மனிதர்களை செயற்கையாக உருவாக்கல்


என்ன? இன்னுமொரு நுண்ணுயிரி வில்லனைப் பற்றிய ஹாலிவுட் கதையா? எமக்கு வேண்டாம் ஐயா என்கிறீர்களா? இல்லை… இல்லை…. இது உண்மையான கார் ஷெட் பிரம்மாக்களைப் பற்றியதுதான். அதென்ன பிரம்மாக்கள் என்று பன்மை? பிரம்மா ஒருவர் தானே இருக்க முடியும் என்று எரிச்சல் வருகிறதா? நானென்ன செய்யட்டும், இஸ்டத்திற்கு ஆளாளுக்கு பிரம்மாக்களாக உருவெடுத்து விட்டார்களே.இந்த பிரம்மாக்களின் கூட்டம் அமேரிக்காவில் துவங்கி உலகெங்கும் பரவி விட்டது. எதற்கும் உங்கள் பக்கத்து வீட்டு பழக்கடையைப் கண்காணியுங்கள். இதுவரை அங்கு ஒரு பிரம்மா தென்படவில்லையென்றாலும் இனிமேலும் உற்பத்தி ஆகமாட்டார் என்று சொல்லி விட முடியாது.
இந்தப் பிரம்மாக்கள் ஈபே(Ebay) மற்றும் யூ டூப்(YouTube) வலையகங்களின் உபகாரம். நவீன உலகத்தின் முன்னோடியாக பிரகாசிக்கும் ஒரு அருமையான புற நகரம் பொஸ்டன். அங்கே கேய் அவ்ல் என்ற பெண்மணி 600 பவுண்டுகள் கொடுத்து ஈபே மூலமாக ஒரு உபகரணப் பெட்டி வாங்கினார். அப் பெட்டிக்குள் ஒரு சின்னஞ்சிறிய உயிரியை உருவாக்குவதற்குத் தேவையான எல்லா மூலப்பொருள்களும், உபகரணங்களும், செய்முறையும் அடக்கம். இதை நிறுவுவதற்குப் பெரிய ஆராய்ச்சி சாலையும் தேவைப்படவில்லை அவருக்கு. தன்னுடைய உறக்க அறையிலேயே அலமாரியில் தன்னுடைய படைப்பு ஆலையை நிறுவிவிட்டார். பிறகென்ன? நடத்தினார் பிரம்மா வேலையை.
ஸ்கை செய்திக்கு(Sky News) அவர் தந்த பேட்டியில், “ இது உண்மையில் மிக எளிய சாதாரணமான உயிர்வேதியியல். அச்சமூட்டும் பெருங் கருவிகளைக் கொண்ட ஆய்வகம் இதற்குத் தேவை இல்லை, கண்கட்டி வித்தைகளும் இல்லை, இது சுத்தமான வேதியியல். நீங்களே மிக எளிதாகச் செய்யலாம்.”
இந்த பிரம்மா உருவானதின் பின்னணி சற்று நெருடலான ஒன்று. அவருடைய தந்தைக்கு ஒரு புதுமையான நோய். ஹேமோகுரோமோடாசிஸ். ஈரல், கல்லீரல், தோல் மற்றும் பிற அவயங்கள் இரும்புத் தாதினை ஈர்த்து வைத்துக்கொள்ளச் செய்து நாளாவட்டத்தில் அவை செயலிழந்து போகும் படி செய்யும் நோய். இயற்கைத் தவறாக எழுதி விட்ட ஒரு மென் பொருள்தான் இதற்குக் காரணம். இம்மென்பொருளைத் தன்னகத்தே வைத்துள்ள ஒரு மரபணு அவருடைய குரோமோஸோமில் இருப்பதை அறிந்த அவ்ல் தனக்கும் அந்த மரபணு இருக்குமானால் தானும் பின்னொரு காலத்தில் அந்நோயிற்க்கு ஆளாக நேரிடுமென அஞ்சினார். உயிரியல் ஆய்வகத்துக்குச் சென்று தன்னுடைய உடலிலும் அந்த மரபணு உள்ளதா என ஆய்வு செய்து கொள்ள எண்ணிய அவருள் எழுந்தது மருத்துவக் காப்பீடு குறித்த சிந்தனை. இருக்கும் காப்பீட்டினை அதற்கு செலவு செய்துவிட்டால் பின்னர் அவசியமான தேவை வந்தால் என்ன செய்வது? சிந்தித்தார்!!! அவருள் பிறந்தார் ஒரு பிரம்மா!!! பிறகு நடந்ததை மேலே பார்த்தோம் அல்லவா? அவருடைய எதிர்காலத் திட்டம்: ”நான் ஒரு குறுக்கீடு(ஹாக்கர் Hacker) செய்பவர். நான் ஒன்றினை உருவாக்க விழைகிறேன்.உயிரியல் ஒரு மேதகு அமைப்பு. அதனை நான் முழுவதுமாகப் புரிந்து கொள்ள விரும்புகிறேன். என்னுடைய ஆய்வில் குறைந்த பட்சம் ஒரு C282Y வகை சிதைமரபணு என்னிடம் உள்ளது என்பதைக் கண்டுள்ளேன். ஆனால் மேலும் ஆய்வு தேவைப்படுகிறது. நான் தொடர்ந்து முயற்சிக்கப் போகிறேன். பிறகு என்னுடைய மருத்துவக் காப்பீடு புதுப்பிக்கப் பட்டவுடன் நான் தொழில் ரீதியாக செயல்படும் ஆய்வகத்திற்கு சென்று அதை உறுதிப் படுத்திக்கொள்வேன். இந்த நோய் ஆரம்பத்திலேயே கண்டு பிடிக்கப் பட்டால் குணமடையச் செய்வது சுலபம்.
என்ன? மேற்கொண்டு படிப்பதை நிறுத்தி விட்டு யு டியூப் வலையகத்திற்குச் செல்லாலாமென யோசிக்க ஆரம்பித்து விட்டீர்களா? எதற்கும் சட்புட்டென்று காரியத்தில் இறங்குங்கள்.
இந்த பிரம்மாக்களின் எண்ணிக்கை மிக அதிகமானதுடன் கல்விப் பின்புலம் இல்லாத அல்லது புலம் சார்ந்த கல்வி இல்லாதவர்களும் இணையதளத்தின் உபகாரத்தினால் உலகெங்கும் பிரம்மாக்களாக உதித்துவிட்டனர். இதனால் அரசுகள் இதை எவ்வாறு நெறிப்படுத்துவது என்று சிந்திக்கத்துவங்கி விட்டன. அச்சிந்தனைகள் சட்டங்களாக உருவெடுத்துவிட்டால் பின்னர் எளிதில் எவரும் பிரம்மா ஆகிவிட முடியாது.
ஆனால் ஒரு ஆறுதல். இந்த அமேய்ச்சூர் பிரம்மாக்கள் அரசுகளின் அச்சத்தைப் போக்க முனைந்து உள்ளனர். இவர்கள் டி.ஐ.ஒய். என்ற அமைப்பினை ஏற்படுத்தித் தங்களைத் தாங்களே கண்காணித்துக் கொள்கின்றனர்.
டி.ஐ.ஒய். அமைப்பின் நிறுவனர் மெக் கொவெல் ஸ்கை செய்திக்குத் தந்த நேர்முகத்தில்: “ஒரு காலத்தில் இருந்த, ஆராய்ச்சி யென்றாலே ஏதோ ஆபத்தான சமாச்சாரம் என்ற கலாச்சார எண்ணப்போக்கு இன்றும் மக்களிடையே காணப்படுகிறது என்பது போல் நான் உணர்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
“தானே இந்த வகை ஆய்வில் ஈடுபடும் ஒருவர் இதில் பயன்படும் ரசாயனங்கள் கழிவுகளாக வீசி எறியும் போது அவற்றுள் தொக்கி இருக்கும் மரபணுக்கள் வெளி உலகத்துக்குப் போய் எதிர்பாரத உயிரினமாக உறுவெடுக்கும் சாத்தியக்கூறு உள்ளதால் அக் கழிவுகளை ஊறு விளைவிக்கும் கழிவுகளாகக் கருதி மிக எச்சரிக்கையாகக் கையாள வேண்டும். இது மட்டுமே மிகமுக்கியம். குறிப்பாக அவற்றை சாக்கடையில் கொட்டிவிடக்கூடாது” என்று மேலும் கூறுகிறார் அவர்.
புதிதாகத் துவங்கியுள்ள ஜிங்க்கோ பையோ ஒர்க்ஸ் தன்னுடைய எதிர் காலத்துக்கு ‘மிகப் பாதுகாப்பான வீட்டு நுண்ணுயிரி தொழில் நுட்பத்தை’ நம்பி இருப்பதால் 140 பவுண்ட் விலை உள்ள ஒரு தரு பையை(kit) வெளியிட்டு உள்ளது. இந்தப் பையில் டி.என்.ஏ. எனப்படும் மூல அமினோ அமிலக் கட்டிகள் உள்ளன. இதை வாங்குபவர் எவ்வரிசையில் அக் கட்டிகளை இணைத்தால் உயிர் உண்டாகும் என்பதைக் குறிக்கும் செய்முறையும் இருக்கிறது. இந்தப் பையைப் பயன்படுத்தி ஏற்கனவே வழைப்பழ மணம் தரக்கூடிய நுண்ணுயிரிகளை உருவாக்கியுள்ளனர். இந்த நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஜேசன் கெல்லி கூறுகிறார்: “ வீட்டில் உயிர்ப் பொறியியல் சாத்தியம் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயம் இல்லை.”
அவர் மேலும் கூறுகையில், “மனிதர்கள் எல்லாக் காலங்களிலும் தோட்டங்களை அமைத்தும், நாய் போன்ற உயிர் இனங்களை வளர்த்தும் வந்துள்ளனர். இவ்வகை உருவாக்கத்தில் ஒரு கட்டாய ஈர்ப்பு அவர்களுக்கு எப்போதும் இருந்து வந்துள்ளது. இந்தப் பயணத்தின் அடுத்தக் கட்டத்தில் அவர்கள் இப்போது உள்ளனர். இந்த உற்சாகம் அவர்களைக் கட்டாயம் தொற்றிக் கொள்ளத்தான் போகிறது” என்றார்.
இதை எழுதி முடித்த பிறகு எனக்குள் ஒரு பிரம்மா. ஜப்பான் ஒரு துறையில் உலகத்திலேயே யாரும் எட்ட முடியாத நிலையில் உள்ளது எனக்கூறப் படுகிறது. அந்தத் துறை ரொபோர்ட் எனப்படும் மனிதனைப் போல செயல்படும் மனிதப் பொம்மைகளை உருவாக்குவது. ஏன் மனிதப் பொம்மைகளுக்கு உயிர் கொடுக்கக் கூடாது? அதாவது உலோகத்தில் செய்யாமல் டி.என்.ஏ யில் செய்யலாமே!
எப்போதும் இது மாதிரி ஏதாவது ஏடாகூடமாகச் சிந்தித்தால் நான் முன் எச்சரிக்கையாக என் மனைவியிடம் அலோசனை கேட்பது வழக்கம். அப்படி ஒரு மரபணு என்னுள். அவர் கூறினார். இயற்கை பலப்பல ஆண்டுகள் முயன்று முயன்று தன் தவறுகளைத் திருத்தித் திருத்தி பல உயிரினங்களை உருவாக்கியுள்ளது. நீங்கள் விரும்பவது போல ஒன்று வேண்டுமெனில் இயற்கையே உருவாக்கும். அதுவரைக்கும் பொறுமையாக இருங்களென கூறி விட்டு அவர் சென்று விட்டார்.
அதற்குப் பிறகு என்னுள் தற்காலிகமாக முகிழ்த்த பிரம்மா நீண்ட நேரம் முனகிக் கொண்டு இருந்தது என் காதில் கேட்டுக்கொண்டு இருந்தது.

நன்றி
1. டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஆகஸ்டு இரண்டு, 2009
2. http://www.nature.com/embor/journal/v10/n7/full/embor2009145.html

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv