நேரத்தை நிர்வகியுங்கள் (Time Management)மேசை முழுக்க கோப்புகள் குவிந்திருக்கின்றனவா? நேரம் போதவில்லை என்று தலையைப் பிய்த்துக்கொள்கிறீர்களா?
இல்லத்தரசி முதல் பிரதம மந்திரி வரை அனைவருக்கும் ஒரே 24 மணி நேரம்தான். ஆனாலும், சிலர் எத்தனையோ சாதனை புரிகின்றனர்.
சிலரோ சின்ன விஷயத்திற்கே நேரமில்லை என்று மூக்கால் அழுகின்றனர்.ஏன்?
நேரத்தை சரிவர நிர்வகிக்காததே இதற்குக் காரணம்.இந்த அவசர யுகத்தில் நேர நிர்வாகம் (Time Management) என்பது மிகவும் இன்றியமையாதது.அதைப்பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்வோமா?
நேர நிர்வாகம் குறித்த சில தவறான கருத்துகள் (Myth) நம்மிடம் நிலவுகின்றன.
1. நேரத்தை சேமிக்க முடியாது.
2. நேர நிர்வாகம் என்பது, பொழுதுபோக்குக்கு இடம் தராது.
3. நேர நிர்வாகம் பெரும் பதவியிலிருப்பவர்களுக்கே தேவையானது.
ஆம். இம்மூன்றுமே தவறான கருத்துக்கள்தான்.
1. நேரத்தை சேமிக்க முடியும்.
மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவர் ஒரு வருடம் கழித்து, தான் வாங்க நினைக்கும் ஒரு பொருளுக்காக மாதம் 500 ரூபாயைத்தனியாக எடுத்து வைக்கிறார் என்று கொள்வோம். அது சேமிப்புதானே. அதுபோல அடுத்த வருடம் வரப்போகும் போட்டித்தேர்வுக்காக, இப்போது முதலே, தினம் சிறிது நேரத்தை, ஒதுக்கி ( நேரத்தை முதலீடு செய்து ) படிப்பவனே வெற்றி பெறுகிறான். இது மாணவர்களுக்கு மட்டுமில்லை. அனைவருக்கும் பொருந்தும். வரப்போகும் கணக்காய்வுக்கான(Audit) அறிக்கைகளை, முன்கூட்டியே தயாரிக்கத்தொடங்கும் மேலாளர் முதல், நாளை சமையலுக்கான காய்கறிகளை இன்றே நறுக்கி வைக்கும் இல்லத்தரசி வரை, எத்தனையோ பேர், சரியான நேர நிர்வாகத்தின் மூலம் இறுக்கத்தையும், மன அழுத்தத்தையும் தவிர்க்கின்றனர்.இன்றைய பணத்தை நாளைய தேவைக்காக சேமிப்பது போல, நாளை செய்யவேண்டியவற்றை இன்று செய்யத்தொடங்குவதன்மூலம் நேரத்தை நன்முறையில் சேமிக்கவும், மிச்சமாகும் நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்கவும் இயலும்.
2. மகிழ்வுடன் பொழுதுபோக்கவும் நேர நிர்வாகம் அவசியமே.
பணத்திற்கான வரவுசெலவுத்திட்டம் போல, நேரத்திற்கும் வரவு செலவுத்திட்டம் (budget) தயாரிக்க முடியும். என்ன?
பணவரவு மனிதருக்கு மனிதர் மாறுபடலாம். ஆனால், நேர வரவோ, ஆண்டிக்கும், அரசனுக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான். இதை எப்படிப் பயன்படுத்துவது என்று சீராகத்திட்டமிடுதல் மிக முக்கியம்.உங்களின் நேரத்தை மூன்று பங்காகப் பிரியுங்கள்.
அ. இன்றையதினத்திற்கான அத்தியாவசியச் செலவுகள்- உணவுண்ணும் நேரம், உறங்கும் நேரம், வேலை செய்யும் நேரம் முதலியன.
ஆ. சேமிப்பு/முதலீடு- புதியதாக ஏதேனும் கற்றுக்கொள்ளுதல், நாளைய சில வேலைகளை இன்றே செய்தல், உடற்பயிற்சி முதலியன.
இ. பொழுதுபோக்கிற்கான திட்டமிடல்- குடும்பத்தினருடன் செலவு செய்யவும் ஓய்வெடுக்கவும் கேளிக்கைகளில் ஈடுபடவுமான நேரம்.
நாளின் பெரும்பகுதியான நேரத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும் முதல்பகுதியை, மறு ஆய்வு (review) செய்வதின்மூலம், இரண்டாம் மற்றும் மூன்றாம் பகுதிக்கு நேரத்தை ஒதுக்க இயலும்.ஒரு கல்லில் இரண்டு மாங்காய் :ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளைச் செய்வதின் மூலம், நேரத்தை மிகத்திறம்படக் கையாளலாம்.எடுத்துக்காட்டாக, பூங்காவில் குழந்தைகளுடன்
ஓடி விளையாடுவது, உடற்பயிற்சியுடன் கேளிக்கையும் ஆகிறது. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே துணிகளை இஸ்திரி செய்தல் அல்லது காய்கறி நறுக்குதல், பயணத்தின் போது புத்தகம் படித்தல் அல்லது தொடர்பு கொள்ள வேண்டியவர்களுடன் கைபேசியில் பேசுதல் என்று எத்தனையோ.
3. நேர நிர்வாகம் அனைவருக்கும் தேவை.
பள்ளி செல்லும் சிறுவர் முதல், ஒரு நாட்டின் தலைவர் வரை, அனைவருக்குமே, அவரவர் பணிக்கேற்ப, தேவைக்கேற்ப நேர நிர்வாகம் அவசியமே. அன்றாடம் பாடங்களைப் படிக்காமல் இருந்துவிட்டு தேர்வு நேரத்தில் இரவு பகல் விழித்திருந்து படிக்கும் மாணவன், மிகுந்த மனச்சோர்வுக்கு (stress) ஆளாகிறான். பெரிய பதவியில் இருப்பவர்கள், தமது பணியை சரியான நேரத்தில் சரிவரச் செய்ய இயலாமல் நேரமில்லை என்று கலங்குகின்றனர்.
"ஆகாறு அளவிட்டிதாயினும்
கேடில்லைபோகாறு அகலாக்கடை"
என்று சிக்கனம் பற்றி திருவள்ளுவர் கூறுவது நேர நிர்வாகத்திற்கும் பொருத்தமானதுதான் அல்லவா?
நன்முறையில் நேரத்தை நிர்வகிக்க 10 வழிகள்.
1. நீங்கள் செய்துகொண்டிருக்கும் பணி உண்மையிலேயே முக்கியமானதுதானா என்பதை அவ்வப்போது சரி பாருங்கள்.
2. எந்த விஷயத்தில் நேர விரயம் ஏற்படுகிறது என்பதைக்கவனித்து, விழிப்புடன் இருந்து அதைத் தவிர்த்து விடுங்கள்.
3. செய்ய வேண்டிய செயல்களைப் பட்டியலிட்டு, அவற்றின் முக்கியத்துவத்திற்கேற்ப நேரம் ஒதுக்குங்கள். மிகவும் அவசியமானதை முதலில் முடியுங்கள் (Prioritize).
4. பிறரிடம் ஒப்படைக்க முடிந்த சில்லறை வேலைகளை, அடுத்தவர்களிடம் ஒப்படைப்பதன் மூலம், உங்கள் நேரம் சேமிக்கப்படும் (Delegation)
5. காத்திருக்க வேண்டிய நேரங்களில், புத்தகம் படிப்பதன் மூலமும், மடிக்கணிணியை உபயோகிப்பதன் மூலமும், பயனுள்ளதாக்குங்கள் (Optimum utilization).
6. பெரிய வேலைகளுக்கான இடைவெளிகளில் (gap) சிறிய வேலைகளைச் செய்துமுடிக்கலாம்.
7. தெளிவான திட்டமிடல் வாயிலாக நேரவிரயத்தைத் தவிர்க்கவும்.
8. எந்த வேலையையும் விரைவில் தொடங்குங்கள்; தள்ளிப்போடாதீர்கள்.
9. பொருட்களை எடுத்த இடத்தில் வைக்கப் பழகுங்கள். பல சமயம், வேலை செய்யும் நேரத்தை விட அதற்கான கருவிகளைத் தேடத்தான் அதிக நேரம் வீணாகிறது( Everything has a place and a place for everything).
10. உடற்பயிற்சிக்கும், தியானத்திற்கும் கண்டிப்பாக நேரம் ஒதுக்குங்கள். அது, மரத்தை வெட்டுமுன் கோடரியை நன்கு தீட்டுவது போல. உங்கள் பணியைத் திறம்படவும், விரைவாகவும் செய்ய உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை (A sound mind lies in a sound body).இவற்றைப் பின்பற்றுங்கள்.
இனி, உங்களுக்கு ஒரு நாளைக்கு 25 மணி நேரம்!!!கொண்டாடுங்கள் மகிழ்வுடன்.
கி.பாலகார்த்திகா.

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv