இருபது வருடங்களில் சிறீலங்காவின் மூன்றில் ஒரு பங்கு கடலில் போய்விடும் ! புதிய நூல்.


2023 ல் பங்களாதேஸ் என்ற நாடே இருக்காது !மியாமி கடற்கரையை காணமுடியாது ! கலிபோர்ணியா பாலைவனமாகிவிடும் !வெள்ளை மாளிகையில் வெள்ளம் புகுந்திருக்கும் !
உலகத்தில் உள்ள பல நாடுகள் பூமிப்பந்தில் இல்லாமலே போய்விடும் என்ற உண்மையையும், தூரப்பார்வையையும் உணராது பல நாடுகளில் ஆளையாள் வெறுக்கும் மடைத்தனமான போர்கள் நடைபெறுகின்றன. ஆனால் மாறிவரும் காலநிலை மாற்றமும், வெப்பமடையும் புவியும் மேலும் 20 வருடங்களில் பல நாடுகளை இருந்த இடம் தெரியாமலே சாப்பிட்டுவிடப்போகிறது. பங்களாதேஸ் என்ற நாடே இருக்காது. சிறீலங்காவின் மூன்றில் ஒரு பங்கு கடலில் போய் சிறிய மலைப்பகுதியே மீதமாக இருக்கும் என்று கூறும் புதிய ஆங்கில நாவல் வெளியாகியுள்ளது.
மத்தியூ கிலாஸ் எழுதியுள்ள ஊல்ரிமேற்றம் என்ற இந்த காலநிலையை விளக்கும் நாவல் எதிர்வரும் உலகில் நடைபெறப்போகும் நிகழ்வுகளை திரில்லராக விளக்கிச் செல்கிறது. ஆனால் உண்மையாக நடக்கவுள்ள ஆபத்துக்களை எதிர்வு கூறும் நாவலாக 433 பக்கங்களில் உள்ளத்தை உறைய வைக்கும் தகவல்களுடன் வெளியாகியுள்ளது. டென்மார்க்கில் இதன் விலை 100 குறோணர், மற்றய நாடுகளில் 23 டாலர்களுக்கு விற்பனையாகிறது. அமெரிக்காவின் அதி உயர் ஆட்சிப்பீடமான வெள்ளை மாளிகையே கடலில் கிடப்பதுபோல இதன் அட்டைப்படம் தயாராகியுள்ளது.
சம்பவம் நடைபெறும் 2032 ம் ஆண்டில் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்படுகிறார் ஜோய் பென்ரன் என்பவர். இவர் புவி வெப்பம் காரணமாக நெருங்கி நெருங்கி வரும் பேராபத்தில் இருந்து அமெரிக்க மக்களை காப்பாற்ற வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறார். அமெரிக்காவின் கட்டமைவையே அடியோடு மாற்றியமைக்க வேண்டிய நிலையில் இவர் பதவி ஊசலாடுகிறது. நாட்டின் கல்வி, மருத்துவம் உட்பட எல்லாவற்றையுமே மாற்ற வேண்டிய நிலையில் இவர் பதவிக்கு வருகிறார். உலகத்தின் பலங்கள், அணு குண்டுகள் யாவும் பயனற்ற சுண்டங்காய்களாக போன நிலையில் இவருடை பதவியே பெரும் இயற்கைச் சவாலை எதிர் கொள்ளுகிறது. பொய்யான பயங்கரவாத போரை நடாத்திய உலகின் மீது சீற்றம் கொண்டு இயற்கையே பயங்கரவாதமாக மாறுகிறது.
அதில் ஒன்றாக வெப்பமடையும் உலகில் மிகப்பெரிய ஆபத்தாக வெப்பமான காற்று மாறுகிறது.

வெப்பக்காற்றால் பனிப்பாளங்கள் உருகுவது ஒரு புறம் மறு புறம், பெரும் வரட்சியால் நீரின்றி மக்கள் மடிய நேரிடுகிறது. சுனாமி போன்ற பேரனர்த்தங்களால் பல நாடுகளில் இருந்து வந்த குடியேறியோர் தொகை நிரம்பி வழிகிறது. அமெரிக்காவிலேயே 25 - 30 மில்லியன் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி புலம் பெயர நேரிடுகிறது. மியாமி கடற்கரை இல்லாமல் போகிறது. கலிபோர்ணியா பாலைவனமாக மாறிவிடுகிறது, நியூயோர்க்கும் அதே அவலத்தில். இந்த அபாய நிலையில் அமெரிக்க அதிபர் ஓர் அவசர இரகசிய கூட்டத்தைக் கூட்டுகிறார். அங்கு பங்களாதேஸ் இல்லாமல் போகும் இரகசியம், சிறீலங்காவில் மூன்றில் ஒரு பங்கு கடலில் போய்விட்ட நிலை வந்துவிட்டது, அது தொடர்கிறது. இதுபோல மேலும் வந்து கொண்டிருக்கும் அபாயங்கள் எல்லாம் கவலையுடன் பேசப்படுகிறது. அந்த நிலையிலும் புவி வெப்பமடைவதை கட்டுப்படுத்த உதவ சீனா அடியோடு மறுக்கிறது. அரசியல் வழிகளில் முடியாதபோது காபநீரொக்சைட் வெளிவருவதைத் தடுப்பதற்காக ஆயுதப்போரே ஆரம்பிக்கிறது.


வரும் டிசம்பர் மாதம் டென்மார்க் தலைநகரில் நடைபெறவுள்ள உலகத் தலைவர்கள் பங்கேற்கும் புவி வெப்பமடைவதைத் தடுக்கும் காலநிலை மாநாடு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஆங்கிலேயே எழுத்தாளர் மத்தியூ கிலாஸ் எழுதியுள்ள மேற்கண்ட நாவல் ஒரு புனை கதை மட்டுமல்ல பல உண்மைகளை உலகிற்கு உணர்த்தும் ஆவணம் என்பதால் இப்போது பரபப்பாக விற்பனையாகிறது.
சிறீலங்காவில் தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள் வாழும் கரையோரப் பகுதிகள் இந்தத் தாக்கத்தை சந்திக்கும் என்பதை முன்னர் சுனாமி மூலம் உணரக் கூடியதாக இருந்தது. இருப்பினும் அவர்கள் எதிர்காலத்தை அடியோடு உணரவில்லை என்பது முடிந்த கதை.


இதேவேளை தமிழரின் நிலங்களில் சிங்களவரை குடியேற்றுவோர் சிறிது சிந்திக்க வேண்டிய விடயம் இதுவாகும். அதுபோல தமிழ் மக்களும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு நடாத்தும் போது இப்படியொரு விடயம் இருப்பதையும் சேர்த்து தமது எண்ணங்களை ஓட விடவேண்டும்.

கடலோடு போகப்போகும் ஆபத்துள்ள நிலப்பரப்பிற்காக தமிழரும் சிங்களவரும் சண்டைபோட வெப்பக்காற்று என்ன செய்யும் என்பதை பிரிட்டன் எழுத்தாளர் விளக்க முன்வந்து, தனது கதையில் சிறீலங்காவையும் சேர்த்தது பலருடைய அறிவுக்கண்களை திறக்க உதவியாக அமையும். யார் படிக்காவிட்டாலும் சிறீலங்காவின் எதிர்காலத்தைப்பற்றி பேசுவோர் வாசிக்க வேண்டிய நூலாகும்.
கண்ணீர் துளிவடிவில் கடல் நடுவே நிலம் கிடக்கும் என்ன இதன் பெயரென்றால் இலங்கை என்று சொல்கிறார்கள் !


பாரழுத கண்ணீர் பனிக்கடலாய் கிடக்க

இது யாரழுத கண்ணீர் அலை நடுவே மிதக்க !
என்பது பழைய பாடல்.


இலங்கை என்ற கண்ணீர் துளி வடிவும் கூட காலநிலை மாற்றத்தால் கரைந்து கட்டெறும்பாக மாறப்போகிறது என்பதே இந்த நூல் தரும் கருத்தாகும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv