) எனது ரூமில்வைத்து அடிக்க பிளான் ஏற்கனவே போடப்பட்டுள்ளது. என்னையும் ஒரு இளிச்சவாயன் ஆக்கும் அவர்கள் நடவடிக்கையைப் பார்க்க பொறுக்க முடியவில்லை. இருந்தாலும் அவர்கள் ஏதோ பேசிக்கொண்டனர். அதிலும் என்ன நடக்க இருக்கிறது ? இவர்கள் அடுத்து என்ன செய்ய திட்டம் தீட்டுகிறார்கள் என்பதை அறிய முற்பட்டேன்.

கோபப்பட்டு பிரியோசனம் ஒன்றும் இல்லை. இவர்கள் வழியில் போய் மொத்தமாக என்ன நடக்கப்போகிறது என்பதை அறிவோம் என என் மனம் என்னைத் தூண்டியது.

இவர்களின் இந்தப் போக்கு எங்குபோய் முடிவடையும் ? அடுத்து என்ன செய்யப்போகிறார்கள் என்பது பற்றியே எனது முழுக்கவனமும் இருந்தது. இவர்கள் நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்தால் அவர்கள் விரைவாக வெளியே போய்விடுவார்கள். அதனால் கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம் என்று எண்ணி, அவர்களோடு இணைந்து போவதுபோல நானும் நடித்தேன். எனக்கு ஒரு கிளாஸ் வொட்க்கா வார்க்கப்பட்டது, நானோ எனக்கு அல்சர் இருக்கு ஆனபடியால் கனக்க அடிக்க முடியாது என்று கூறி சிறிதளவு பாவித்துக்கொண்டேன்.

நேரம் ஆக ஆக, அவர்கள் ஜந்துபேரும் ஒருவாறாக போத்தலை அரைவாசி காலி பண்ணியதோடு, போதையில் மிதந்தனர். முதலாவதாக பேச ஆரம்பித்த பெண் , தனக்கு தன் அம்மாவை ரெம்பப் படிக்கும் என்றார், நான் எவ்வளவு குடித்துவிட்டு வீடுசென்றாலும் அவ ஒண்டும் கதைக்க மாட்டா, கதவைத் திறந்தால், நிறைய குடிச்சிருக்காய், மணக்குது சரி சரி போய் படு என்று அவ கூறுவாவாம் என்று சொல்லி ஜக்குபாய் படத்தில் வரும் ஸ்ரேஜா சொல்வது போல ஜ லவ் மை மம்மி என்று புராணம் பாடினாள் !! இது இவ்வாறிருக்க, எனது மருமகனோ தனது 16 வயதுடயை காதலி தன்னை விட்டுப் பிரிந்து சென்றதாக இன்னும் ஒரு கதையைச் சொல்லி.. காதலாகி கண்ணீர் மல்கினான் !

போதாக்குறைக்கு மற்றைய 3வரும் வேறுவேறு கதைகளை சொன்னார்கள். அப்பாவிடம் இன்று வெள்ளிக்கிழமை ஸ்பெசல் கிளாஸ்(special Class) இருப்பதாக ஒருவர் பொய்சொல்லி வந்திருக்கிறார். மற்றவரோ தான் இரவு நேர கேளிக்கை விடுதிக்கு சென்று தான் திரும்புவேன் என்று சொல்லிதான் வந்தாராம், குறிப்பாக பெண்கள் எல்லாருமே அப்படிச் சொல்லித்தான் வந்தார்கள் என்றனர். வியப்பில் ஆழ்ந்துபேனேன். எல்லோரின் தாய் தந்தையரையும் நான் இங்கு குறை கூற வரவில்லை என்பதை எமது அன்புள்ள தமிழர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும் ! ஆனால் இப்படியும் தாய் தந்தையர் இருக்கிறார்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இரவில் வயதுக்கு வந்த பெண்களை வெளியே அனுப்புவது தாய் மாருக்கு வயிற்றில் கொள்ளிக்கட்டையை வைத்திருப்பது போல என்று சொல்லுவார்கள் ஊரில்.

ஆனால் அங்கு இருக்க முடியாது என்று இங்கு வந்தால், வெள்ளைக்காரர்கள் செய்ய வெட்கப்படும் சிலவற்றை எமது தமிழ் சமூகம் செய்துவருகிறது அருவருக்கத்தக்க விடையமாகும் !

யாழ்ப்பாணத்தில் கலாச்சார சீர்கேடு, தமிழர் தாயகம் கலாச்சார சீர்கேட்டால் அழிகிறது என பல புலம்பெயர் இணையங்களும், செய்தி ஊடகங்களும் வாய் கிழியக் கத்துகிறதே, நாம் இருக்கும் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை எவராவது திரும்பிப் பார்த்தோமா ? இல்லை எமது பிள்ளைகள் என்ன தான் செய்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்த்தோமா ?

இவை எல்லாவற்றையும் யோசித்துக்கொண்டு நான் இருக்கும்போதே, அவர்கள் வெளியே கிளம்ப ஆரம்பமானார்கள் ! எங்கு செல்லப்போகிறீர்கள் என்று கேட்டால், இரவு நேர களியாட்ட விடுதிதான் வேறு எங்கு என்று தமிழில் பதில் வந்தது….. நானும் சரி செல்லுங்கள் என்றேன், இனி இவர்களைத் தடுக்கும் சக்தி என்னிடம் இல்லை என்பதை உணர்ந்தவனாய் சொன்னேன். ஆனால் கவனமாகச் செல்லுங்கள் வேற்றின மக்கள் அதிகம் வரும் இடம் என நான் சொல்லி முடிப்பதற்கு முன்னரே, இல்லை இல்லை கனக்க சிறிலங்கன் ஆட்கள், அதிலும் தமிழ் ஆட்கள் அங்க வருவினம் கொஞ்ச நேரத்தில எல்லாம் எங்கள் கட்டுப்பாட்டில் வரும் என்றான் மருமகன்.

அப்போது தான் எனக்கு பொறி தட்டியது. அப்ப ஒரு பெரிய கூட்டமே இதன் பின்னணியில் உள்ளதா ? என சந்தேகப்பட்டு, நானும் வரவா என்று கேட்டேன். முதலில் சிரித்த அவர்கள் பின்னர் ஓகே மாமா வாருங்கோ என்றார்கள். ஒருவாறாக நடந்து சென்று நாம் ஆறுபேரும் களியாட்ட விடுதியை அடைந்தால், நுளைவாயிலில் வைத்து எல்லோரும், பாக்கெட்டில் கைகளை விட்டு காசைத் தேடுவது போல நடிக்க ஆரம்பித்தனர்.

நான் களியாட்ட விடுதிக்கு வராவிட்டால் எப்படியும் இவர்கள் அதற்கு செல்வதற்கான 100 குரோனர்களை கட்டாயம் வைத்திருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் என்னை கொண்டு அந்த காசைக் கொடுப்பிக்க அவர்கள் போடும் நாடகத்தை நான் அறிந்தும் அறியாதவனாய் ஆறு பேருக்குமாக 600 குரோனர்களை நான் செலுத்தினேன்.

இப்போது உள்ளே நுளைகிறோம், ஒரே இருட்டு ! போதாக்குறைக்கு புகையையும் அடித்து பாட்டுச் சத்தங்கள் காதைப் பிளக்க, கலர் கலர் லைட்டைப் போட்டு கண்களைக் குத்தவைக்கும் அளவுக்கு ஒரு இம்சை ! இது தான் நைட் கிளப் ! ஆடிக்கொண்டு இருக்கும் பெண்கள், அதைப்பார்த்து ரசிக்கும் ஆண்கள். ஆண்பால் பெண்பால் வித்தியாசம் தெரியாமல் கண்டவனையும் கட்டிப்பிடித்து முத்தம்கொடுக்கும் ஒருகூட்டம் ! தாம் மிச்சம் பிடித்த காசில் ஓடிப்போய் பியரை வாங்கி அடிக்க ஆரம்பித்தார் அந்த பாக்கிஸ்தான் நபர்.

ஒரு ஓரமாக நின்று அனைத்தையும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்த எனக்கு அதிர்சிகள் காத்திருந்தன. நேரம் ஆக ஆக மேலும் மேலும் பலர் கூடி மண்டபமே களோபரமாக இருந்தது. அப்போது அடிக்கடி என்னுடன் வந்து பேசிவிட்டுச் செல்லும் எனது மருமகன் வந்து, இது நதியா, இது சிந்துயா, இது கலா, என பல தமிழ் பெண்களை எனக்கு அறிமுகம் செய்துவைக்கிறான், (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) அறிமுகம் செய்தது போக, செய்யாத தமிழ் பெண்களோடு சேர்த்து சுமார் 25 தமிழ் பெண்கள் அரை குறை உடுப்போடு அங்கு தன்னிலை மறந்து நடனமாடிக்கொண்டு இருந்தனர். பாரதி கண்ட புதுமைப் பெண்கள் இவர்கள் தானே எனக்கு தெரியவில்லை !

உண்மையைச் சொல்லப்போனால் எதுவும் புரியவும் இல்லை.

தமிழர்களுக்கு ஒரு பாரிய பண்பாடும் எமக்கு என்று ஒரு நாகரீகமும் கொண்டவர்கள் ! வேற்றின மக்களே எம்மைப் பார்த்து வியக்கும் அளவுக்கு சில நல்ல நாகரீகங்களை நடைமுறைப்படுத்தி வருபவர்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த பண்போடு வாழ்பவர்கள். ஆனால் புலம்பெயர்ந்து வாழ்வதால் இவ்வாறு எம்மை நாம் மாற்றிகொள்ள வேண்டுமா ? இது அவசியம் தானா ? தாய் தந்தையர் இப்படியான பிள்ளைகள் மீது சிறிது அக்கறை எடுத்தால் என்ன ? ஒன்றுமே வேண்டாம், புலம்பெயர் நாடுகளில் உள்ள எத்தனை தமிழ் பள்ளிக்கூடங்கள் தமது மாணவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகிறது என்று நினைக்கத் தோன்றுகிறது.

கேளிக்கை விடுதிகளுக்கு போகாமல் இருக்க நாம் சொல்லவில்லை. மது பாவித்தால் கூட பரவாயில்லை என்று சொல்லலாம், ஆனால் தமிழ் பெண்கள் சிகரட்டிற்கும் அடிமையாவதா ? பிற்காலத்தில் அவர்கள் மணம் முடிக்கும்போது, கணவனோடு எவ்வாறான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் ? குறிப்பாக பெண்கள் குடிபோதையில் இருக்கும்போதே தமது கற்பை இழப்பதாகவும், அல்லது உடலுறவில் ஈடுபடத் தூண்டுவதாகவும் ஆராட்சிகள் தெரிவிக்கின்றனர். தன் நிலை மறந்து கிடக்கும் பெண்களை, ஆண்கள் தம்வசப்படுத்துவது 89% சாத்தியமாக அமைகிறது. இதன் பின் விளைவுகளை ஏன் பெற்றோர் நினைத்துப் பார்க்க தவறுகின்றனர் ? இப்படியான சூழ் நிலையில் எயிட்ஸ் போன்ற உயிர்கொல்லி நோய்களும் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது.

புலம்பெயர் நாடுகளில் தமிழ் பாடசாலைகளுக்கு வார இறுதியில் சென்று தமிழ் மற்றும் கலைகள் பயின்றுவரும் மாணவர்கள் இவ்வாறான கேளிக்கை, மற்றும் களியாட்ட விடுதிகளுக்குச் செல்வது மிகக் குறைவாகக் காணப்படுவதாக நாம் நடத்திய கருத்துக் கணிப்பில் இருந்து தெரியவருகிறது. அத்தோடு அவர்களின் மனம் இசை தொடர்பாகவோ அல்லது பரத நாட்டியம் தொடர்பாகவோ செல்வதால், அல்லது தமிழ் சம்பந்தப்பட்ட கலைகளோடு தொடர்பு இருப்பதால்.. இயல்பாகவே அவர்களுக்கு எது கெட்டது எது நல்லது என்று புரிந்துகொள்கிறார்கள். சிலர் படிப்பில் தமது முழுநேரத்தையும் செலவிடுவதால் இப்படியான கேளிக்கைகளை தவிர்க்கின்றனர்.

தாய் தந்தையருக்கு பொய்சொல்லிவிட்டுச் சிலரும், பாதி உண்மையைக் கூறி மிகுதிப் பாதியை மறைத்துவிட்டு சிலரும், முழுக்க முழுக்க உண்மையைக் கூறிச் சில பிள்ளைகளும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் களியாட்ட விடுதிகளுக்குச் செல்கின்றனர் என்பதை, நான் லண்டனில் நடத்திய சிறிய ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளேன். ஆனால் பெற்றோர்களால் தமிழ் பண்பாடு குறித்து சொல்லிவழர்க்கப்பட்ட பிள்ளைகளும், தமிழ் பாடசாலைகளுக்குச் செல்லும் பிள்ளைகளில் கணிசமானோர், மேற்கத்தைய பழக்கவழக்கங்களைத் தவிர்க்கின்றனர் என்பதே உண்மையாகும்.

தாய் தந்தையர் தமது பிள்ளைகளை முதலில் குறைத்து மதிப்பிடுவதை பெற்றோர் நிறுத்தவேண்டும். அவர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள், இப்படிச் செய்யமாட்டார்கள் என ஒரு நம்பிக்கையை வளர்ப்பதை நிறுத்தி முதலில் எலாவற்றிலும் ஒரு சந்தேகக் கண்கொண்டு, பார்ப்பது நல்லது. அல்லது கொஞ்சமாவது விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் ! அவர்கள் ஒரு வயதைக் கடக்கும்வரை தான் இந்தப் பிரச்சனை இருக்கும், சுமார் 21 வயதை தாண்டினாலே அவர்களுக்கு பொறுப்பு தானாகவே வந்துவிடும்.

எனவே நோர்வே நாடு மட்டுமல்ல, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மன் உட்பட அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழ் பெற்றோர் தமது பிள்ளைகள் மீது மிகுந்த அக்கறை எடுக்கவேண்டும். வருங்கால எமது சந்ததிகள் சமூதாயத்தில் நல்லதொரு விருட்சமாக இருக்க நாமே வழிகோலவேண்டும்.

தமிழ் பாடசாலைகள் அனைத்தும் இது குறித்து புதிய கவனம் செலுத்துவது நல்லது. வெறுமனவே சமயத்தையும், நாட்டியத்தையும், தமிழையும் கற்றுக்கொடுக்காமல், எமது சமுதாய பாரம்பரியத்தையும் கற்றுக்கொடுக்கவேண்டும் ! அத்தோடு நின்றுவிடாது எமது ஈழ விடுதலைப் போராட்டம் குறித்தும், அதற்காக நாம் கொடுத்து விலை குறித்தும் சிறார்களுக்கு அறிவூட்டவேண்டும் ! சில தமிழ் பாடசாலைகள் இது ஒரு அரசியல் எனக் கூறி தமிழர்களின் போராட்டத்தை பற்றி பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க மறுத்துவருகிறார்கள்.

ஈழத் தமிழன் என்று சொன்னால் அவர்கள் தனி நாட்டிற்கான போராட்டம், அதில் ஒரு அங்கமாகும். அதனை மறைப்பது எந்தவகையில் நியாயம் ? ஒரு புத்தகத்தில் ஒரு பக்கத்தை மட்டும் கிழித்துவிட்டு அதனை சிறுவனுக்கு படிக்கக்கொடுப்பது போல உள்ளது தற்போதைய நிலை. கிழிக்கப்பட்ட அந்தப் பக்கத்தை படிக்கும் உரிமையும் சிறார்களுக்கு உண்டு என்பதை மறுக்க முடியாது. ஈழ விடுதலை, எமது இனத்தினை எவ்வாறு பேரினவாதிகள் அடிமைப்படுத்தினார்கள் என்பது குறித்து சிறுவர்களுக்கு அறிவூட்டுவதன் மூலம் அவர்களை நாம் வேறுபாதைக்கு எடுத்துச் செல்லமுடியும்.

குடித்து கெட்டு குட்டிசுவராகுவதற்கு பதிலாக, ஒரு நல்ல விடுதலைவேட்கை கொண்ட இளையோராக, எமது இனைத்தை நேசிக்கும் ஒரு நல்ல மனிதராக எமது இளைஞர்களை நாம் மாற்றவேண்டும். அதில் பெரும் பங்கை பெற்றோரும், தமிழ் பள்ளிக்கூடங்களும் ஏற்று எமது இளைய சமுதாயம் தளைக்க வழிகோலவேண்டும் என்பதே இந்தப் பேதை தமிழனின் ஒரு ஆதங்கம்!

நன்றி: அதிர்வு

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv