நேர்முகத்தேர்வு- பொதுவான கேள்விக்கணைகள்


நேர்முகத்தேர்வில் உங்கள் அறிவைச் சோதிக்கும் கேள்விகளை விட உங்கள் தன்மையைச் சோதிக்கும் கேள்வுகள் தான் பொதுவாக அதிகமாக இருக்கும். ஒவ்வொரு நேர்முகத்தேர்வும் வெவ்வேறு விதம். ஒரு தேர்வாளரின் குணமும் மற்றவருடைய குணமும், நேர்முகத்தேர்வுகளுக்கான முறைகளும் ஒத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சிலர் அமைதியாக, தட்டிக்கொடுக்கும் விதமாக உங்களை நேர்முகம் செய்யலாம். சிலர் உங்களைச் சீண்டி உங்கள் குணாதிசயத்தை எடை போட விரும்பலாம். ஆனால் நீங்கள் ஒரே விதமாக, அமைதியாகவும் தன்னம்பிக்கையுடனும் பதில்களைச் சொல்வது அவசியம்.

நேர்முகத்தேர்வில் கேட்கப்படும் சில கேள்விகளும் அவற்றிற்கு விடை சொல்ல வேண்டிய முறைகளையும் தெரிந்துகொண்டு பயிற்சி செய்தால், நேர்முகத்தின் பொழுது தேர்வாளர்களை தைரியமாக எதிர்கொள்ள இயலும்.

"உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்" என்பது பொதுவாக நீங்கள் தேர்வு அறைக்குள் நுழைந்து அமர்ந்தவுடன் உங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்காகக் கேட்கப்படும் கேள்வி. இக்கேள்விக்கு நீங்கள் அதிகபட்சமாக இரண்டு நிமிடங்கள் எடுத்துக்கொள்ளலாம். எனவே 'நான் ஆயிரத்துத்தொள்ளாயிரத்து எண்பத்தி மூன்றாம் ஆண்டு மதுரையில், ஆசிரியராக வேலை பார்த்த ஆறுமுகம் அவர்களின் முதல் மகனாக/மகளாகப்பிறந்தேன்' என்று ஆரம்பிக்காமல் 'நான் இன்ன திறமைகள் உடையவன் (உடையவள்) இத்தனை வருட அனுபவம் உள்ளது அல்லது இந்தப் படிப்புப் படித்துள்ளேன். ' என்ற விதமாகப் பதில் சொல்லவேண்டும். அதிலும் நீங்கள் குறிப்பிடும் உங்கள் திறமை, படிப்பு மற்றும் அனுபவம் நீங்கள் விண்ணப்பித்திருக்கும் வேலைக்குத் தொடர்புடையதாக, அந்த நிறுவனத்திற்குப் பயன்படுவதாக இருக்கும் என்பதை சொல்லாமல் சொல்வது முக்கியம். இந்தத் துவக்கக் கேள்வியில் சிக்சர் அடித்துவிட்டீர்களானால், உங்களைப்பற்றிய மதிப்பீடும் உயரும், உங்களுக்குள்ளும் தன்னம்பிக்கை பெருகும். அதனால் இக்கேள்விக்கு இரண்டு மூன்று வரிகளில் பளிச்சென்று ஒரு பதிலைத் தயாரித்து வைத்துக்கொள்ளுங்கள்.

"இந்த வேலைக்கு ஏன் வர நினைக்கிறீர்கள்" அல்லது "இந்த நிறுவனத்தை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்" என்ற ஒரு கேள்வியும் பல சமயங்களில் கேட்கப்படலாம். ஒரு குறிப்பிட்ட பணியில் உங்களுக்கு ஏன் நாட்டம் பிறந்தது என்பதற்கான காரணங்களைச் சொல்லலாம். 'இயற்கையிலேயே எனக்குக் கணக்கு தொடர்பான, புள்ளிவிவரம் தொடர்பான தகவல்கள் பிடிக்கும்', 'நாம் நம் அறிவை வளர்த்துக்கொள்ளவும், பிறருடைய அறிவை வளர்க்கவும் வாய்ப்பளிக்கும் பணி ஆசிரியர் பணி', 'எனக்குப் பயணங்களில் மிகுந்த ஆர்வம் உண்டு', 'மக்களைச் சந்திப்பது எனக்குப் பிடிக்கும்' என்ற விதமான பதில்கள் முதல் பகுதிக்கும், அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தின் செயல்பாடுகள், பலம் பற்றிக் கூறி இத்தகைய நிறுவனத்தில் பணி செய்வது உங்கள் எதிர்கால முன்னேற்றத்துக்குப் பயன்படும் என்பதால் அந்த நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்ததாக இரண்டாம் பகுதிக்கும் சொல்வது நல்லது. கூடியவரை உண்மையான காரணங்களையே சொல்லுங்கள். (அதே நேரம், 'வேறு வழியில்லை, உண்மையிலேயே இந்தப்பணியில் எனக்கு விருப்பம் கிடையாது. சந்தர்ப்பம் அப்படி' என்ற உண்மை....மிகவும் கசப்பானது. அதைச் சொல்லிவிடக்கூடாது.)

பொதுவாகப் பெரும்பாலானவர்கள் சறுக்கும் இடம் 'உங்கள் பலம் என்ன பலவீனம் என்ன?' என்ற கேள்விதான். உங்கள் பலம் பற்றிய கேள்விக்குப் பதில் சொல்கையில் 'நான் மிகவும் திறமையாக வேலைசெய்வேன், கடினமான உழைப்பாளி, மிகவும் புத்திசாலி' என்ற பொதுப்படையான பதில்களோ, உங்கள் பணிக்குச் சம்பந்தமில்லாத திறமைகளோ பற்றிக்கூறக்கூடாது. நீங்கள் தகவல் தொடர்பு சார்ந்த பணிக்கு விண்ணப்பித்திருக்கும்பொழுது உங்கள் பன்மொழி அறிவு, ஆங்கிலப்புலமை ஆகியவை பற்றிக்கூறலாம். இதுவே கணிணி தொடர்பான பணியாக இருப்பின் வேகமாகப் புரிந்துகொள்ளும், கற்றுக்கொள்ளும் திறன், கணிப்பொறி தொடர்பான உங்கள் படிப்பு, அனுபவம் இவை உங்கள் பதிலில் இடம்பெறவேண்டும்.
பலவீனத்தைப் பற்றிச் சொல்கையில் 'எனக்கு எந்த பலவீனமும் இல்லை', 'நான் தேவைக்கதிகமாகக் கடினமாக உழைப்பேன், அதுதான் என் பலவீனம்.' 'நான் எல்லோரிடமும் வேலை சுத்தத்தை, நேர்த்தியை (Perfection) எதிர்பார்ப்பது என் பலவீனம்' என்ற மாதிரியான பதில்கள் உங்களைத் தேர்வு செய்தவர்கள் கேட்டுப் புளித்துப் போனதாக இருக்கும். உங்கள் வேலைக்குத் தொடர்பு இல்லாத ஒரு விஷயத்தை உங்கள் பலவீனம் என்று சொல்லி, அப்பலவீனத்தைப் போக்க நீங்கள் என்ன செய்து வருகிறீர்கள் என்று சொல்வது நல்லது. 'புள்ளி விவரம், கணக்கு' தொடர்பான வேலைகளானால், "பொதுவாக எனக்கு புதிய மனிதர்களுடன் சுலபமாகக் கலந்து பழக வராது. ஆனால், இப்பொழுது சில பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து அதற்கான பயிற்சிகளைப் பெற்று வருகிறேன்.", கணிப்பொறி தொடர்பான பணிகள் எனில், "எனக்கு ஆங்கிலத்தில் பேசும்பொழுது கொஞ்சம் தடுமாற்றம் மற்றும் பதட்டம் ஏற்படும், இப்பொழுது சரளமாக ஆங்கிலம் பேசக்கற்றுத்தரும் வகுப்புக்குச் சென்று வருகிறேன்." என்ற விதமான பதில்கள் நல்ல விதமான அபிப்பிராயத்தை உண்டாக்கும்.

இன்னும் ஐந்து வருடங்களில் உங்களை எங்கு காண விரும்புகிறீர்கள்? என்பது ஒரு தந்திரமான கேள்வி. நான், இந்நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் ஆக விரும்புகிறேன், தலைமை நிர்வாகி ஆக விரும்புகிறேன் என்று அதிகமாக அளக்காமல், 'இந்த நிறுவனத்தின் அனைத்துத் துறைகளையும் பற்றி ஓரளவு தெளிந்த அறிவு பெற்று, இந்த நிறுவனத்தில் ஒரு தவிர்க்க முடியாத, முக்கியமான அதிகாரி என்ற அந்தஸ்தைப் பெற விரும்புகிறேன்.' என்று தொனிக்கும் பதில்கள் சிறந்தது. அல்லது உங்களுக்கு அந்த நிறுவனத்தின் பணி மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள், பதவி உயர்வுக்கான விதிமுறைகள், தகுதிகள் (Career Opportunities and career policies) போன்றவை தெரிந்திருந்தால், ஐந்து வருடங்களில் உங்களால் உழைப்பாலும் திறமையாலும் நீங்கள் எந்த நிலையை அடைய முடியும் என்று நினைக்கிறீர்களோ அதைச் சொல்லலாம். அது நேர்மையான பதிலாக இருக்கும்.

உங்கள் சாதனை என்ன? என்ற கேள்வி கேட்கப்படுமாயின், உங்கள் பழைய நிறுவனத்தில் (இந்தப்பணி தொடர்பானது) நீங்கள் செய்த சில செயல்கள், பெற்ற விருதுகள் அல்லது பரிசுகள், உங்கள் கல்லூரி நாட்களில் உங்கள் படிப்பு/இப்பணி தொடர்பாக நீங்கள் எதையாவது செய்திருப்பின் அதைக் குறிப்பிடுங்கள். அப்படி எதுவும் இல்லை எனில், 'சாதனை என்று பெருமைப்படத்தக்க அள்வில் நான் எதுவும் செய்திருப்பதாகக் கருதவில்லை.' என்று சொல்லிவிட்டு நீங்கள் செய்த பணிகளில் உங்களுக்கு மதிப்பினைப் பெற்றுத்தந்த நிகழ்ச்சி, கல்லூரிகளில் நீங்கள் ஒரு கருத்தரங்கத்தினைப் பொறுப்பேற்று நடத்தியது போன்றவற்றைச் சொல்லலாம்.

சம்பளம் பற்றி ஒரு நிறுவனம் பேசுகையில் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. ஒரு நிறுவனத்தில் ஒரு பணிக்கு விண்ணப்பிக்கையில் பொதுவாக அப்பணிக்கு என்ன சம்பளம் தரப்படுகிறது என்பதை தெரிந்தவர்கள் யாரிடமாவது விசாரித்து வைத்துக்கொள்ளுங்கள். அல்லது சில குறிப்பிட்ட துறையில் இப்பதவிக்கான சராசரி சம்பளம் என்ன என்பது குறித்து நீங்கள் இணையத்தில் கூடத் தெரிந்துகொள்ளலாம். ஒரு பணிக்குச் சராசரியாகக்கொடுக்கப்படும் சம்பளம், நீங்கள் முன்பு வேலை பார்த்த நிறுவனத்தில் நீங்கள் கடைசியாகப் பெற்ற ஊதியம், அக்குறிப்பிட்ட பணியில் உங்கள் திறமை இவற்றின் அடிப்படையில்தான் நீங்கள் கேட்க வேண்டும். மிகவும் குறைவாகக் கேட்டால் உங்களைப்பற்றிய தாழ்வான அபிப்பிராயம் உருவாகும். அதிகம் கேட்டால், நீங்கள் ஒரு பேராசைக்காரர் என்று தோன்றிவிடும். அதேபோல், இவ்வளவு சம்பளம் இல்லையென்றால் நான் வரமாட்டேன் என்ற ரீதியில் பேசக்கூடாது.

எந்த ஊரில் வேண்டுமானாலும் வேலை செய்வீர்களா, இரவுப்பணி செய்வீர்களா போன்ற கேள்விகளுக்கு, உங்களுக்கு உடன்பாடு இல்லையெனில் 'இப்போதைக்கு இருக்கட்டும்' என்று தலையை ஆட்டுவதை விட 'தென்னிந்தியா என்றால் பரவாயில்லை', அல்லது 'சில குறிப்பிட்ட காரணங்களால் நான் மும்பையில் அல்லது டெல்லியில் மட்டுமே வேலை செய்ய விரும்புகிறேன்.' 'இரவுப்பணி செய்வதில் எனக்கு விருப்பமில்லை' என்று
சொல்லிவிடுங்கள். பின் பணி நியமனம் செய்த பிறகு இங்கே மாற்றுங்கள், அங்கே மாற்றுங்கள், பகல் நேரம் கொடுங்கள் என்று தொங்க நேரிட்டுவிடலாம். இது உங்களைப்பற்றி ஒரு தப்பான எண்ணம் எடுத்த எடுப்பிலேயே உருவாக வழி வகுக்கும்.

நீங்கள் எதாவது கேட்க விரும்புகிறீர்களா? என்றால் "கிடைத்தது வாய்ப்பு என்று ' தேவையான பொழுது விடுப்பு கிடைக்குமா? திருமணமான பின் சொந்த ஊருக்கு மாற்றுவீர்களா, இரவு நீண்ட நேரம் இருக்க வேண்டுமா? என்னென்ன சலுகைகள் உள்ளன?' என்பது மாதிரிக் கேள்விகளைக் கேட்டு விடவேண்டாம். அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள், எத்தனை கிளைகள் உள்ளன, நிர்வாகம் எத்தனை அடுக்குகளில் நடைபெறுகிறது. போன்ற நிறுவனம் தொடர்பான கேள்விகளைக் கேட்டுத் தெரிந்து கொள்வது சிறப்பானது.

வெற்றிக்கு வாழ்த்துக்கள்...

நன்றி -ஈழநேசன் .com

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv