உலகின் மிக உயரமான கட்டிடமான 828 மீ உயரத்தில் ஜொலிக்கும் ‘புர்ஜ் கலிஃபா’உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் துபாய் கோலாகல கொண்டாட்டங்களுடன் திறக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கட்டிடத்தை மன்னர் ஷேக் முகமது நேற்று திறந்து வைத்தார். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் டிவியிலும், இண்டர்நெட்டிலும் கண்டு வியந்து ரசித்த இந்த கட்டிடத்தின் உயரம் 828 மீட்டர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2716.5 அடி. மேலும் இக்கட்டிடம் இனி ‘புர்ஜ் கலிஃபா’ என்ற பெயரில் அழைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2003ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு இரவு விருந்தில் ‘எம்மார்’ தலைவர் முஹம்மது அல் அப்பாரிடம் கனடா நாட்டை சேர்ந்த குழுவினர் ஒரு திட்டம் குறித்த கோரிக்கையை முன்வைத்தனர். இதை மன்னர் ஷேக் முஹம்மதுவிடம் அல் அப்பார் சொன்னதும் உடனடியாக அனுமதி கிடைத்தது. இதைத்தொடர்ந்து சுமார் 200 ஹெக்டேர் பாலைவன நிலப்பரப்பில், வணிகக்கடல் மாநகர் உருவாக்கப்பட்டது. கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டத்தில் அடங்கியதே புர்ஜ் துபை. இந்த வணிகக்கடல் மாநகரின் நடுவில் அமைந்துள்ள புர்ஜ் துபையின் கட்டுமானப் பணிகள் செப்டம்பர் 21, 2004ல் ஆரம்பிக்கப்பட்டது. 43 மீட்டர் நீளம் கொண்ட 192 கான்கிரீட் தூண்கள் ஒவ்வொன்றின் மேல் தான் இந்த கட்டிடம் நிற்கிறது. அடித்தரை 12500 கனமீட்டர் கட்டிட தளத்துடன், 3 மீட்டர் தடிப்புடன் உள்ளது. கடலுக்கு அருகில் இருப்பதால் கான்கிரீட் இரும்புகள் துருப்பிடிக்காத வகையில் பிரத்தியேமாக அமைக்கப்பட்டுள்ளன. காற்று அழுத்தம், ஈர்ப்பு விசை மற்றும் பூமி அதிர்வு இவைகளை தாங்கக் கூடிய சக்தி கொண்டதாகவும், உலகின் ஆற்றல் மிக்க கட்டிட நிபுணர்களால் கவனத்துடன் கையாளப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் மொத்தம் 57 லிஃப்ட்களும், 8 எஸ்கலேட்டர் படிகளும் உள்ளன.இதில் இரண்டு லிஃப்ட்கள் இரண்டடுக்கு கொண்டவை. இவையிரண்டும் தரை தளத்திலிருந்து 124வது மாடி வரை மட்டுமே செல்லும். வண்ண விளக்குகளால் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ள லிஃப்ட்கள் 1 வினாடிக்கு 10 மீட்டர் உயரத்தை கடக்கும் ஆற்றல் கொண்டவை. மொத்தம் 169 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தின் ஒவ்வொரு நிலைகளிலும் குறைந்துகொண்டே செல்லும் என்பது மற்றொரு சிறப்பு. தரை தளத்தில் உள்ள வெப்ப நிலையை ஒப்பிடுகையில் உச்சி மாடியில் 10 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் குறைந்து குளிர் அதிகரிக்கும். மேலும், இதன் 76வது மாடியில் உலகிலேயே உயரமான நீச்சல் குளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு 158வது மாடியில் ஒரு மிக உயர்ந்த மசூதியும் உள்ளது. 900 ஸ்டுடியோக்கள், நூற்றுக்கணக்கான அப்பார்ட்மென்டுகள் மற்றும் இத்தாலிய ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட ஹோட்டல்களும் உள்ளன. தற்போது 59 பில்லியனுக்கு மேல் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் துபாய் வேர்ல்டின் கிளை நிறுவனமான எம்மார் பிராப்பர்டீஸ் தான் இதை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார நிலவரம் மோசமான நிலையில் இருந்தாலும், கட்டிட திறப்பு விழா திட்டமிட்டபடி கோலாகல கொண்டாட்டத்துடன் நடைபெற்றது. ஒளி, ஒலி, நீர் மற்றும் பட்டாசுகளின் மூலம் வர்ணஜாலங்கள் நடத்தப்பட்டு திறப்பு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது.
இந்த கட்டிட திறப்பால் துபாய் பொருளாதாரம் வளரும் என மிகவும் நம்பப்படுகிறது. கடந்த 4, 5 நாட்களாக இந்த கட்டிடத்தின் உரிமையாளர்களான எம்மார் நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் நன்கு உயர்ந்து வருகிறது.
படிப்படியாக உச்சத்தை எட்டிய சாதனை:
கின்னஸ் சாதனையில் இடம்பெற உள்ள புர்ஜ் துபாய்க்கு முன்பு வரை உலகின் உயரமான கட்டிடமாக கருதப்பட்டது தைவானில் உள்ள ‘தைப்பே 101′. தைப்பே நகரின் பொருளாதார மையக் கழகத்திற்கு சொந்தமான இந்த கட்டிடத்தில் 101 மாடிகள் உள்ளன. இதன் உயரம் ஆயிரத்து 671 அடியாகும்.
உலகின் உயரமான கட்டிடம் என்பது மட்டுமல்ல இந்த பூமியில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட எந்தவொரு வடிவமைப்புகளிலும் உச்சத்தில் இருப்பது ‘புர்ஜ் துபாய்’ தான்.
டிவி சிக்னல்களுக்காக அமெரிக்காவின் வடக்கு டகோடாவில் அமைக்கப்பட்ட ‘கேவிஎல்வி- டிவி’ டவர் 2,063 அடி உயரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த உயரத்தையும் ‘புர்ஜ் துபாய்’ மிஞ்சியுள்ளது.
பிப்ரவரி 2007ல் புர்ஜ் துபாய், சிகாகோவில் உள்ள சியர்ஸ் பில்டிங் எனப்படும் 110 அடுக்குமாடி கட்டிடத்தின் உயரத்தை தாண்டியது. ஜுலை 21, 2007ல் தைப்பே நகரின் பொருளாதார மைய கட்டிடத்தின் உயரத்தை தாண்டியது. ஆகஸ்ட் 12, 2007ல் சிகாகோவின் சியர்ஸ் டவர் ஆண்டெனாவின் உயரத்தை கடந்தது.
செப்டம்பர் 3, 2007ல் மாஸ்கோவில் உள்ள ஒஸ்டான்கினோ டவரின் 540 மீட்டர் உயரத்தைக் கடந்தது. செப்டம்பர் 12, 2007ல் கனடா, டோரண்டோவில் அமைந்துள்ள சின் டவரின் உயரமாகிய 555.3மீட்டரை கடந்து சாதனை புரிந்தது.
பின்னர் தற்போது, கேவிஎல்வி- டிவி’ டவரின் 628.8 மீட்டர் உயரத்தையும் தாண்டி, இன்று 800 மீட்டரையும் கடந்து உலகின் மிகப் பெரிய உயரமான கட்டிடமாக உச்சத்தில் மிளிர்கிறது புர்ஜ் துபாய்.
இதை விட பெரிய உயரமான கட்டிடம் பூமியில் உருவாக்கவேண்டுமானால் குறைந்தது இன்னும் 10 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது.
இந்தியர்களின் பங்களிப்பு:
உலக வரலாற்றுச்சிறப்பு மிக்க 169 அடுக்கு மாடிகளை கொண்ட, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த கட்டிடம் உருவானதில் இந்தியர்களின் உழைப்புக்கு மிக முக்கியப் பங்குண்டு.
கட்டுமான பணி, கொத்தனார், கம்பி கட்டுபவர், லிப்டு போடுபவர், ஏசி, எலக்ட்ரிக் வேலை போன்ற பல்வேறு தொழில்நுட்ப மற்றும் கூலி வேலையாக இருந்தாலும் அதில் பெரும்பான்மையோர் இந்தியர்களே.
உலகில் பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளில் இது மாதிரி கட்டிடம் கட்ட குறைந்தபட்சம் இதனைவிட 50 சதவீதம் அதிக செலவு ஆகும் என கூறப்படுகிறது. இவ்வளவு செலவு குறைவுக்கு முக்கிய காரணம் இந்திய தொழிலாளர்களே என பலரும் கூறுகின்றனர்.
100வது மாடியை வாங்கிய இந்தியர்?:
இந்த கட்டிடத்தின் 100வது மாடியை பெங்களூரை சேர்ந்தவரும், 1970களில் அபுதாபிக்கு வந்து இப்போது மிகப்பெரிய தொழில் அதிபராக திகழ்பவருமான பி.ஆர். ஷெட்டி வாங்கியுள்ளார்.
‘எவ்வளவு விலைக்கு யார் கேட்டாலும் இதனை விற்க மாட்டேன். என்னுடைய அலுவலக பணிக்காக வைத்துக் கொள்வேன். உலகின் மிகப்பெரிய உயரமான கட்டிடத்தின் 100வது மாடியில் என்னுடைய இடம் இருப்பது எனக்கு பெருமை’ என்கிறார் அவர்.
பார்வையாளர் மாடம்:
கட்டிடத்தின் 124வது தளத்தில் பார்வையாளர்களுக்கான பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு செல்வதற்கு டிக்கெட் இந்திய ரூபாயில் 2600 கட்டணமாக வசூலிக்கப்படும். இண்டர்நெட் மூலம் முன்பதிவு செய்து வந்து பார்த்தால் திர்ஹம் 100 (ரூ.1200).
இங்கிருந்து பார்த்தால் பாலைவனம், பாலைவனத்தில் உயரமான கட்டிடங்கள், சுற்றிலும் உருவாக்கப்பட்டுள்ள சோலைகள், கடல் இவைகளை பார்க்கலாம். திர்ஹம் 10 செலுத்தி டெலஸ்கோப் மூலம் எல்லாவற்றையும் மிக அருகாமையிலும் பார்த்து ரசிக்கலாம்.
சின்னச் சின்ன சலசலப்புகள்:
பல்வேறு சிறப்புகள் மற்றும் சாதனைகளை உள்ளடக்கிய இந்த கட்டிடத்தை கட்டி எழுப்புவதில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாகக் கூறுபவர்களும் உண்டு.
கட்டுமானப் பணிகளுக்கு அடிமைத் தொழிலாளிகள் பயன்படுத்தப்பட்டதாகவும், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து அழைத்துவரப்பட்ட தொழிலாளிகளை முழு நாளும் வேலைவாங்கிவிட்டு 5 டாலர் மட்டுமே கூலியாக கொடுத்ததாகவும் சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.
அதோடு, இவ்வளவு பெரிய கட்டிடத்திற்கு தேவையான மின்சாரத்துக்கு எங்கே போவது என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் புகார் கூறிவருகின்றனர்.
ஒருநாளைக்கு இந்த கட்டிடத்திற்கு தேவைப்படும் ‘ஏசி’ வசதி, 12 ஆயிரத்து 500 டன் ஐஸ் கட்டியை உருக்குவதற்கு சமம் எனக் கூறப்படுகிறது.
இதற்காக பல மில்லியன் கேலன் தண்ணீர் தேவைப்படும். இவையெல்லாம் கணக்கிட்டு பார்த்தால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் அச்சுறுத்தலை உண்டாக்குவதாக குறை கூறி வருகின்றனர்
0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv