புலம் பெயர் நாடுகளில் மக்கள் வரவு குறையும் ஆலயங்கள் !வெறிச்சோடிக் கிடக்கும் வெளிநாட்டு திரையரங்குகள் !
பூப்புனித நீராட்டுவிழாவிற்கும் பகிஷ்கரிப்பு எஸ்.எம்.எஸ் அனுப்பும் சன்னதம் !
கற்ற கலையை வெளிப்படுத்த இயலாது காற்றில் எறிக்கும் நிலாக்களாக புலம் பெயர் சிறார்கள் !

புலம் பெயர்ந்து தமிழர் வாழும் நாடுகளில் அதிக எதிர் பார்ப்புடன் கட்டப்பட்ட பல ஆலயங்களில் பக்தர்களின் வரவு குறைவாக இருப்பதாக கவலை தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு நகரங்களிலும் ஏட்டிக்குப் போட்டியாக ஆலயங்களை திறந்துவந்த தமிழர்கள் இப்போது திருவிழாக்களை நடாத்தும் காலமாகும். மக்கள் வரவுக்குறைவினால் பல ஆலயங்களில் திருவிழாக்கள் பின்போடப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.

வன்னியில் ஏற்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, பெருந்தொகையான மக்கள் ஆர்பாட்ட ஊர்வலங்களில் பங்கேற்றனர். அத்தோடு சகல கலகலப்பான நிகழ்வுகளிலும் மக்கள் கூடுவது வீழ்ச்சியடைந்துள்ளது. இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் நடைபெறும் பெரிய விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் எல்லாம் அப்படியே பின்போடப்பட்டுள்ளன.

எதை ஆரம்பித்தாலும் நாட்டில் நிலமை மோசமாக இருக்க இது அவசியமா என்று பலர் கேட்பதாகவும், எதிர்ப்புக்களை தெரிவித்து எஸ்.எம்.எஸ்சில் சுழல் செய்திகள் அனுப்புவதாகவும் பலர் கூறுகிறார்கள்.

ஆலயங்களைப் போலவே வெளிநாடுகளில் உள்ள திரையரங்குகளும் வெறிச்சோடிக் கிடக்கின்றன. பல இந்தியத் தமிழ் திரைப்படங்கள் காண்பிக்கப்படும் திரையரங்குகளில் ஒருவரும், இருவருமாக ஜனக்கூட்டம் இல்லாமல் காட்சிகள் நடைபெறுகின்றன.

நாட்டுப் பிரச்சனை மட்டுமல்ல, பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள அடி, பொது நிகழ்வுகளுக்கு மக்களை வரவழைப்பதில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளது. புலம் பெயர் நாடுகளில் மட்டுமல்ல இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும் கூட திரையரங்கங்களில் படம் பார்ப்போர் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் ஸ்கன்டிநேவியன் நாடொன்றில் நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழாவிற்கு மதிய சமையலை ஒரு சிலர் பொறுப்பேற்றிருந்தனர், இரவுச் சாப்பாட்டை இன்னொரு பிரிவு செய்து பணம் ஈட்டியது. அவர்கள் நாட்டுக்காக செய்ய, மூன்றாவது பிரிவு கேபமடைந்து நாட்டுப் பிரச்சனை நடக்கும்போது பூப்புனித நீராட்டு அவசியமா என்று எஸ்.எம்.எஸ் குறுஞ்செய்தி அனுப்பி பகிஷ்கரிக்கும்படி கேட்டுக்கொண்டது. பூப்புனித நீராட்டுவிழாவிற்கே இந்தக்கதி என்றால் மற்றவைகளைப்பற்றி பேசவா வேண்டுமென கூறினார் அந்த விழாவை நடத்தியவர்.

இந்த அவலம் புலம் பெயர் வாழ்வின் அவலத்தின் கோலமாக மாறக்கூடிய எச்சரிக்கை விளக்காக இருக்கிறது. நகைக்கடைகள், பிடவைக்கடைகள் போன்றவற்றின் வர்த்தகங்கள் பாதிக்கப்படும். அத்தோடு தமிழர் சமுதாயத்தில் கலாச்சாரத்தின் அடையாளத்தை காப்பாற்றவென்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளை நிறுத்துவது சமுதாய ரீதியாக ஆபத்தான காரியமே.

சங்கீதம், நடனம், கலை நிகழ்வுகள் என்று தமது திறமைகளை வெளிக்காட்ட முடியாமலே பிள்ளைகள் இவைகளை கற்றும், அவை பயனற்றுப் போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியாக ஒன்றன்மேல் ஒன்றாக ஏற்படும் தாக்கங்களால் தமிழர் கலாச்சார வாழ்வை தொடர முடியாத நிலை ஏற்படும். இப்போது விஷயம் தெரிந்த சில எழுத்தாளர்கள் தமது நூல்களை இந்தியாவில் வெளியிட முற்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.

இந்த நிலை தொடருமானால் இளையோர் முற்றாக மேலைத்தேய கலாச்சார வாழ்வில் குதிக்கவும், பெரியோர் தொலைக்காட்சி தொடர் நாடகங்களில் மூழ்கிவிடவும் கூடிய நிலை தென்படுகிறது.

புலம் பெயர் தமிழ் மக்கள் மூளையை பயன்படுத்த வேண்டிய காலம் இதுவாகும்.

கற்ற கலைகளை வெளிப்படுத்த இயலாது காட்டில் எறித்த நிலாக்களாக புலம் பெயர் மாணவர்கள் !
அன்றைய மொட்டைக்கடிதம் இன்று அநாமதேய எஸ்.எம்.எஸ் குறுஞ்செய்தியானது !
வெளிநாடுகளில் ஆலயங்கள் நூதனசாலைகளாக மாறக்கூடிய அபாயம் இருக்கிறது !
நாட்டுப்பிரச்சனை என்று எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு, நாட்டுக்கு என்ன செய்வதென்றும் தெரியாமல் அதையும் நிறுத்திவிட்டு இரண்டுங்கெட்டான் நிலையில் நிற்கிறோம்!

- இவை பலரிடம் திரட்டிய தகவல்கள்.
அடுத்து என்ன…

சிவகெங்கை ஆடியபாதம்.
நன்றி- அலைகள்

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv