தேவை லட்சியத் தலைவர்கள்! - டாக்டர் கலாம்
இராமநாதபுரம்மாவட்ட மக்கள் வரலாற்றில் எத்தனையோ இன்னல்களை கண்டிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடியிருக்கிறார்கள். இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மதங்களைச் சார்ந்த மக்களாக அவர்கள் இருந்தாலும் பொதுப் பிரச்னை என்று வரும்போது அவர்கள் அமைதியாக ஒன்றுபடுவார்கள்.


பலநூறு ஆண்டுகளாக இராமநாதபுரத்திலும் இராமேஸ்வரம் தீவிலும் அமைதியும் சகோ தரத்துவமும் நீடிப்பதற்கான ரகசியம் அதுதான்.


மனிதர்களைச் சமமாகக் கருதவும், சகோதரத்துவத்தை பேணுவதைப் பற்றியும் நம்முடைய அண்டை நாடுகள் இந்த மக்களிடமிருந்து பாடம் கற்கலாம்.இந்தியாவின் கடைக்கோடித் தீவான இராமேஸ்வரத்தில் தொடங்கும் இந்த வேறுபாடுகளைக் களைந்த ஒற்றுமை உணர்வு நம் தேசமெங்கும் கண்ணுக்குத் தெரியாத இழைகளாகப் பின்னிப் பிணைந்திருக்கிறது.


வளர்ந்து வரும் நாடுகள் சுபிட்சத்தையும் சமாதானத்தையும் காண வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி, பல்வேறு இனம், மொழி, மதங்கள், கலாச்சாரங்களைக் கொண்ட தன் மக்களைச் சமமாக நடத்துவதுதான். அவர்களுக்குத் தேவையான வேலை வாய்ப்பு, அடிப்படைத் தேவைகள், சமூக பாதுகாப்பு, மருத்துவ ஆரோக்கிய வசதிகள், சமச்சீர் கல்வி , மனித ஜனநாயக உரிமைகள் போன்றவற்றை சமமாகப் பிரித்து அளிப்பதன் மூலம் மட்டுமே நாடு மேன்மையை அடைய முடியும் என்று நான் தீர்மானமாக நம்புகிறேன்.


அந்த இலட்சிய கட்டத்தை ஒவ்வொரு நாடும் அடைய லட்சியத் தலைவர்கள் தேவை.

தங்கள் மக்கள் அனைவரையும் ஒன்றாகக் கரு தும் மேன்மையான கொள்கை கொண்டவராக அந்தத் தலைவர்கள் இருக்க வேண்டும்.


உலகிலும் நம் அண்டைநாடுகளிலும் நடந்து வரும் பல நிகழ்வுகளைக் காணும்போது மனித சமுதாயம் மிக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதை பெருமூச்சுடன் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு தனிமனிதனை விட நாடு முக்கியம், ஒரு நாட்டை விட உலக அமைதி முக்கியம். இந்த உலக அமைதியை எட்டுவதற்கு உலக நாடுகளின் தலைவர்கள், ஒரு கட்டத்துக்கு மேல் உயர வேண்டும். ஒருமித்த கருத்துணர்வை அவர்கள் எட்ட வேண்டும்.


ஒவ்வொரு முறை என் சொந்த ஊருக்குச் சென்று அம்மக்களைக் காணும் போதெல்லாம் இந்த உணர்வே எனக்கு ஏற்படுகிறது.அந்த விஷயத் தைப் பொறுத்தவரை, இராமநாதபுரத்து மக்கள் உலகுக்கே வழிகாட்டியாக இருக் கிறார்கள் என்பதை என் னால் உறுதியாகச் சொல்ல முடியும். சொந்த ஊர் என்கிற பாசத்துக்காக இதைச் சொல்லவில்லை.


இது வரலாற்றில் மறுக்க முடியாத உண்மையும் கூட. என்னால் மறக்கவே முடியாத, என்றைக் கும் என் நினைவுகளை பாதிக்கும் பயணம் கும்பகோணம் பயணம்தான். கொடுந்தீ விபத்து 96 பள்ளிக்குழந்தைகளை பலிகொண்ட அந்த கோரச் சம்பவத்தை அடுத்து, சம்பந்தப்பட்ட பெற்றோரைச் சந்திக்க நான் அங்கே சென்றிருந் தேன்.


மாவட்ட ஆட்சியாளர் திரு. ராதா கிருஷ்ணன் அந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். மனம் கனக்க அந்தத் துயர பூமிக்குப் பயணம் செய்தேன்.தங்களின் உயிருக்குயிரான பச்சிளம் குழந்தைகளை தீயின் செந்நாக்குகளுக்கு பலி கொடுத்த அந்தப் பெற்றோர்களின் துயரம் சொல்லில் விளங்காதது. அவர்களின் எதிரே நான் ஸ்தம்பித்துப் போய் அமர்ந்திருந்தேன். என்ன வார்த்தைகள் சொல்லி அவர்களைத் தேற்றுவது! என்ன கொடுத்தாலும் அவர்கள் இழந்ததுக்கு ஒப்பாகுமா?

அந்த மழலைச் செல்வங்கள் திரும்பி வரவா போகிறார்கள் போன்ற எண்ணங்கள் என்னை அலைக்கழித்தன. யாரும் ஏதும் பேச முடியாத சில நிமிடங் கள் மனசாட்சியை உலுக்கும் மௌனத்தில் கழிந் தன. அவர்களின் கண்ணீர் வழிந்தபடி இருந்தது.அவர்களைத் தேற்றும் பொருட்டு ஒவ் வொருவராகச் சந்தித்துப் பேச ஆரம்பித்தேன்.


அவர்கள் தங்கள் துயரை நடுங்கும் வார்த்தை களில் மெதுவாகக் கொட்ட ஆரம்பித்தார்கள். அவர்களிடம் கோபம் இருந்தது. வலி இருந்தது. ஆனாலும் ஒருமித்த குரலில் அவர்கள் சொன்ன ஒரு விஷயம் என்னை உலுக்கி எடுத்தது.


"எங்கள் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது..ஐயா, இதை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்..வேறு யாருக்கும் இந்தக் கொடுமை நடக்கக் கூடாது..'’’


-என்ன வார்த்தைகள் பார்த்தீர்களா? ஆழ்ந்த சோகத்திலும் வெறுப்புணர்ச்சியிலும் கூட அவர்களின் வார்த்தையில் வெளிப்பட்ட மனிதநேயமும் சகமனிதர்கள் மீது கொண்ட அக்கறையும் என்னை உணர்ச்சிப் பெருக்கில் கலங்க வைத்தன. இதுதானே நம் பாரம்பரிய நாகரீகத்தின் மேன்மையான பண்பு. தங்கள் சோகத்தையும் மீறி இது மற்றவர்களுக்கு நடந்து விடக்கூடாது என்று எண்ணுவது எத்தனை உயர்ந்த பண்பு. இதுவல்லவோ மனிதநேயம்!

இதுதானே சகமனிதன் மீது காட்டும் நிஜமான அன்பு!அந்த வார்த்தைகள் என் மனதில் ஆழமாகப் பதிந்தன. ஆம்! இதைப் போன்ற கொடுந்துயரம் வேறு யாருக்கும் நடந்து விடவே கூடாது. நடக்க விடக்கூடாது.


அரசாங்கத்துக்கு இதைப் போன்ற கொடுமை மறுபடி நடந்துவிடாதபடிக்கு நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்தேன். எத்தனையோ மேடைகளில் இதைப்பற்றிப் பேசி , விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டேன்.அப்போது என் மனதில் தோன்றிய எண்ணம் இதுதான். அதன் விளைவாக என் ஆழ் மனதில் தோன்றிய கவிதையை தீவிபத்தில் இறந்த அந்த குழந்தைகளின் நினைவாக சமர்ப்பித்தேன்.ஓ இளம் தளிர்களே, அன்புக்குரிய இளம் தளிர்களே!

உங்களின் பெற்றோர்கள்

பெருமைக்குரிய கனவுகளை உங்களுக்காக வைத்திருந்தார்கள்!

உங்களின் சொந்தக் கனவுகளும்

உங்களுக்குள்ளே அமிழ்ந்திருந்தன!

ஆனால் அக்னி உங்களையும்

அந்தக் கனவுகளையும் அழித்தது..

கடவுளின் தெய்வீகமான இடத்துக்கு உங்களை அழைத்துச் சென்றது!எப்போதும் மறைந்து போன

பெற்றோர்களைப் பிள்ளைகள் புதைப்பார்கள்!

ஆனால் கும்பகோணம் அந்தக் கொடுங் காட்சியைக் கண்டது..

அழும் பெற்றோர்கள் தங்கள் துளிர்களைப்

புதைக்கும் காட்சி

அது..ஓ கடவுளே..

அந்தச் சின்னஞ்சிறு தளிர்களிடம் கருணை காட்டுங்கள்..

உங்கள் அன்புக்குரிய புனித இடத்தில்

அவர்களை வைத்திருங்கள்..சோகத்தில் ஆழ்ந்திருக்கும் பெற்றோர்களுக்கு ஆறுதலைக் கொடுங்கள்..


இந்த வெறுமையிலிருந்து விடுபட மனபலத்தைக் கொடுங்கள்..உங்கள் கனிவும் கருணையும் எல்லா உயிர்களையும் காப்பாற்றட்டும்..வலிகள் மறந்து அவர்கள் கண்ணீர் துடைக்கப்படட்டும்..ஓ கடவுளே அந்தச் சின்னஞ்சிறு தளிர்களிடம் கருணை காட்டுங்கள்!

இதைப்போன்ற எத்தனை யோ பேரழிவுகளுக்கான தீர்வு களை நாம், எண்ணற்ற உயிர் களைத் தியாகம் செய்துதானே இனம் காண்கிறோம்.


இதைப் போன்ற பிரச்னைகளை வரும்முன் காப்பதற்கான தீர்க்க தரிசனத் தையும், செயல்படும் துணிவையும் நம்முடைய தலைவர்களுக்கும், அதை செயல்படுத்தும் அதிகாரி களுக்கும் தருமாறு கடவுளை நான் அப்போது வேண்டிக்கொண் டேன்.இதைப்போலவே மற்றொரு பேரழிவு நிகழ்வும் என்னை உலுக்கி எடுத்தது.


அதுவும் பல் வேறு உயிர்களை விழுங்கிய பயங்கர நிகழ்வுதான். 2004-ம் வருடம், டிசம்பர் மாதம் 24-ம் தேதி காலை.


நான் ராஷ்டிரபதி பவனில் உள்ள மொகல் தோட்டத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தேன்.என்னுடைய உதவியாளர் பொன்ராஜ் ஓடி வந்தார்.தொலைபேசியில் வந்த தகவலை தெரிவித்தார். ""ஐயா, தமிழ்நாட்டில் கடல் பொங்கி விட்டதாம்.. எழுந்து வந்த ராட்சத அலைகள் எண்ணற்ற உயிர்களை பலிகொண்டுவிட்டதாம்.


சென்னை, பாண்டி, கடலூர், நாகப்பட்டினம் உள்பட பல இடங்களில் கடல்அலை பிரமாண்டமாக எழுந்து வந்து பல உயிர்களை காவு வாங்கிவிட்டதாகச் செய்தி..''நான் அதிர்ந்து போனேன். இதைப்போன்ற ஒரு இயற்கைச் சீற்றத்தை தமிழ்நாடு கண்டதே இல்லை. தனுஷ்கோடிப் புயல் என் நினைவில் இருந்தாலும், புயல், மழை, சூறாவளி போன்ற எதுவுமே இல்லாத ஒரு சூழலில் திடீரென்று கடல் அலைகள் ஆழிப்பேரலை யாக மாறி இத்தனை கொடூர ஆட்டம் போடுமா என்று மலைப்பாக இருந்தது. இது என்ன? இந்தப் பேரழிவுக்கு என்ன பெயர்?


சுனாமி!உலகையே உலுக்கிய பேரழிவு!
அதன் நீங் காத கொடும் நினைவுகள்!

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv