அன்னையும், பிதாவும்

இந்த தேசத்தின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்று தாய் தந்தையரை வணங்குவதும் போற்றுவதும் ஆகும். “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ – இதுதான் இந்தியப் பண்பாட்டின் அரிச்சுவடிப் பாடம். எனவேதான் தொழுவதற்கு உரிய மாதா, பிதா, குரு, தெய்வம் வரிசையில் முதல் இரண்டு இடங்களில் தாயும் தந்தையும் இடம் பெறுகிறார்கள்.

மனித வாழ்வின் மிகப்பெரும் பேறு பிள்ளைச் செல்வம். கணவன்-மனைவி உறவின் உயிருள்ள ஒரு அடையாளம் குழந்தை. கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் தரும் ஒப்பற்றப் பரிசு அது. குழந்தைப் பேற்றின் காரணமாக கணவன்-மனைவி என்றநிலையிலிருந்து தாய்-தந்தை எனும் நிலைக்கு உயர்கிறார்கள்.

பெற்றோர் பிள்ளைகளை வளர்க்கிறார்கள் என்பது நமக்குத் தெரிந்த உண்மை. ஆனால் பிள்ளைகளால் பெற்றோரும் வளர்கிறார்கள் என்பது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை. பிள்ளையை வளர்ப்பதன் காரணமாக தாய்-தந்தைக்கு இடையிலான பாசமும் நேசமும் வளர்கின்றன. அவர்களுக்கிடை யிலான உறவும், நெருக்கமும் வலுப் பெறுகின்றன.

பெற்றோர் செய்யும் தவறு களை, முரண்பாடுகளை பிள்ளை கள் எளிதாக சுட்டிக் காட்டி விடுகின்றனர். “அப்பா நீங்க பொய் சொல்றீங்க’. “அம்மா நீங்க ஏமாத்த றீங்க’ என்பன போன்ற பேச்சுக்கள் பெற்றோரை நெறிப்படுத்த வல்லது. பிள்ளைகள் பெற்றோரின் உள்ளத்தை உயர்வாக்க வல்லவர்கள்.

பெற்றோரிடையே நல்லுறவு இல்லாத குடும்பங்களில் பிள்ளை கள் நன்முறையில் வளருவது கடினம். ஏனெனில் குழந்தையின் மனவளர்ச்சியை நிர்ணயிக்கும் முக்கிய காரணி தாய் தந்தைக்கு இடையேயான அன்புணர்வே ஆகும்.

பெற்றோர் பிள்ளைகளுக்கு பெரிய வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர இயலாமல் போகலாம். ஆனால் எல்லாப் பெற்றோரும் பிள்ளைகளுக்கு கட்டாயம் தர வேண்டிய ஒன்று அன்பு. நிறைவான அன்பை மட்டும் கொடுத்து விட்டால் வேறு எந்தக் குறைபாடும் பிள்ளைகளைப் பெரிதாக பாதிக்காது.

சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் பலர் சிறுவயதில் பெற்றோரின் அன்பைப் பெறாதவர்கள் என்பதை ஆய்வுகள் கூறுகின்றன. பெற்றோரால் வெறுக்கப்படும் குழந்தை பின்னாளில் தன்னையும், தாய்-தந்தையரையும், சமூகத்தையும் வெறுக்கத் தொடங்குகிறது. அன்பு அற்ற குடும்பங்களில் வளரும் குழந்தை களும் ஒருவகையில் ஊனமுற்றகுழந்தைகளே.
பிள்ளை ஆனோ, பெண்ணோ எதுவென்றாலும் ஒரே மாதிரி அன்புடனும், மகிழ்வுடனும் பெற்றோர் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக் கொள்வதோடு உள்ளன்பை உளமாறவெளிக்காட்டவும் வேண்டும். அப்போதுதான் பிள்ளைகளும் அன்பு செய்யக் கற்றுக் கொள்வார்கள்.
குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவது, அதனை மார்போடு அணைத்து உச்சி முகர்வது, மடியில் வைத்துக் கொஞ்சுவது. தோளில் தூக்கிக் கொண்டு வேடிக்கைக் காட்டுவது போன்ற அனைத்தும் அன்பின் வெளிப்பாடுகளே.

பிள்ளைகள் வளர வளர அவர்களுடைய அறிவுக்கும் திறமைக்கும் ஏற்ப குடும்பப் பொறுப் புகளிலும், வீட்டு வேலைகளிலும் அவர்களை ஈடுபடுத்துவது அவசியம். அவர்கள் பிறர் உதவி இன்றித் தாங்களாகவே காரியங் களைச் செய்யத் துவங்கும்போது பெற்றோர் அதனைத் தடுக்காமல், அனுமதித்து ஊக்குவிக்க வேண்டும்.

எந்த அளவுக்குப் பிள்ளைகளுக்குப் பாராட்டும் ஊக்கமும் தரப்படுகின்றதோ அந்த அளவுக்கு அவர்கள் தன்னம்பிக்கையோடு வளரும் வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் தாங்களாகவே முயலும் போது பல காரியங்களில் தடுமாறலாம். தவறுகள் செய்யலாம். அவ்வேளைகளில் பெற்றோர்களின் குறுக்கீடு கூடாது. மாறாக, அவர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் கூறி நல்வழியைக் காட்டலாம்.

பெற்றோரால் பாராட்டப்படும் பிள்ளை களிடம் தன்னம்பிக்கை தழைக்கிறது. நியாயமாக நடத்தப்படும் பிள்ளை நீதியைக் கடைபிடிக்கிறது. அன்பு செய்யப்பட்ட பிள்ளை அன்புள்ளவனாக வளர்கிறான். எனினும் நூற்றுக்கு நூறு எவ்வித குறையுமின்றி பிள்ளை வளர்ப்போர் எவருமில்லை. பிள்ளை வளர்ப்பில் புதுப்புது பிரச்சனைகள் எழுவது இயற்கை. அதற்கு உரிய தீர்வு காண்பது பெற்றோரின் கடமை.

பிள்ளைகள் தவறு செய்யும்போது அவர்களை தண்டிப்பதையும், கண்டிப்பதையும் விட திருத்துவதே முறையானது. திருத்துவது என்பது அவர்கள் செய்த செயலின் தீயவிளைவு களை உரிய வகையில் விளக்கிச் சொல்வதாகும். செய்த தவறையே திரும்பச் செய்யும்போது கண்டிக்க வேண்டும். திருத்துவதோ, கண்டிப் பதோ எதுவாக இருப்பினும் அதனை பிறர் முன்னிலையில் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் அவர்கள் அவமான உணர்வுக்கு ஆளாகி தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளப் டுவார்கள்.

அதிக கண்டிப்பு ஒரு குற்றமென்றால் பிள்ளைகளை அவர்கள் விருப்பத்திற்கு முழு வதும் சுதந்திரமாக விட்டுவிடுவதும் பெற்றோ ரின் மற்றொரு குற்றமாகும். அதிகமான கட்டுப்பாடு, அதிகமான சுதந்திரம் இரண்டுமே பிள்ளைகளின் வாழ்வை பாதிக்கும் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொண்டு, பிள்ளைகளை தேவையான போது கண்டிக்கவும், தேவையான போது பாராட்டவும் பழகிக் கொள்ள வேண்டும்.

பிள்ளைகளை நண்பர்களாகக் கருதி மனம் விட்டுப் பேசி, பாசம் காட்டி பராமரித்து, தட்டிக் கொடுத்து தைரியம் தரவேண்டும். மதிப் பெண்ணை மட்டுமே வைத்து பிள்ளையின் அறிவையும் திறமையையும் எடைபோடுவது தவறு. மதிப்பெண் பெறக்கூடிய நல்ல வழிமுறை களை எடுத்துச் சொல்லி ஊக்கப்படுத்த வேண்டும்.

பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பத்தில் பள்ளி நேரம் போக மற்றநேரங்களில் பிள்ளைகள் என்ன செய் கிறார்கள் என்று அவர்களால் அறிய முடிவதில்லை. அழியும் செல்வத்துக்காக அலைந்து, அழியாத செல்வத்தை கவனிக்கத் தவறி விடுகின்றனர்.
பெற்றோரில் அதாவது தாய் தந்தை இருவரில் முதலிடம் தாய்க்கே. ஒரு புதிய உயிரைக் கருவில் சுமந்து, குழந்தையாகப் பெற்றெடுத்து, பேணி வளர்த்து ஆளாக்குவது எளிதான காரியமல்ல. “அம்மா என்றழைக்காத உயிரில்லையே’, “அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை’ போன்றதிரைப்பாடல்களைக் கேட்கும்போது தன் அம்மாவை நினைத்துப் பார்க்காத மனிதர்களே இருக்க முடியாது. உள்ளத்தையும் ஆன்மாவையும் மலரச் செய்யும் உயர்ந்த அனுபவமே தாய்மை.
பாலை நினைந்தூட்டும் போது அவள் அன்பின் வடிவம், பசித்த வயிற்றுக்கு அமுதூட்டும் போது தியாகத்தின் இருப்பிடம். அழுது துடிக்கும்போது அரவணைத்துக் கொள்ளும் போது இன்பத் தேனூற்று. மொத்தத்தில் அவள் ஒரு கண்கண்ட தெய்வம், பேசும் தெய்வம்.

அன்பு, இனிமை, தியாகம், செயல்திறன் போன்றவை தாய்மையின் பண்புகள். குழந்தை பெறுவது மட்டுமே தாய்மையின் இலக்கணம் ஆகாது. தாய்மைப் பண்பு உள்ளவளே தாய்.

பெற்றகுழந்தையை குப்பைத் தொட்டியில் வீசி விட்டுச் செல்லும் பெண்ணைத் தாய் என்று சொல்ல முடியாது. தாய்மைப் பண்புகள் காரண மாகத்தான் இறைவனை “தாயுமானவன்’ என்றும், “அம்மையப்பன்’ என்றும் அழைக்கிறோம்.

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தாய்மைப் பண்பைப் பெறவேண்டும். தந்தையிடமும், ஆசிரியரிடமும், அரசாள்வோரிடம் தாய்மைப் பண்பு மலர வேண்டும். மனம் மலட்டுத் தன்மை கொண்ட பாலைவனமாக இருக்கக் கூடாது. மாறாக, தாய்மை பொங்கும் சோலைவனமாக இருக்க வேண்டும்.

வயிற்றில் வளரும் போதே கண்ணன் பேசிய பேச்சுக்களை அபிமன்யு ஆர்வத்துடன் “ஊம்’ கொட்டிக் கேட்டுக் கொண்டிருந்தததை பற்றி இதிகாசங்கள் கூறுகின்றன. சரித்திரத்தில் சாதனை புரிந்த சிவாஜி, மகாத்மா காந்தி, நேதாஜி முதலானோர் முன்னேற்றத்தில் பெரும்பங்கு தாய்க்கு உண்டு என்பது வரலாறு காட்டும் உண்மை.

எப்படிப்பட்டத் தாயும் தாயன்பைத் தருவதில் சோடை போவதில்லை. அடி, திட்டு, வசை, மிரட்டல் போன்றகுணங்களைக் கொண்ட தாயாலும் தன் அன்பை குழந்தையிடம் சேர்த்து விடும் ஆற்றல் அன்னைக்கு உண்டு. குடும்பச் சண்டையின் போது தாய் அழுதால் காரணம் ஏதும் அறியாமலேயே பிள்ளைகளும் அழுது விடும் காட்சியே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

பிள்ளைகளுக்கு பெற்றோர்களே முதல் ஆசிரியர்கள். உண்ணும் முறை, உடுத்தும் முறை, பேசும் முறை, பழகும் முறை, நடந்து கொள்ளும் முறைபோன்றஅடிப்படையான செயல்களுக்கு பெற்றோர்களே ஆசிரியர்கள். மேலும் பண்புகள், பழக்க வழக்கங்கள், மதிப்பீடுகள், நல்லொழுக்கம், அறநெறி, இறைஉணர்வு போன்றவற்றையும் முதன் முதலாக பிள்ளைகளுக்கு ஊட்டுவதும் பெற்றோர்களே.

குழந்தைகள் நன்கு படிப்பதற்கும், நல்ல பண்புகளுடன் விளங்குவதற்கும் தாயே முக்கிய காரணம். அவளின் அதி கவனமும், கவனிப்பும் இல்லையேல் குழந்தைகள் சிறப்புறவளர மாட்டார்கள். “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே’.

பேராசிரியர் பி.கே. மனோகரன்

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv