தமிழரின் தத்துவ மரபு பற்றிய ஓர் ஆய்வு

தமிழரின் தத்துவ மரபு பற்றிய ஓர் ஆய்வு
எல்.ஜி. கீதானந்தன்


தமிழரின் தத்துவ மரபு பகுதி 1, பகுதி 2, அருணன்,
வசந்தம் வெளியீட்டகம், மதுரை 1,

தமிழ் இலக்கிய வரலாற்றை இயங்கியல் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் அணுகி செழுமைப் படுத்தியவர்கள் மிகச் சிலரேயாவார். அவர்களில் யானறிந்தவரை மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள், கலை இலக்கிய பெருமன்றத்தைத் துவக்கிய ப. ஜீவானந்தம், ஆர்.கே. கண்ணன், எஸ். ராமகிருஷ்ணன், தொ.மு.சி. ரகுநாதன், பேராசிரியர் ந. வானமாமலை, கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம், பொன்னிலன், தோத்தாத்ரி, பூங்குன்றன், மே.து.ராசுகுமார், அ. மார்க்ஸ், இன்குலாப், ஜீவபாரதி, புவியரசு, முப்பால் மணி, எஸ்.வி. ராஜதுரை, கோவை ஞானி, புலவர் ஆதி, ந.முத்து மோகன், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை வழி நடத்திய கே. முத்தையா, மதுரை பேராசிரியர் அருணன், எஸ்.ஏ. பெருமாள் மற்றும் கோ. கேசவன், ஈழத்தைச் சேர்ந்த பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் க. சிவத்தம்பி ஆகியோராவர். இதில் சிலருடைய பெயர்கள் மறதியால் அல்லது அறியாமை-யால் விடுபட்டிருக்கக் கூடும்.

தமிழகத்தில் சமணம், பௌத்தம் முதலியவற்றின் தாக்கத்தை விளக்கிய நூலிலும், தமிழர் பண்பாடும் தத்துவமும் என்ற நூலிலும், மார்க்சிய தத்துவம் பற்றி விளக்கிய நூலிலும் பேராசிரியர் ந. வானமாமலை அவர்கள் தமிழ் இலக்கியத்தை விரிவாக ஆய்ந்துள்-ளார். அவருடைய ஆராய்ச்சி வட்டம் மிகப்பெரிய பங்களிப்பினைச் செய்தது. மணிமேகலை, நீலகேசி, சிவஞானசித்தியார் போன்றவற்றை எடுத்துக்காட்டி, தமிழகத்தில் பொருள்முதல் வாதக் கருத்துகள் நிலவியதை நிறுவியுள்ளார்.

‘தமிழரின் தத்துவ மரபு’ பற்றி இரண்டு பாகங்களாக நூல்களை எழுதி, மதுரை பேராசிரியர் அருணன் அவர்கள் வெளியிட்டுள்ளார். தமிழ்ச் சமுதாயம் இலக்கிய வரலாற்றின் வழியே தமிழரின் தத்துவ மரபை அறிந்திட இந்த நூல் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.

‘சங்க இலக்கியம், என்பது எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். சங்க இலக்கியம் கி.மு. 300 முதல் கி.பி. 200 வரை, ஏறத்தாழ 500 ஆண்டுகால வரலாற்றை உடையது. அதில் தமிழரின் ஆதிமரபு வேதமரபு, வேத மறுப்பு மரபு ஆகியன அடங்கியுள்ளன என ஆசிரியர் குறிப்பிட்-டுள்ளார்.

இயற்கையைக் கடவுளாகவோ, ஆன்மாகவோ, அன்றைய புலவர்கள் காணவில்லை. அந்நிலைதான் தமிழரின் ஆதிமரபாக இருந்துள்ளது. பற்றாக்குறையி-னால், குறுநில மக்களிடையே போர்கள் நிகழ்ந்-துள்ளன. இதனால் வீரம் சிறப்பிக்கப்பட்டது. பழம்பொருள் தந்ததல்ல உயிர். உணவு என்னும் புறப்பொருள் தந்ததே உயிர். வறட்சி போக்க வேள்வி தேவையில்லை. நீர்நிலை பெருகச் செய்ய வேண்டு-மென்றனர். வீடுபேறு, புரோகிதப் புரட்டு ஆகியவை ஆதிமரபில் இல்லை பிறப்பும், இறப்பும் உண்மை என்றனர். மறுபிறவி என்ற ஏமாற்றுவேலை இல்லை. புகழ் ஒன்றே மரணமில்லா பெருவாழ்வினை வழங்கும் எனப் போற்றினர். தனக்கெனவன்றி பிறர்கென வாழ்ந்த பெருந்தகமை பாராட்டப் பெற்றது. வர்ணத்-திற்கொரு நீதி ஆதி மரபில் இல்லை, இன்பமும், துன்பமுடையது வாழ்க்கை என்பதையுணர்ந்து இன்பத்தை நாடி வாழ்ந்தனர்.

மேற்கண்ட கருத்துகளை புறநானூற்றில் மாங்குடி கிழார், குட புலவியனார், பொன்முடியார், மாங்குடி மருதனார், காவிட்டனார், பக்குடுக்கை நன்கணியார், நரிவெருத்தலையார், ஐயாதி விறு வெண்டேரையார் போன்ற புலவர்களின் பாடல்களை மேற்கோள்காட்டி ஆசிரியர் நிறுவியுள்ளார். சங்க காலத்தின் ஒரு கட்டத்தில் வேத மரபு வடபுறத்திலிருந்து தமிழகத்தில் நுழைந்து விடுகிறது. வேள்வி முற்றிய வாய்வேள் வேந்தே என்ற தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியனைப் போற்றிப் பாடும் பாடல் தமிழகத்தில் வேள்வி நுழைந்து விட்டதை குறிப்பிடுகிறது. தொல்காப்பியம், மொழி இலக்கண நூல் மட்டுமன்று வாழ்விலக்கண நூலுமாகும். அதில் வர்ணதர்மம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வேதக் கடவுளாகிய வருணன் நுழைந்துவிட்ட காட்சியைக் காண்கிறோம். இப்படி ஏராளமான பாடல்களை மேற்கோளாக எடுத்துக்காட்டி சங்க காலத்தின் நடுப்பகுதியில் வேதமரபு புகுந்துவிட்டதை ஆசிரியர் எடுத்துக்காட்டு-கிறார். அதன் தொடர்ச்சியாக, வேத மறுப்பு மரபும் தோன்றி விடுகிறது. இந்த உலகம் சடப்பொருளாலான மூலப்பிரகிருதியிலிருந்து பிறந்தது என்றும், ஒன்றிலிருந்து பலவாக மாறுவது அதன் குணமென்-றும் விளக்கிடும் கடவுள் மறுப்புக் கொள்கையான சாங்கியம் தலையெடுத்தது. சாங்கியத்தின் மூலவர் கபிலர் என்றும், அவர் எழுதிய நூல் சாங்கியப் பிரவசன சூத்திரம் என்றும் ஆசிரியர் எடுத்துக்காட்டி-யுள்ளார். வேத மறுப்பைக் கொண்டிருந்த மூலவர் கணநாதர் உருவாக்கிய வைசேடிக மரபும் தமிழகத்தில் இருந்துள்ளது. நாம் பெற்றிருக்கிற அறிவு சரியானது-தானா? சரியான அறிவைப் பெறும் வழி எது? என்பதை ஆராய்கிற நியாயம் என்ற தத்துவப் பிரிவும் மூலவர் கோதமரைக் கொண்டு தேவ மறுப்பாக இயங்கியுள்ளது. சங்க காலத்திலேயே வேதமறுப்பின் ஆதி வடிவங்களாக சாங்கியம், வைசேடிகம், நியாயம், ஆகியப் பிரிவுகள் இருந்துள்ளன.

சீத்தலைச்சாத்தனார் எழுதிய மணிமேகலையில் சமயக் கணக்கர், தம் திறம் கேட்ட காதை என்ற பகுதி உள்ளது. அதில் தமிழகத்தில், அக்காலத்தில் நிலவிய தத்துவ வாத பிரிவுகள் எடுத்துக் காட்டப்-பட்டுள்ளன. அவையாவன:_

1. அளவை வாதி, 2. சைவ வாதி, 3. பிரம்ம வாதி, 4. வைணவ வாதி, 5. வேத வாதி, 6. ஆசீவக வாதி,

7. நிகண்ட வாதி, 8. சாங்கிய வாதி, 9. வைசேடிக வாதி, 10. பூதவாதி (பொருள்முதல்வாதி)

‘நீலகேசி’ என்ற சமய காப்பியத்தில், நீலகேசி சந்தித்து வாதிட்ட சமய வாதங்கள் பற்றி குறிப்பிடப்-பட்டுள்ளது. அவையாவன: 1. புத்த வாதம், 2. ஆசீவக வாதம், 3. சாங்கிய வாதம், 4. வைசேடிக வாதம், 5. வேத வாதம், 6. பூதவாதம்.

சங்க காலத்திற்குப்பின், வேத மறுப்பில் மிகப் பிரதானமான, மூன்று எதிர்ப்புத் தளங்கள் இருந்துள்-ளன. வேதத்தை மறுத்த முதல் பிரிவு ‘உலகாயதம்’ என்று அழைக்கப்படுகின்ற, ஆரம்ப கால முதல்வாத சிந்தனையாகும். இதன் ஆரம்ப கர்த்தா, பிரகஸ்பதி என்று கூறப்பட்டாலும், அவரது நூல்கள் கிடைக்க-வில்லை. அவரது கருத்துகள், தமிழகத்திலும் நிலவின என்பதை நீலகேசியும், மணிமேகலையும் எடுத்துக்-காட்டுகின்றன. அத்வைத சங்கரரும், துவைத மத்துவரும், ‘பிரகஸ்பதியின்’ கருத்துகளை தாக்கி எழுதியதிலிருந்து அவரது கருத்துகளை தெரிந்து கொள்கிறோம் என ஆசிரியர் விளக்கியுள்ளார்.

வேதமறுப்பில் இரண்டாவதாக திகழ்ந்தது சமண மதமாகும். அது துறவு நிலையை பெரிதும் போற்றிய-தாலும், வட மொழியை உயர்த்திப் பிடித்ததாலும், வீழ்ச்சியடைந்தது என ஆய்வாளர்கள் குறிப்பிடு-கின்றனர். ஆனால் சமணம், தமிழுக்கு மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளது. பரமாத்மா, கடவுள், ஆகியவற்றை சமணம் பேசவில்லை. மறு பிறப்பை வலியுறுத்தியது. சமணத்தின் போதனைகளைப் பற்றி இந்நூலில் பேராசிரியர் அருணன், விரிவாக ஆராய்ந்-துள்ளார். ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி, ஆகியன சமண மத சார்புடையவை. மணிமேகலையும், குண்டலகேசியும் புத்த மத சார்புடையவை. சிறுகாப்பியங்களான உதயணகுமாரகாவியம், நாக குமார காவியம், யசோதர காவியம், சூடாமணி, நீலகேசி, ஆகிய ஐந்தும் சமணக் காப்பியங்களே.

‘திருக்குறள்’ இன்று பொதுமறையாக தமிழகத்தில் வர்ணிக்கப்படுகிறது. ஆனால், திருக்குறளில் மையக்-கருத்து சமணசமயக் கருத்துகளே என்பதே ஆசிரியர் அருணன் தெளிவுபட விளக்கியுள்ளார். திருக்குறளின் முதல் பத்துப் பாக்களுக்கு கடவுள் வாழ்த்து என்று தலைப்பு கொடுத்துள்ளார். ஆதி பகவன் என்பது 24 தீர்தங்கரர்களில் முதல்வராகிய ரிஷப தேவரே என ஆராய்ச்சியாளர் ஸ்ரீபால் குறிப்பிட்டுள்ளார். தமிழில் ரிஷப தேவர் என்பதை முருகப் பெருமான் என்று அழைத்தனர். சிலப்பதிகாரத்திலும், இதனைக் காணலாம். ‘இரு வினையும் சேரா இறைவன்’, என்பது முருகப் பெருமானையே குறிக்கிறது. வினைகளி-லிருந்து விடுபடுவதே சமண இலக்கு. எண் குணத்-தான், என்றால் சமணம் குறிப்பிடும் எட்டு குணங்களேயாகும். அவையாவன: 1. அனந்த ஞானம், 2. அனந்த வீரியம், 3. அனந்த தரிசனம், 4. அனந்த சுகம், 5. நிர்ந்தாமம், 6. நிர்கோத்திரம், 7. நிராயுஷ்யம், 8. அழியா இயல்பு ஆகியன.

மூன்றாவதாக வேத மறுப்பில் முன்னின்றது புத்தமாகும். சாதி மறுப்பு வேள்வி மறுப்பு, புலால் மறுப்பு என அடிப்படையில் வேதாந்த மதமான ஆரிய மதத்தை பூண்டோடு எதிர்த்தவர் புத்தர். சமஸ்கிருதத்தை மறுத்து பாலிமொழியை முன்னிறுத்-தினார். புத்தருடைய கருத்துகளும் தமிழகத்தில் பரவியுள்ளன. அதற்கு நம் தமிழ் காவியங்களே சான்றாக உள்ளன.

ஆரம்பத்தில் சாங்கியம், வைசேடியம் நியாயம் முதலியவை வேத மறுப்பாக விளங்கியதைப் பார்த்தோம். அதன் பின்னர் உலகாயுதம், சமணம், புத்தம் முதலியன வேத மறுப்பில் முன்னின்றன. இதனைத் தொடர்ந்து வேத மரபு மீண்டும் தமிழகத்-தில் மன்னர்களின் ஆதரவோடு தலையெடுக்கத் துவங்கியது. திருநாவுக்கரசர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகரின், சைவம் வேதமரபில் கலந்தது. சைவ சித்தாந்தத்தை வரையறுத்தவர் மெய்கண்ட தேவர். அவர் ‘சிவஞானபோதம்’ எழுதினார். அவரது மாணவர் அருணந்தி சிவாச்சாரியார், ‘சிவஞான-சித்தியார்’ என்ற நூலை எழுதினார். இதுவன்றி திருமூலரின் திருமந்திரம் தனியாக உள்ளது. இதனை சைவ சித்தாந்த நூல் வரிசையில் சேர்க்கவில்லை. ஆனால், ஒட்டுமொத்த சைவ நெறி வேதங்களின் ஆளுமைக்கு உட்படலாயிற்று.

அடுத்து, திருமாலின் புகழ்பாடும் வைணவம் வேதங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஆழ்வார்களின் நாலாயிர திவ்ய பிரபந்தம், திருவந்தாதி திருமொழி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

வேத மரபின் உச்சத்தில் நின்று கொடி கட்டிப் பறந்தது சங்கரரின் அத்வைதமாகும். பிரம்ம சூத்திரத்-திற்கு விளக்கமாக சங்கரர் எழுதியது சர்வ சித்தாந்த சங்கிரகம், வேத மரபில் பிறந்த பிரிதொரு தத்துவம் ‘விசிஸ்டாத்வைதம்’ உலகம் பிரம்மனின் உடல், பரம்பொருளே ஆத்மாவை உருவாக்கியவர் என்ற கருத்தோடு வலம் வந்த இக்கருத்தை உருவாக்கியவர் இராமானுஜர்.

அடுத்து வேத மரபின் மற்றொரு தத்துவப் பிரிவு துவைதம் எனப்படும் இருமைவாதமாகும். பிரம்மம் வேறு. தனி மனித ஆன்மா வேறு என்றார் இவர். சங்கரர், ராமானுஜர், மத்துவரது கருத்துகள் தமிழக சனாதனிகளிடையே மிகவும் பிரசித்தமாக விளங்கின.

மதவாதிகளின் போக்கினால் மனம் வெறுத்து உருவான சித்தர்களின் மரபும், தமிழகத்தில் சிறப்பாக அமைந்துள்ளது. சித்தர் பாடல்களில் அவர்களது கருத்துகளைக் காணலாம். ‘பதினெண் சித்தர்கள் ஞானக்கோவை’ உள்ளது. சிவவாக்கியர், பட்டினத்தார் பாடல்களுமுள்ளன.

சமய சீர்திருத்த மரபில் தாயுமானவர், குன்றக்குடி அடிகளார், வைகுண்ட சாமிகள் குறிப்பிடத்தக்க-வர்கள். வள்ளலார் வேத மரபை எதிர்த்தார். சாதி, மதப்பேய்பிடியாதிருக்க வேண்டுமென்றார்.

இஸ்லாமிய, கிருத்துவ மரபுகளின் தோற்றம் அவை தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கமும் இந்நூலில் தனித்தனியே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

பெருங்கோவில்களில் நாடார் இன மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் அனுமதிக்கப்படவில்லை. கிராமங்களில் அவர்கள் வழிபட்ட நாட்டார் தெய்வ மரபும் விரிவாக இந்நூலில் எடுத்துக்காட்டப்பட்-டுள்ளது. தமிழகம் முழுவதும் மாரியம்மன், காளியம்மன், எல்லையம்மன் வழிபாடு உண்டு. மதுரை முனியாண்டி, மதுரை வீரன், காத்தவராயன், முத்துப்பட்டன் முதலிய தனிச்சாமிகளும் உண்டு. தென்மாவட்டங்களில் அம்மன்கள், மாடன்கள் கருப்புகள் என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

விவேகானந்தர், ரமணமகரிஷி, ஜே. கிருஷ்ண-மூர்த்தி, ஓஷோ போன்றோருடைய தாக்கங்களும் இந்நூலில் சித்திரிக்கப்பட்டுள்ளன.

இறுதியாக, தமிழகத்தில் பெரியாருடைய பகுத்தறிவு இயக்கமும், மார்க்சியத்தை அடிப்படை-யாகக் கொண்ட பொதுவுடமை இயக்கமும் ஆற்றியுள்ள பங்களிப்புகளும் எடுத்துரைக்கப்பட்-டுள்ளன. தமிழரின் தத்துவ மரபு பற்றி விரிவான ஆய்வு மேலும் தொடர வேண்டும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv