மரணித்துப் போவதையும் விட மனதை வாட்டி வதைக்கும் அவஸ்தையே அகதி வாழ்க்கை-இன்று சர்வதேச அகதிகள் தினம்


மரணித்துப் போவதையும் விட மனதை வாட்டி வதைக்கும் அவஸ்தையே அகதி வாழ்க்கை-சர்வதேச அகதிகள் தினம் 6/20/2009

ஒருவன் அல்லது ஒருத்தி அல்லது ஒரு குடும்பம், தத்தமது சொந்த வீட்டிலிருக்கும் வரை அதிதித்துவமே மாறாக அகக்காரணங்களாலோ புறக் காரணங்களாலோ பலவந்தமாகவோ பலவந்தமற்ற முறையிலோ வெளியேறி விடுமிடத்து அத்தகையோர் அகதிகளே. நிழலின் அருமை வெய்யிலில் தெரியும் என்பதுபோல சொந்த இருப்பிடத்தின் அருமை அகதி முகாம்களில் தெரியாதிருக்க முடியாது. சுமார் 280,000 பேர் அகதிகளாக அல்லலுறுகின்றனர் அகதி முகாம்களிலே. அது ஒரு கட்டுக்கடங்காத எண்ணிக்கை எனில் எவருமே ஏற்றுக் கொள்ள முடியும். அகதிகள் பராமரிப்பானது எத்தகைய திறத்தவரிடமிருந்து கிடைக்கப் பெறினும் கட்டுக்கடங்காதுள்ள தற்போதைய எண்ணிக்கையானது பெருத்த சவால் நிறைந்ததாகும். இத்தகைய எண்ணிக்கையிலான அகதிகளுக்கு இன்பமோ களிப்போ கிஞ்சித்தும் இருக்க முடியாததாயினும் பருகுவதற்கும் கழிப்பதற்கும் உண்டான வசதிகள் கிரமமாக கிட்டக் கூடியதாக இருப்பின் அதுவே அவர்களது நிம்மதிப் பெருமூச்சுக்கு மிக்க ஆறுதலாக அமையும் எனலாம்.


மரணித்துப் போவதையும் விட மனதை வாட்டி வதைக்கும் அவஸ்தையே அகதி வாழ்க்கையாகும். அகதித்துவத்தைப் பற்றி எவராலும் சிறந்த முறையில் ஆறுதல் கூறவும் வியாக்கியானமளிக்கவும் முடியும். ஆனால் அகதிகளோடு அகதிகளாக இருந்து கஷ்டத்தைப் பங்கு போட்டுக் கொள்வது நடவாத காரியமாகும். கடினமான நோய் காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் ஒரு நோயாளியின் மனோபாவமே அகதி முகாம்களில் தங்கியிருக்கக் கூடிய மனிதர்களுக்கும் இருக்கலாம் எனக் கூற முடியாதென்பதல்ல.

எவ்வாறாயினும் சம காலத்தில் அகதிகளாக அல்லல்பட்டுக் கொண்டிருப்போரின் அகதித்துவத்தில் அடக்கு முறையான அம்சத்துவம், பலவந்தத்துவம் போன்றன மறைந்திருப்பதன் நிமித்தம் ராங்கித்தனம் காரணமாக அடங்கியும், முடங்கியும் சீரழிவதை விட தற்கால அகதி வாழ்வு அஹிம்சையையும் அமைதியையும் தமக்களிப்பதாக கூறுகின்ற அகதி முகாம் வாசிகள் இருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் பிரஸ்தாபிக்கின்றன.

வரைவிலக்கணமும் அகதிகளும்

1951 ஆம் ஆண்டில் ஐ.நா. ஸ்தாபனம் அகதிகளுக்கான ஐ.நா. உயர்தஸ்தானிகர் (க்.N.ஏ.இ.கீ) என்ற பதவியை தோற்றுவித்துத் தாபித்த வரைவிலக்கணத்தின்படி இனம், சமயம், தேசியம், அரசியல் வேறுபாடுகள் அல்லது ஒரு சமூகக் குழுவில் அங்கத்துவம் போன்றன காரணமாக பரம்பரை பரம்பரையாக எழக்கூடிய தொடர்ச்சியான தொந்தரவின் நிமித்தம் எழும் ஸ்திரமான அச்சம் காரணமாக ஒருவர் தாம் வாழும் நாட்டை விட்டுப் பிரிய நிர்ப்பந்திக்கப்படின் அந் நபரே ஒரு அகதி எனப்படுகிறது. மேலும் இவ்வரை விலக்கணம் சில சந்தர்ப்பங்களில் யுத்தங்கள் மனித உரிமை மீறல்கள் காரணமாக தத்தமது நாட்டை விட்டு தப்பியோடும் மக்களும் அகதிகளாகவே கணிக்கப்படுவதாக கூறுகிறது. அதேவேளையில் அகக் காரணங்களோ, புறக் காரணங்களோ தத்தமது ஜீவனோபாயத்துக்கு குந்தகமாகவோ உழைத்து உண்பதற்குத் தடையாகவோ சூழ்நிலைகள் காணப்படாதிருக்கையில் தங்களது சொந்த தனிப்பட்ட காரணங்களுக்காக தம்மை அகதிகளாக அறிமுகப்படுத்தியும் அடையாளப்படுத்தியும் செயல்படுகின்றவர்களுமுள்ளனர். அரசியல் மற்றும் அரச சலுகைகளை அந்நியோன்னியமாக அனுபவிக்கும் நோக்கங் கொண்டோரும் இல்லாமலில்லை.

புகலிடம்

தங்களது நாட்டையும் வீடுகளையும் விட்டுத் தப்பிச் செல்கின்ற மக்கள் இன்னுமொரு நாட்டில் பாதுகாப்பு, ஆபத்தின்றி இருத்தல் அல்லது புகலிடம் கோருகின்றனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பிரகடனத்தின்படி அச்சுறுத்தல் காரணமாக பிற நாடுகளில் புகலிடம் கோரி மகிழ்ச்சியாக இருக்கும் உரிமை ஒவ்வொருத்தருக்குமுண்டு எனக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் சகல நாடுகளும் அகதிகளை உள்வாங்கிக் கொண்டு போஷிப்பதை விரும்புவதில்லை. ஏனெனில் சில நாடுகள் குறித்த அகதிகள் காலப் போக்கில் அருமை மிக்க வளங்களுக்காக குடியிருப்பு வாசிகளோடு போட்டி போடலாம், அல்லது அத்தகைய அகதிகளின் பிரசன்னம் இன ரீதியான சமய ரீதியான அல்லது பொருளாதார பிணக்குகளை மோசமாக்கலாம் என்று அகதிகள் தொடர்பில் அச்சப்படுகின்றன. மேலும் சம்பந்தப்பட்ட அகதிகளை தமது நாட்டுக்குள் உள்வாங்கிக் கொள்வதன் மூலம் குறித்த அகதிகள் வெளிக் கிளம்பிய நாட்டுடனான உறவுகளை பாழாக்கிக் கொள்வதை விரும்புவதில்லை.

குடியேற்றத்திற்கான முயற்சி

அகதிகள் இன்னுமொரு நாட்டில் புகலிடம் தேடுகையில், சுகாதார கவனிப்பு உணவு, உறையுள் போன்ற உதவிகள் தேவைப்படுகின்றன. உள்ளூர் மற்றும் சர்வதேச ஸ்தாபனங்கள் இத்தகைய குறித்த உதவிகளைச் செய்கின்றன. இவ்வாறான நிறுவனங்களே அகதிகள் தத்தமது சொந்த நாட்டுக்கு திரும்பக் கூடிய பாதுகாப்பான சூழல் தோன்றும்வரை அகதி முகாம்களில் அகதிகளை தங்க வைக்கின்றன. அவ்வாறு அகதிகள் திரும்பிச் செல்வது அசாத்தியமானதாக தென்படின், குறித்த நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட அகதிகளை இடம்பெயர்ந்து முகாம்களில் வசிப்போரை அவ்விடம்பெயர்ந்த நாட்டில் அல்லது வேறு நாட்டில் மீள் குடியேற்றுவதற்கு முயற்சிக்கின்றன. எவ்வாறாயினும் வருடக் கணக்கில் முகாம்களிலேயே தங்கி காலத்தைக் களிக்கும் சில அகதிகள் இல்லாமலுமில்லை. பல அகதிகளை பொறுத்தவரை பாதுகாப்புக்காக நகர்தல் என்பது துன்பத்துக்கான ஆரம்பமேயன்றி, முடிவல்ல என்று கூறப்படுகிறது. எவ்வாறாயினும் உலகப் பார்வைக்குள் அகதிகளை உள்வாங்குகின்றபோது பொஸ்னியா, கொசோவோ, ஆப்கானிஸ்தான், வியட்நாம், கியூபா, கிழக்கு திமோர், சூடான் டாபூர், குர்திஷ் போன்ற இடங்களின் அகதிகளைப் பற்றியும் எண்ணாதிருக்க முடியாது.

பொஸ்னிய அகதிகள் 1995 ஆம் ஆண்டில் பொஸ்னிய சேபியர்கள் நகரைக் கைப்பற்றிய பிறகு சிறப்றெனிக்கா நகரை விட்டும் பொஸ்னியர்கள் தப்பியோடினர். ஐ.நா. சபையால் நகரம் முஸ்லிம்களுக்கான புகலிடமாக பிரகடனப்படுத்தப்பட்டது. 1990 ஆம் ஆண்டில் யூகோஸ்லாவியா பல்வேறு நாடுகளாக பிளவுபட்ட பிறகு பிராந்தியத்திலிருந்த சேபியர்கள், குரோஷியர்கள், பொஸ்னியர்கள் என பலரும் குரூரமான கொடிய சிவில் யுத்தத்துக்குள் வீழ்ந்தனர்.

கொசோவோ அகதிகள்

1990 களின் பிற்பகுதியில் கொசோவோவில் அல்பேனிய இன கலகக்காரர்களுக்கும் முன்னைய யூகோஸ்லாவிய துருப்பினருக்கும் இடையே மூண்ட சண்டை கொசோவோவிலிருந்து தத்தமது வீடுகளை விட்டு எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட அல்பேனிய இனத்தவர்களை தப்பியோடச் செய்தது. இவ்வாறு லட்சக்கணக்கான அல்பேனிய அகதிகளின் வருகை மெசிடோனிய யூகோஸ்லாவிய குடியரசின் பெரும்பான்மையினருக்கும் அல்பேனிய சிறுபான்மையினருக்கும் இடையில் பதற்றத்தைப் பெருகச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் அகதி முகாம்

பாகிஸ்தான் ஜல்லோசாயில் இருந்த ஆப்கான் அகதி முகாம் 1980 களின் ஆரம்பத்தில் யுத்தத்தினால் சின்னாபின்னமான ஆப்கானிஸ்தானை விட்டுத் தப்பி வந்த லட்சக்கணக்கான அகதிகளை தங்க வைக்க பாகிஸ்தானில் நிறுவப்பட்ட பல அகதி முகாம்களில் ஒன்றாகும். அக்காலப் பகுதியில் அநேகமான ஆப்கானியர்கள் ஈரானில் இருந்த முகாம்களுக்கு தப்பியோடினர் அல்லது ஆப்கானிஸ்தானுக்குள்ளேயே இடம்பெயர்ந்தனர்.

வியட்நாம் படகு

1975 ஆம் ஆண்டில் வியட்நாமிய போரைத் தொடர்ந்து ஐந்து லட்த்துக்கும் அதிகமான அகதிகள் படகுகளில் வியட்நாமை விட்டும் தப்பியோடினர். பாதுகாப்பற்ற படகுகளில் குவிக்கப்பட்ட நிலையில் அகதிகள் அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்தகைய படகுகளில் சென்றவர்கள் பஞ்சம், கடற்கொள்ளை போன்றவற்றை சகித்துக் கொள்ள நேரிட்டது. உயர் கடல் பிரதேசத்தில், பயணித்தவர்களில் பலர் 10 முதல் 15 வீதமானோர் வரையில் உயிரிழக்க நேர்ந்தமையையும் சுட்டிக் காட்டாதிருக்க முடியாது.

கியூப அகதிகள்

1980 களின் பிற்பகுதியில் ஐரோப்பாவின் கியூப கொம்மியூனிச தோழமைகளின் வீழ்ச்சியையடுத்து கியூப பொருளாதாரம் சீர்குலையத் தொடங்கியது. அமெரிக்காவுக்குள் போய்ச் சேர முயற்சித்த அகதிகளின் எண்ணிக்கை 1990 களின் ஆரம்பத்தில் கணிசமானளவுக்கு பெருக்கமடைந்தது. 1995 இல் அன்றைய ஜனாதிபதியாகவிருந்த அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான கியூப அகதிகள் மாத்திரமே உள்ளீர்க்கப்படுவர் என பிரகடனப்படுத்தினார்.

கிழக்குத் தீமோர் அகதிகள்

1999 ஆகஸ்டில் இந்தோனேசியாவிலிருந்து பிரிவதற்கான சுதந்திரத்துக்கான கிழக்குத் தீமோர் வாக்கெடுப்பைப் தொடர்ந்து வெடித்த வன்செயல் காலப் பகுதியில் மேற்குத் தீமோரில் அமைந்திருந்த அகதி முகாம்களுக்கு ஆயிரக்கணக்கான கிழக்கு தீமோரியர்கள் தப்பியோடினர். எண்ணிக்கையை அறிந்து கொள்ள முடியாத கிழக்குத் தீமோரியர்கள் காணாமல் போயினர். அல்லது சுதந்திரப் போராட்ட நகர்வை எதிர்த்த இராணுவ படையினரால் கொல்லப்பட்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

குர்திஷ் டாபூர் அகதிகள்

1991 களின் ஆரம்பத்தில் வளைகுடா யுத்தத்தில் தோல்வி கண்ட பிறகு ஈராக் அந்த நாட்டின் ஷியா முஸ்லிம்கள் குர்திஷ் சிறுபான்மையினர் மீது நடந்த விதம் காரணமாக அத்தகைய மக்கள் துருக்கி மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் புகலிடம் தேடினர். 2003 இல் மேற்கு சூடான் பிராந்தியமான டாபூரில் சிவில் யுத்தம் வெடித்தது. அப்போதிருந்து இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வட டாபூர் பிரதேசமான ஸம்ஸம் இல் இருந்த அகதி முகாம்களில் உறையுள்தேடி தத்தமது இருப்பிடங்களை விட்டு தப்பியோடினர். இவ் யுத்தம் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான உயிர்களை காவு கொண்டதாக கூறப்பட்டது.

உள்நாட்டில் இடம்பெயரும் அகதிகள்

சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் கரையோர எல்லைகளை தட்டாத வகையில் அச்சுறுத்தல்கள் காரணமாக தத்தமது பாதுகாப்புக்காக தத்தமது இல்லங்களை விட்டு தப்பியோடுவோர் உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்த ஆட்கள் எனப்படுகிறது. இயற்கையான அல்லது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பேராபத்துகள், மனித உரிமைகள், துஷ்பிரயோகம், பொதுமைப்படுத்தப்பட்ட வன்செயல், ஆயுதப் போராட்டம் போன்றவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக தங்களது வீடுகளை விட்டு தப்பிச் செல்ல நிர்ப்பந்திக்கப்படும் தனி நபர்கள் அல்லது குழுவினர் இத்தகைய இலங்கையைப் பொறுத்தளவில் பெரும்பான்மையான இலங்கை அகதிகள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலேயே இருப்பதாக கூறப்படுகின்றது. 2004 இல் தோன்றிய சுனாமி இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தேõரின் சனத் தொகையை தத்ரூபமான முறையில் பெருகச் செய்தது. இலங்கையின் வடக்கு கிழக்கில் இலங்கையின் ஆயுதப் படையினருக்கும் புலிகளுக்கும் இடையே ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்று வந்த மோதல்கள் கணிசமானளவுக்கு பிணக்குகள் நிறைந்த பிரதேசத்தில் இடம்பெயர்ந்தோரை தோற்றுவித்தது. அந்த வகையில் சமீபத்திய பயங்கரவாத ஒழிப்பு போராட்டமும் சொந்த நாட்டுக்குள்ளேயே மிகக் குறுகிய காலத்துக்குள் சுமார் இரண்டு லட்சத்து எண்பதாயிரம் பேர் வரையான அகதிகளை முகாம்களுக்குள்ளேயே முடக்கி வைத்துள்ளது.

நன்றி -வீரகேசரி நாளேடு

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv