தமிழிலக்கியம்

இன்று உலகத்தில் வாழும் மொழிகளில் மிகவும் பழமையானது தமிழ் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஒரு மொழி செம்மொழி என்ற தகுதி பெற பழமை, கட்டமைப்புடைய இலக்கணம் என்ற அஸ்திவாரம், பண்பட்ட இலக்கியங்கள் என்ற மாளிகை ஆகிய அனைத்தும் தேவை.இவை எல்லாவற்றிலும் சிறந்து விளங்கும் மொழி, நம் தமிழ் மொழி. தமிழ் இலக்கியத்தின் காலத்தை வரையறுக்க இயலாது என்றாலும், ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.தமிழ் இலக்கியத்தை, சங்ககால இலக்கியங்கள், சங்கம் மருவிய கால இலக்கியங்கள் மற்றும் தற்கால (பிற்கால) இலக்கியங்கள் என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். பழந்தமிழகம், மூவேந்தர்களாகிய சேர, சோழ பாண்டியரின் ஆட்சியில் பசியும் பிணியும் இன்றிச் செழித்திருந்தபோது, சங்க இலக்கியங்கள் தோன்றின. அதிலும், பாண்டியர்கள் முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம்
என்று மூன்று சங்கங்களை ஏற்படுத்தி, தமிழ் வளர்த்தனர். பின், தமிழ் மன்னரல்லாத களப்பிரர், பல்லவர் நாயக்கர் காலங்களிலும், தமிழ் மொழியின் பயன்பாடு, முதலில் சற்றுத் தொய்வடைந்தாலும், பின் தன் சிறப்புக்களால், தமிழ் செழிப்படையத் தொடங்கியது. பல்வேறு வகையான சிற்றிலக்கியங்கள், காப்பியங்கள் முதலியன தமிழ்க்கன்னிக்கு அக்காலத்தின் அணிமணிகளாயின.ஆனால், புதிய மறுமலர்ச்சி என்பது, நம் நாட்டில் ஐரோப்பியரின் வருகையாலேயே தோன்றியது என்றால் அது மிகையில்லை. அச்சு இயந்திரத்தின் வரவு, புதிய ஆங்கிலக்கல்வி ஏற்படுத்திய விழிப்புணர்ச்சி, தேசத்தில் தோன்றிய விடுதலை வேட்கை ஆகிய அனைத்தும் ஒன்று சேர்ந்து புதிய வகை இலக்கியங்களுக்கு வழி கோலின. மன்னர்களின் சபையினுள்ளே கட்டுண்டிருந்த தமிழ்க்கன்னி, பாரதி, பாரதிதாசன், திரு.வி.க போன்றவர்களின் முயற்சியால், பாமர மக்களின் பார்வைக்கும் உரியவளானாள். உரைநடை, வசன கவிதை, சிறுகதைகள், புதினங்கள் எனப் பலதரப்பட்ட,புதியவகை இலக்கியங்கள் தோன்றியது மட்டுமின்றி, அச்சு இயந்திரங்களின் உதவியால், அதிக அளவில் மக்களைச் சென்றடைந்தன.இதன் காரணமாக இருபதாம் நூற்றாண்டை, தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சிக் காலம் என்றே கருதுகிறோம்.ஆனால், இன்றைய தினம், தமிழின், தமிழிலக்கிய வளர்ச்சியின் நிலை என்ன? அங்கொன்றும் இங்கொன்றுமாய் நல்ல தரமான புதுக்கவிதைகளும், சிற்சில பத்திரிகைகளும், ஹைகூ என்ற குறுங்கவிதைகளும் கண்ணில் தட்டுப்பட்டாலும், தமிழிலக்கியம் வளர்ச்சி பெறுகிறதா? உலகின் கலைச்செல்வங்கள் யாவற்றையும் தமிழில் கொணரவேண்டும் என்ற மகாகவியின் விருப்பம் நிறைவேறுகிறதா? இது மிகப்பெரிய கேள்விக்குறியே!!!ஓட்டு வங்கிகளைக் குறிவைக்கும் அரசியல்வாதிகளிடமும், மலினமான வார்த்தைகளைப் போட்டு சில திரைப்படப்பாடல்களை எழுதிவிட்டுத் தனக்குத்தானே பட்டங்கள் சூட்டிக்கொள்ளும், கவியரசர்களாகத் தங்களை அறிவித்து மார்தட்டிக்கொள்ளும் சில கவிஞர்(??)களிடமும், அளவில்லாத ஆங்கில வார்த்தைகளைத் தமிழில் எழுதி, அதையே தமிழ்ப் படைப்புகள் என்று கூறும் எழுத்தாளர்களிடமும், தனது தாய்மொழியில் பேசத்தெரியாது என்று பெருமையுடன்(!) கூறிக்கொள்ளும் இன்றைய இளம் தலைமுறையினரிடமும், தமிழா வேறு மொழியா என்று புரியாதவண்ணம் பேசும் தொலைக்காட்சித் தொகுப்பாளிகளிடமும் சிக்கித் திணறும் தமிழ் " எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்காக" , இறந்த காலமாக, "மெல்லத் தமிழினிச் சாகும், அந்த மேற்குமொழிகள் புவிமிசை மேவும்" என்று பேதையின் கூற்றாக பாரதி உரைத்ததை உண்மையாக்கி, மறைந்துவிடுமோ என்ற அச்சம் எழுகிறது.ஆனாலும், அந்த இருளின் இடையேயும் ஒரு மின்னல் ஒளி, ஒரு நம்பிக்கையின் கீற்று தென்படத்தான் செய்கிறது. தமிழகத்தில் வாழும் பலர், தமிழிலக்கியத்திற்குத் தொண்டு செய்ய மறந்தாலும், உலகெங்கிலும் இன்று பரவியுள்ள தமிழ் மக்கள் தமது நாட்டிற்கும் மொழிக்கும் சீரிய பணியாற்றி வருகின்றனர். பல்வேறு இணையத்தளங்கள் பழந்தமிழ் இலக்கியச்செல்வங்களை, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் மகத்தான பெரும்பணியைச் செய்வதோடு, புதிய தலைமுறை இலக்கியங்களுக்கும் வாய்ப்பளிக்கின்றன.அன்றும் இன்றும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள், எத்தனையோ இன்னல்களுக்கு இடையேயும் வீறு மிக்க இலக்கியப் படைப்புகளைப் படைத்து தம் இனத்திற்கும் மொழிக்கும் தொண்டு புரிந்து வருகின்றனர்.பழமைக்கும் பழமையாய், புதுமைக்கும் புதுமையாய் என்றும் தமிழ் நிலைத்திருக்க, புத்தாக்கமும் புதுப்பொலிவும் புதிய வரவுகளும் அவசியமானவை. தமிழ் இலக்கிய மேன்மைக்கு நாம் செய்ய வேண்டுவதும், செய்யக்கூடியதும் என்ன?படைப்பாளிகள், இன்று குறுகிய நோக்கத்தோடு, அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சிகளை, கொள்கை வேறுபாடுகளை முன்னிறுத்தி, ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வதிலேயே முனைப்புடன் இருக்கின்றனர். அதை விடுத்து, குழு மனப்பான்மையுடன், இலக்கிய மேம்பாட்டை, நம் மொழியின் மேம்பாட்டை மனத்தில் கொண்டு, அதே குறிக்கோளாய் படைப்புகளை அணுக வேண்டும். மின்மினிப்பூச்சிகளுக்கும், நெருப்புக்கங்குகளுக்குமான வேறுபாட்டை அறிந்து, தரமிக்க படைப்புகளுக்கு மக்கள் மதிப்பளிக்க வேண்டும். தமிழுக்கு யாரும் சோறு போடவேண்டியதோ, நான்தான் தமிழைக் காப்பாற்றுகிறேன் என்று மார்தட்டிக்கொள்ள வேண்டியதோ இல்லை. வளமும் வண்மையும் உள்ள இம்மொழியை, ஒரு கட்டிற்குள் அடைக்காமல், சுதந்திரமாக வீதியில் ஓட விட்டாலே போதுமானது. தம் தாய்மொழியில் படிப்பதையும் எழுதுவதையும் பெருமையாகக் கருதுவதாலேயே, ஜப்பான் சீன மக்கள் அறிவியல் முன்னேற்றமடைய முடிகிறது. நாமோ, தாய்மொழிக்கல்வியைக் கேவலமாக நினைக்கிறோம். இந்நிலை மாறினால் " மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசும் நிலை மாறி, வெளி நாட்டார் வணக்கம் செய்யும் வண்ணம் திறமான புலமை பெற்று" தமிழும், தமிழிலக்கியங்களும் மென்மேலும் வளர்ச்சி பெறும் என்பது உறுதி.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv