உன்னால் முடியும் தம்பி’ யு.எம்.டி. ராஜா

என்னிடம் மறைந்து கிடக்கும் திறமை, இயற்கை உனக்கு மட்டுமே அளித்த வரப்பிரசாதம். அது என்ன என்பதை நீயே முயன்று வெளியே கொண்டு வரவேண்டும்” என்பார் வில்லியம் ஜேம்ஸ். யு.எம்.டி. ராஜா அப்படித்தான் தனக்குள் உள்ள திறமையை தானே முயன்று வெளியே கொண்டு வந்து இன்று 88 சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்ந்து வருகிறார்.
கோவை குனியமுத்தூரில் பிறந்து வளர்ந்த யு.எம்.டி. ராஜாவுக்கு ஆரம்பத்தில் நிறையவே சினிமா கனவு இருந்தது. சென்னைக்குச் சென்று சீரழிந்து, அவமானப்பட்டு கோவைக்கு கண்ணீரோடு திரும்பினார். சினிமா உலகம் தன்னை புறக்கணித்ததை எண்ணி எண்ணி வேதனைப்பட்டவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து தோட்டக் கிணறு ஒன்றில் குதித்து விட்டார்.
“விதி என்பதை யாராலும் வெல்ல முடியாது. நமக்கு மீறிய சக்தி ஒன்று நம்மை இயக்கத்தான் செய்கிறது”. ஆம் அந்த சக்தி அவரை அன்றைக்கு காப்பாற்றி விட்டது. “எப்படிச் செயல் பட்டால் குறிக்கோளை அடைய முடியும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி எந்த நேரமும் நினைத்துக் கொண்டிரு. கனவு காண். அந்தக் கனவே உன்னைத் தூண்டிக் கொண்டே இருக்கும்”. சிகிச்சை தந்த மருத்துவர் யு.எம்.டி. ராஜாவுக்கு நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்லி சினிமா நாயகன் என்ன நிஜ வாழ்க்கையில் நாயகனாக மாறு என்று ஊக்கம் தந்தார்.
இந்த மனித வாழ்க்கையில் மாற்றம் என்பது எங்கிருந்து எப்படி வேண்டுமானாலும் கிடைக்கப் பெறலாம். யு.எம்.டிக்கு நல்ல மருத்துவரால் மாற்றம் நிகழ்ந்தது. “உன்னால் முடியும் தம்பி. எழு, சாதிப்பாய் என்ற இலட்சியத்தோடு தனக்குள் உள்ள திறமையை வெளிப்படுத்த தயாரானார். யோகா, ஓவியம், சிற்பம், கவிதை, மேடைப்பேச்சு, நாடகம், குறும்படம், பலகுரல் என பல்கலை வல்லுநராக உயர்ந்தார். பாராட்டு, பரிசு, விருது என பல பெற்றார்.
எந்தக் கிணற்றில் இந்த வாழ்க்கையே வேண்டாம் என்ற விரக்தியில் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்தாரோ அதே கிணற்றில் எல்லோராலும் வியந்து பாராட்டும்படி பத்மாசன நிலையில் தண்ணீரில் தொடர்ந்து இரண்டு மணி நேரம் மிதந்து சாதனையைப் படைத்தார்.
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம், டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, கவிப் பேரரசு வைரமுத்து, திரு. எம்.எஸ். உதயமூர்த்தி, திரு. சாலமன் பாப்பையா இப்படி நிறைய பிரபலங்கள் இவரது தன்னம்பிக்கை விடா முயற்சியைப் பாராட்டி உற்சாகப் படுத்தினார்கள்.
“இன்றைய தினத்தைச் சவாலாக எடுத்துக்கொள்ளும்போது கஷ்டப்பட்ட நேற்றைய தினம் கனவாகிவிடும். நாளைய தினம் நனவாகிவிடும் என்பார்கள். நாளை இந்த யு.எம்.டி. பட்ட கஷ்டங்களை வளரும் சாதனை யாளர்கள் யாரும் பட்டுவிடக்கூடாது என்பதற் காக வருடம்தோறும் 25 சாதனையாளர்களை உருவாக்கி மகிழ்வேன் என்று தனது அடுத்த இலக்கை கோவையில் ஆரம்பித்து விட்டார்.
பவிழம் தங்க நகை மாளிகையில் வடிவமைப்பாளராக பணியாற்றி வரும் இவரின் நல்ல நோக்கத்திற்கு நிறையவே பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சாதிக்கத் துடிக்கும் மாணவ மாணவிகள், இளைஞர்கள் சுமார் 68 பேர் உன்னால் முடியும் தம்பி என்ற தன்னம்பிக்கை மந்திரத்தை யு.எம்.டி. என சுருக்கி தன் பெயருக்கு முன்னால் வைத்த வண்ணம் இணைந்திருக்கிறார்கள்.
யு.எம்.டி. உன்னால் முடியும் தம்பி இளைஞர் நல சங்கம் என்ற பெயரில் அமைப்பொன்றை உருவாக்கி எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு, சிகரெட் புகைத்தலால் வரும் தீமை; ஹெல்மெட் அணிவதால் உண்டாகும் நன்மை, சாலை பாதுகாப்பு என்று பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தி வருகிறார்.
சாதிக்கத் துடிப்பவர்களை சரியான பாதையில் அழைத்துச் சென்று வெற்றியாள ராக மாற்றத் துடிக்கும் யு.எம்.டி. ராஜாவைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள பாருங்கள் www.umtraja.com, umtraja@gmail.com
ஒன்றைச் செய்ய நினைத்து அது கைகூடி வராமல் போகும் போது வீழ்ந்து விட நினைக்காமல் கொஞ்சம் அதையே மாற்றி அமைத்து, செய்யும் செயலில் சாதனையைக் கொணர்ந்து வாழ்ந்து காட்டி நின்றால் ஒவ்வொருவருமே மாபெரும் சாதனை யாளர்கள்தான் வாழ்த்துக்கள்!

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv