விண்ணைத் தாண்டி வருவாயா – காதலை அவமானப்படுத்தவா…?

காதலை வைத்து தமிழகத்தில் கல்லா கட்டியவர்கள் ஏராளம். காதலிக்க எளிதாக வாய்ப்பில்லாத நாட்டில் காதல் குறித்த கனவுகளும் அதை நனவு போல சித்தரிக்கும் படங்களும் விலைபோகாமல் இருக்குமா என்ன?

கருப்பு வெள்ளைப்படங்களில் காதலன் பட்டப்படிப்பு படித்துவிட்டு படியவாரிய தலையுடன் நாசுக்காக காதலிக்க, காதலியோ இரட்டைத்தலை சடையோடு தளையக்கட்டிய சேலையோடு வெட்கப்பட ….ஓவர் டு 2010

__________________________________________

பொறியில் படிப்பு, டீ ஷர்ட், பைக், சினிமா உதவி இயக்குநர், மாடர்ன் தங்கச்சி, அழகான அம்மாவுடன் சிம்பு காதலுக்கு 22 வயதில் ரெடியாகிறார். ஜெஸ்ஸி , டிசைனர் காட்டன் சேரி, சல்வார், அலைபாயும் முடி, ஐ.டி துறை வேலையுடன் 23 வயதில் த்ரிஷா வருகிறார்.

“காதல் என்பது தானா வரணும், நாம அதை தேடிப் போகக்கூடாது, நம்மள அடிச்சுப் போடணும்” என்று காதலுக்கு இலக்கணம் பேசும் சிம்புவுக்கு அது வந்துவிட்டது. மலையாளப் பெண், கிறித்தவ மதம், தந்தை மறுப்பு என்று த்ரிஷா அவ்வப்போது சிணுங்குகிறார். அதனால் காதலின் கிக் அல்லது அவஸ்தை ஏறுகிறது.

“காதலிக்காக அவனவன் அமெரிக்கா போறான், நாம ஆலப்பிக்கு போகக்கூடாதா” என்று அமெரிக்கா ஏதோ உசிலம்பட்டி போல பேசும் சிம்பு எதிர்பார்க்கமலேயே த்ரிஷா தேவாலயத்தில் பெற்றோர் நிச்சயித்த மாப்பிள்ளைக்கு ஒப்புதல் கொடுக்காமல் புரட்சி செய்கிறார். அவஸ்தையின் அளவு கூடுகிறது.

இதற்குள் மூன்று பாட்டு முடிகிறது. தாமரை எப்போது ஆங்கிலத்தில் பாடல் எழுத ஆரம்பித்தார்? இடைவெளி முடிந்து அமர்ந்தால் மீண்டும் மீண்டும் த்ரிஷா சிணுங்குகிறார். ” டேய் படத்தை எத்தனை வாட்டி ரிவைண்ட் பண்ணி போடுவ” என்று இரசிகர்கள் (தியேட்டர் கமெண்ட்) தாங்க முடியாத அளவில் அந்த அவஸ்தை சவ்வாக இழுக்கப்படுகிறது. நாங்க படம் பார்த்தது A சென்டரில்ல இல்லை!

ஒரு வேளையாக த்ரிஷா அந்த காதல் உலக்கத்திலிருந்து லூசுத்தனமாக (தியேட்டர் கமெண்ட்) மறைந்து போக சிம்பு சினிமா இயக்குநராக ஆகிறார். தனது ஜெஸ்ஸியின் கதையையே படமாக எடுக்கிறார். நிஜத்தில் த்ரிஷா வேறு ஒருவரை திருமணம் செய்ய…. படம் எப்போது முடியுமென்று பொறுமையிழந்த மக்களின் பொறுமலில் கடைசிக் காட்சிகளின் வசனங்கள் சுத்தமாக கேட்கவில்லை. சிம்புவின் படத்தில் அவர்கள் சேருவதுபோல எடுக்கப்பட்டு படம் முடிகிறது. விட்டால் போதுமென்று தியேட்டரிலிருந்து எஸ்கேப்!
----------------------------------
விடலைப்பருவத்தின் இறுதியில் வரும் முதல் காதல், உயிரியலின் தூண்டுதலே அன்றி அது சமூக உறவுகளில், வாழ்க்கையில் முதிர்ச்சியடைந்த காதலல்ல. முதல் காதலைப் பற்றி பேசவேண்டுமென்றால் அது அனுதாபத்துடன் கிண்டலடிக்கப்பட்டு புரியவைக்கப்பட்டிருக்க வேண்டும். வீட்டிலும், கல்லூரியிலும் தோன்றும் பொய்யான கலக உணர்ச்சிகளை சரியாக திசை மாற்றி தனது வாழ்க்கையின் ஆளுமையை கண்டு பிடிக்கும் வழியில் அந்த முதல் காதல் புன்னகையுடனும், சுய எள்ளலுடனும் உலர்ந்து உதிர்ந்துவிடும்.

குழந்தைகள், காதல் இரண்டும் மனித குலத்தை உடல்ரீதியாகவும், அதனால் இனரீதியாகவும் நேசிக்கவைக்கும் அடிப்படைத் தூண்டுகோல்கள். ஆனால் அவை இரண்டும் அதன் வெளியை சுயம், தனிமை, வீடு என்ற தளைகளிலிருந்து பரந்த சமூக வெளிக்கு நகர்த்தும் போக்கில்தான் புடம் போடப்படுகின்றது.

காதல் ஒரு மனிதனை அதீதமான பலத்துடன் வாழ்க்கையை விருப்பமாக அணுகுவதற்கு தயார் செய்கிறது. காதலின் உதவியால் மனிதன் தனது சுற்றத்தை முன்னர் பார்த்திராத வகையில் அன்புடன் அணுகுகிறான். அவனுக்கு இதுகாறும் சலித்துப்போயிருந்த வாழ்க்கைத் தடைகள் இப்போது தாண்டுவதற்கு எளிதான விசயங்களாக மாறுகின்றன. ஆனால் காதலின் இந்த மகத்துவ ஆயுள் மிகவும் குறுகியது என்பதைப் பலரும் புரிந்து கொள்வதில்லை.

ஒரு ஆணும், பெண்ணும் தமது காதல் உண்மையானதா, பொருத்தமானதா என்பதை தத்தமது சமூக நடவடிக்கைகளிலிருந்தே கண்டுபிடிக்க முடியும். அதை அமெரிக்க, கேரளா லோகேஷன்களோ, அலங்கார உடைகளோ, ரஹ்மானின் உணர்ச்சியைக் கிளறும் இசையிலோ கண்டு தெளிய முடியாது. சரியாகச் சொல்லப்போனால் தமிழ் சினிமா தற்போது உருவாக்கியிருக்கும் இந்த புதிய சினிமா மொழி அதற்கு தடையாகவும் இருக்கிறது. எனக்கு ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது என்பதை மட்டும் ஒரு பரவச உணர்ச்சியாக எண்ணி எண்ணி இன்பமடையலாம்தான். ஆனால் வாழ்க்கை கோரும் சிக்கல் நமக்கு உணர்த்தும் ஒரே ஒரு யதார்த்தம் கூட இந்த இன்பத்தை வேகமாக முடிவுக்கு கொண்டுவந்து விடும்.

____________________________________

தமிழ் படங்கள் காதலிக்க கற்றுக்கொடுப்பதில்லை, போராடி வெற்றபெற வேண்டிய காதலை அற்ப உணர்ச்சிகளின் நொறுக்குத்தீனி இரசனையாகத் அவமானப்படுத்தி, திருப்பித் திருப்பிக் காட்டுகிறது. அதனால்தான் காதலர்களது திருமண வாழ்க்கையின் இன்பம் ஒரு சில மாதங்களுக்குள் முடிவுக்கு வருகிறது. இப்படி பத்தாண்டுகளுக்கொரு முறை வரும் தலைமுறைகளிடம் சில காதல் படங்கள் வெற்றியடைகின்றன. ஆனால் சமூகத்தில் இன்னமும் காதல் வெற்றி பெறவில்லை.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் காதல் உணர்ச்சியில் நீங்கள் விழுந்திருப்பது உண்மையானால், மன்னியுங்கள்…….நீங்கள் காதலிப்பதற்கு தகுதியானவரல்ல.

நன்றி -வினவு

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv